விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் :பாடச்சுருக்கம் | 12th Zoology : Chapter 10 : Applications of biotechnology
பாடச்சுருக்கம்
உயிரிய தொழில் நுட்பவியல் என்பது உயிரினக் கட்டமைப்பு, உயிரினங்கள் உயிரிவிளை பொருட்கள் ஆகியனவற்றில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான விளைபொருட்கள் அல்லது செயல்களில் மாற்றங்களை உருவாக்குவது ஆகும். உறங்கேரிய வேளாண் பொறியாளர் கார்ல் எரிகி 1919 ஆம் ஆண்டு உயிரி தொழில் நுட்பவியல் என்ற சொல்லை உருவாக்கினார். உயிரிதொழில் நுட்பவியல் மரபுப்பொறியியல் மற்றும் வேதிப் பொறியியல் எனும் இரு பெரும் தொழில் நுட்பவியலை உள்ளடக்கியதாகும்.
உயிரிய தொழில்நுட்பவியல், உடல்நலம் (மருத்துவம்), வேளாண்மை, தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய நான்கு பெரும் துறைகளில் பயன்படுகின்றது. உயிரி தொழில் நுட்பவியலின் தொழில்நுட்பங்கள் மருத்துவத் துறையில் பல்வேறு நோய்களை கண்டறிதல், வருமுன் காத்தல் மற்றம் சிகிச்சை அளித்தலில் பயன்படுகின்றது. மறுசேர்க்கை ஹார்மோன்கள் மற்றும் மறுசேர்க்கை இன்டர்ஃபெரான்கள் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பயன்படுகின்றது. மறுசேர்க்கை தடுப்பூசிகள் பல்வேறு நோய்கள் வருமுன் தடைசெய்ய பயன்பட்டு வருகின்றது. மறுசேர்க்கை தடுப்பூசிகள் துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள், வலுவிழக்கப்பட்ட வகை மறுசேர்க்கை தடுப்பூசிகள் மற்றும் மரபணு மறுசேர்க்கை தடுப்பூசிகள் என மூன்று வகைப்படும். மரபுக் குறைபாடுகளை மரபணு சிகிச்சை எனும் செயல்முறை மூலம் சரிசெய்யலாம். மரபணுசிகிச்சை உடல் செல்வகை மரபணு சிகிச்சை மற்றும் கருச்செல் வகை மரபணு சிகிச்சை என இருவகைப்படும். பலசெல் உயிரிகளில் காணப்படும் மாறுபாடு அடையாத செல்கள் தண்டு செல்கள் எனப்படும். தண்டு செல்கள், கரு தண்டு செல்கள் மற்றும் முதிர்ந்த தண்டு செல்கள் என இருவகைப்படும். பழுதுபட்ட டி.என்.ஏ அல்லது நோயுற்ற உறுப்புகளை மீளுருவாக்கம் செல்ல தண்டு செல்கள் பயன்படுகின்றன. DNA மறுசேர்க்கை தொழில் நுட்பம், பாலிமரேஸ் சங்கிலி வினை மற்றும் எலீசா போன்ற தொழில் நுட்பங்கள் நோய்களை ஆரம்பநிலையில் கண்டறிய உதவும் நம்பகமான தொழில் நுட்பங்களாகும்.
டிரான்ஸ்ஜெனிசிஸ் (மரபணு மாற்றம்) என்பது அயல் டி.என்.ஏ வை விலங்கு மரபணு தொகுப்பில் செலுத்தி நிலையான, மரபு வழி கடத்தக்கூடிய, பண்புகளை உருவாக்கி, தக்க வைத்தல் நிகழ்வாகும்.
உயிரிய விளைபொருட்கள் என்பது உயிரிகளிலிருந்து பெறப்பட்டு நோய்களை வருமுன் காப்பதற்கும், சிகிச்சைக்கும் பயன்படும் பொருட்களாகும்.
நகலாக்கம் என்பது மரபொத்த உயிரிகளை இயற்கை அல்லது செயற்கை முறையில் உருவாக்குவது ஆகும்.
உயிரி தொழில்நுட்பவியல் பயன்களின் மேம்பாடு, எதிர்விளைவுகள், அறநெறிமுறை பிரச்சனைகள் மற்றும் அக்கறைகளுடன் பெரும்பாலும் தொடர்புடையது. உயிரிதொழில் நுட்பவியல் செயல்பாடுகள் மற்றும் உற்பத்திப் பொருட்களைக் கண்காணிக்க சட்டப்படியான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நிலைத்த வேளாண் துறை தொடர் முன்னேற்றம், வனத்துறை, நீர் உயிரி வளர்ப்பு, உயிரிய தீர்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய துறைகளில் நேர்மறைப் பங்காற்றுகின்றது. மறுசேர்க்கை டி.என்.ஏ கையாளுதலுக்காக பல்வேறு நாடுகளால் உயிரிய பாதுகாப்பு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.