Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : வினா விடை | 12th Zoology : Chapter 10 : Applications of biotechnology

   Posted On :  13.04.2022 10:46 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 10 : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்

உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : வினா விடை

விலங்கியல் : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய, விரிவான வினா விடை

மதிப்பீடு

புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய் 

அ)  AIDS 

ஆ) புற்றுநோய் 

இ) நீர்மத் திசு அழற்சி 

ஈ) SCID

விடை : ஈ) SCID 


2. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் 

அ) ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்

ஆ) இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம் 

இ) உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம் 

ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்

விடை: ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம் 


3. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு

அ) நொதி இடமாற்ற சிகிச்சை 

ஆ) ADA cDNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்களை கால இடைவெளியில் உட்செலுத்துதல் 

இ) அடினோசின் டி அமினேஸ் தூண்டிகளை அளித்தல் 

ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்

விடை: ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல் 


4. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன. 

அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள் 

ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள் 

இ) A சங்கிலியில் 20 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள் 

ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20 அமினோ அமிலங்கள்

விடை: ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள் 


5. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை 

அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி 

ஆ) உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு 

இ) இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு 

ஈ) செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு

விடை: அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி 


6. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ. பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும். 

அ) உள்நுழைத்த டி.என்.ஏ வை பெற்றுக் கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது 

ஆ) இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது. 

இ) இது வைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது. 

ஈ) உயர் வெப்பநிலையிலும் செயல்படுகின்றது. 

விடை: ஈ) உயர் வெப்பநிலையிலும் செயல்படுகின்றது


7. ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.

அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய 

ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய 

இ) விரும்பத்தக்க பண்புகளையுடைய விலங்குகளைத் தேர்வு செய்ய 

ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய

விடை: ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய 


8. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது. 

அ) சில செல்களில் அயல் டி.என்.ஏ

ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ 

இ) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ

ஈ) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ

விடை: ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ 


9. மறுசேர்க்கை காரணி VIII சீனா ஆம்ஸ்ட ரின் ------ செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன. 

அ) கல்லீரல் செல்கள் 

ஆ) அண்டக செல்கள் 

இ) இரத்த செல்கள் 

ஈ) மூளை செல்கள்

விடை: ஆ) அண்டக செல்கள் 


10. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்? 

அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள் 

ஆ) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள் 

இ) டி.என்.ஏ தடுப்பூசிகள்

ஈ) வழக்கமான தடுப்பூசிகள்

விடை: அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள் 


11. PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது? PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது? 

* PCRன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன. அவையாவன முன்னோக்கு மற்றும் பின்னோக்கு முன்னோடிகள். 

PCRல் டி.என்.ஏ பாலிமரேஸின் பங்கு: 

 * PCRல் முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு Tag டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி புதிய டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது. 

டி.என்.ஏ பாலிமரேஸ் நொதியின் மூலம்:

* கொதிநிலையில் வாழும் பாக்டீரியா தெர்மசு அக்குவாட்டிக்கசில் இருந்து பெறப்படுகிறது. 


12. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது? 

* இது இயல்புதிரிபு, உற்பத்தி, நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. 

* அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ.வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95°C வெப்ப நிலையில் நடைபெறுகிறது. 

* முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75°C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது. 

* இதனால் Tag டி.என்.ஏ. பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ.விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது. 

* அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும். 

* இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும். 


13. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது? 

* டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப் பொருள் இன்சுலின் ஆகும். 

* 1982ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.  

* 1986ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது. 


14. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.

*  1997ல் முதன் முதலில் ரோஸி எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்டது. 

* இப்பசுவின் பால், மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக்க பாலாகக் காணப்பட்டது. 

* சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்த இப்பசும்பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு எற்ற உணவூட்டம் மிக்க ஒரு சரிவிகித உணவாகும். 


15. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன? 

* முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது. 

* விலங்கு இச்சுலினுக்கும் மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்ததால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது. 


16. ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா? 

* ஆம், எலைசா (ELISA) தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை கண்டறியலாம். 

* எலைசா தொழில்நுட்பத்தில் நோயாளிகளின் உடலில் உள்ள சீரத்தில் ஃபினைல்கீட்டோனூரியாவின் எதிப்ப்பொருள் அளவைத் தீர்மானித்து குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகளை கண்டறிந்து நோயினை கண்டறிய முடிகிறது. 


17. ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப்பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். 

* ஜீன் சிகிச்சை முறை, நொதி மாற்று சிகிச்சை முறையை விட சிறந்தது. 

* ஏனெனில், ஜீன் சிகிச்சை முறையில் ஒரு மரபணுத் திடீர் மாற்றத்தால் ஏற்படும் மரபியல் நோய்களை நிரந்தரமாக குணப்படுத்த உதவுகிறது. 

* ஆனால் நொதி மாற்று சிகிச்சை முறையானது தாற்காலிகமாக நோயினை மேலாண்மை மட்டுமே செய்கின்றது. எனவே இவற்றின் நன்மை குறுகிய காலம் மட்டுமே ஆகும். 


18. மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக. 

* உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய மிகைப்படியான டி.என்.ஏக்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கும் முறைக்கு மரபணு மாற்றம் என்றும், இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

* எ.கா. சுண்டெலி, எலி, முயல், பன்றி, பசு, வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் மீன்.


19. ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டுருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனை உதவு புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்? 

* ஆம். ஏனெனில் ELISA என்பது HIV நோய்வைரஸினைக் கண்டறிய உதவும் முதல் படிநிலை முறையாகும். 

* நோயூக்கிக்கான HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப்பொருளின் அளவை வைத்து கண்டறியப்படுகிறது. 


20. ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்.

ADA குறைபாட்டினை கீழ்க்கண்ட முறை மூலம் சரி செய்யலாம். 

* எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

* மரபணு சிகிச்சை 

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை: 

* சில குழந்தைகளில், ADA குறைபாட்டை எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். 

* இதில் குறைபாடுடைய நோய்த்தடை செல்களை கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நலமான நோய்த்தடை செல்களைக் கொண்டு பதிவீடு செய்யப்படுகிறது. 

* சில நோயாளிகளில், நொதி பதிலீட்டு சிகிச்சை முறையாக செயல்நிலை ADA நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது. 

மரபணு சிகிச்சை : 

* மரபணு சிகிச்சையின் போது நோயாளியின் இரத்தத்திலிருந்து லிம்ஃபோசைட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு ஊட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. ADA நொதி உற்பத்திக்குக் குறியீடு செய்யும் நலமான, செயல்நிலை மனித மரபணுவான ADA, cDNA வை ரெட்ரோ வைரஸ் கடத்தியின் உதவியுடன் லிம்போசைட்டுகளுக்குள் செலுத்தப்படுகிறது. 

* இவ்வாறு மரபுப்பொறியியல் செய்யப்பட்ட லிம்ஃபோசைட்டுகள் மீண்டும் நோயாளியின் உடலினுள் செலுத்தப்படுகிறது. 

* இவை. சில காலமே உயிர் வாழ்வதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரபுப் பொறியியல் செய்யப்பட்ட லிம்போசைட்டுகளை மீண்டும் மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டும். 

* எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ADA மரபணுக்களை ஆரம்பகட்ட கருநிலை செல்களுக்குள் செலுத்துவதன் மூலம் இந்நோயை நிரந்தரமாக குணப்படுத்த இயலும். 


21. டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?

* எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவை டி.என்.ஏ தடுப்பூசி கொண்டுள்ளது. 

* இந்த மரபணுவை பிளாஸ்மிட்டுக்குள் செலுத்தி பின்னர் ஒரு இலக்கு விலங்கின் உடல் செல்களுக்குள் ஒன்றிணையச் செய்யப்படுகிறது. 

* உள்ளே சென்ற அந்த டி.என்.ஏ எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க செல்களுக்கு உத்தரவிடுகிறது. அவ்விதம் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகள் செல்களுக்கு வெளியே காணப்படுகின்றன. 

* செல்களால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான மிதந்து கொண்டிருக்கும் இம்மூலக்கூறைக் காணும் நமது தடைகாப்பு, தனது வலுவான எதிர்ப்பை , எதிர்ப்பொருள் உருவாக்கத்தின் மூலம் தெரிவிக்கிறது. 


22. உடல்செல் மரபணு சிகிச்சை மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக. 

உடற்செல் மரபணு சிகிச்சை

1. சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன.

2.  எலும்பு மஜ்ஜை செல்கள் இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது.

3. பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை.


இனச்செல் மரபணு சிகிச்சை

1. சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன.

2. அண்ட செல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. 

3. பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன. 


23. தண்டு செல்கள் என்பன யாவை? மருத்துவத் துறையில் அதன் பங்கை விளக்குக.

தண்டு செல்கள்: 

* பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் ‘தண்டு செல்கள்' ஆகும். இவை பல மறைமுகப் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடு அடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. 

மருத்துவத் துறையில் அதன் பங்கு: 

* சேதமுற்ற மற்றும் நோயுள்ள உறுப்புகளை மீண்டு உருவாக்கி எதிர்கால மருத்துவத்துறையில் புரட்சி படைக்கத் தேவையான திறனுடன் தண்டு செல் ஆராய்ச்சிகள் விளங்குகின்றன. 

* தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய தண்டு செல்கள் ‘செல் திறனை' வெளிப்படுத்துகின்றன. 

* மூன்று வகை வளர்ச்சி அடுக்குகளான புறஅடுக்கு, அக அடுக்கு மற்றும் நடுஅடுக்கு ஆகிய அடுக்குகளிலிருந்து உருவாகும் அனைத்து வகை செல்களாகவும் மாறும் திறன் படைத்தவை தண்டு செல்கள் ஆகும். 

* பாலூட்டிகளில் இரு முக்கிய தண்டு செல் வகைகள் காணப்படுகின்றன. அவை ‘கருநிலை தண்டு செல்கள்' மற்றும் முதிர் தண்டு செல்கள்'. கருநிலை தண்டு செல்கள் பகுதித்திறன் கொண்டவை. அவற்றிற்கு புற அடுக்கு, நடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என்னும் மூன்று அடிப்படை வளர்ச்சி அடுக்குகளையும் உருவாக்கும் திறன் உள்ளது. 

* கருநிலை செல்கள் பல்திறன் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை, பல்வகையான செல்களாக மாற்றமுறும் திறன் படைத்தவை. கருக்கோளத்தினுள் காணப்படும் செல்திரளின் மேற்பகுதி திசுக்களில் இருந்து கருநிலை தண்டு செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 

* கருநிலை தண்டு செல்கள் தூண்டப்படும்போது 200க்கும் மேற்பட்ட முதிர்ந்த உடலின் செல் வகைகளாக மாற்றமடையக்கூடும். 

* கருநிலை தண்டு செல்கள் அழிவற்றவை. அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊடகத்தில் அவை நன்கு வளர்ந்து தங்களது வேறுபடா நிலையைத் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கின்றன. 

* குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் தண்டு செல்கள் காணப்படுகின்றன. முதிர் தண்டு செல் அல்லது உடல் தண்டு செல் பிரிதலடைந்து தன்னைப் போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும். பெரும்பாலான முதிர் தண்டு செல்கள் பல்திறன் கொண்டவை. இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரிசெய்யும் அமைப்பாகவும் முதிர் உயிரிதிசுக்களைப் புதுப்பிக்கும் அமைப்பாகவும் திகழ்கின்றன. முதிர் தண்டு செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக சிவப்பு மஜ்ஜை விளங்குகிறது. 

* மனித தண்டு செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு என்னவெனில் செல் அடிப்படையிலான சிகிச்சைகளுக்குப் பயன்படும் செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்தல் ஆகும். மனித தண்டு செல்கள் புதிய மருந்துக்களைச் சோதனை செய்து பார்க்க உதவுகின்றன.


24. மரபுவழி நோயுடன் பிறந்த ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் மரபணு சிகிச்சை உயிரி தொழில்நுட்பவியலின் ஒரு பயன்பாடே ஆகும். 

அ) மரபணு சிகிச்சை என்பதன் பொருள் யாது? 

ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மரபு வழி நோய் எது? 

இ) மரபு வழி நோய் சிகிச்சைக்கான மரபணு சிகிச்சையின் படிநிலைகள் யாவை? 

அ) மரபணு சிகிச்சை : 

* ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட திடீர் மாற்றத்தையடைந்த அல்லீல்களைக் கொண்ட ஒருவருடைய செல்களுக்குள் இயல்பான மரபணுவை செலுத்தி அவற்றைச் சரி செய்யும் முறைக்கு மரபணு சிகிச்சை எனப்படும். 

ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை : 

* அடினோசின் டி அமினேஸ் (ADA) குறைபாடு கொண்ட நான்கு வயகு பெண் குழந்தைக்கு ஃப்ரெஞ்ச் ஆன்டர்சன் என்பவரால் 1990ல் முதன் முதலில் மரபணு சிகிச்சை மருத்துவம் அளிக்கப்பட்டது. 

இ) மரபணு சிகிச்சையின் படிநிலைகள்: 

* நகலாக்கம் செய்யப்பட்ட இயல்பான, மனித ADA மரபணுக்களைக் கொண்ட பிளாஸ்மிட்டைச் சுமந்து கொண்டிருக்கும் பாக்டீரியாவினை தேர்வு செய்ய வேண்டும். 

* அவற்றை மரபியல்பு ரீதியாக செயலிழக்கப்பட்ட ரெட்ரோவைரஸ்களை தேர்வு செய்து நகலாக்கம் செய்யப்பட்ட ADA மரபணு வைரஸினுள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 

* SCID நோயாளிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செயலிழக்கப்பட்ட ADA மரபணுவைக் கொண்ட T செல்களை தேர்வு செய்ய வேண்டும். 

* பிரித்தெடுக்கப்பட்ட T செல்களுக்குள் ரெட்ரோ வைரஸ் தொற்றி அவற்றினுள் ADA மரபணுக்களை மாற்றம் செய்கின்றது. 

* ADA மரபணுக்கள் செயல் நிலையில் உள்ளன என்பதை செல்களை ஊடகத்தில் வளர்த்து உறுதி செய்ய வேண்டும். 

* மரபியல்பு மாற்றப்பட்ட செல்கள் ADA உற்பத்திக்காக நோயாளியின் உடலில் மீண்டும் செலுத்தி நோய் குணமாக்கப்படுகிறது. 


25. பாலிமரேஸ் சங்கிலி வினை, தொற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும் ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தை விரிவாக்கம் செய்க. 

* மரபியக் குறைபாடுகள், வைரஸ் நோய்கள், பாக்டீரிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய PCRன் இலக்குத் தன்மை மற்றும் உணர்த்திறன் மிகவும் பயன்படுகிறது. 

* தொற்று நோய்களை கண்டறிய PCR அடிப்படையிலான ஆய்வு எளிதானதாகும். ஒரு ஆய்வக மாதிரியில் ஒரு நோயூக்கி காணப்பட்டால் நிச்சயமாக அதன் டி.என்.ஏ வும் காணப்படும். 

* PCR முறை மூலம் அவற்றின் தனித்துவமான DNA வரிசைகள் கண்டறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரத்தம், மலம், தண்டுவட திரவம், சளி போன்ற மருத்துவ மாதிரிகளில் PCR முறைப்படி பரிசோதிப்பதன் மூலம் நோய் வகைகளைக் கண்டறியலாம் 

* PCR மூலம் கண்டறியப்படும் cDNAவானது ரெட்ரோவைரஸ் தொற்றுகளைக் கண்டறியவும் கண்காணிக்கவும் உதவும் ஒரு மதிப்பு மிகுந்த கருவியாகும். 

* PCR முறை மூலம் பாப்பிலோமோ வைரஸால் தோற்றுவிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற வைரஸ்களால் தூண்டப்படும் புற்று நோய்களைக் கண்டறிய இயலும்.


26. மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.

மறுசேர்க்கை தடுப்பூசிகள்: 

வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகளாவன. 

* துணை அலகு தடுப்பூசிகள் 

* வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் 

துணை அலகு தடுப்பூசிகள்: 

* நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு ‘துணை அலகு தடுப்பூசிகள்' என்று பெயர். 

* புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ. மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும். 

* இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

* தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை இவ்வகைத் தடுப்பூசிகளின் நன்மைகளாகும். 

வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்: 

* மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாக்கும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பூசிகள் ‘வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்' எனப்படும். 


27. நகலாக்க செம்மறி ஆடு - டாலி ஒரு மிகப் பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை விளக்குக. 

* ஐயன் வில்மட் மற்றும் கேம்ப்பெல் ஆகியோர் 1997ல் முதன் முதலில் டாலி எனும் முதல் பாலூட்டியை நகலாக்கம் செய்தனர். 

* முழுமைத்திறன் நிகழ்வாய்வு மற்றும் உட்கரு மாற்று தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றப்பட்ட டாலி எனும் நகல் செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது. 

* இது ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனையாக விளங்குகிறது. - டாலி மற்றும் அதன் பிறகு உருவான பிற சந்ததிகள் உடல் செல்களிலிருந்து புதிய உயிரினம் மறுவளர்ச்சி அடைய முடியும் என்பதை உறுதிச் செய்கிறது. 

* இந்த அறிவியல் வளர்ச்சி பல உயிரியல் முறைகளிலும் மருத்துவத் துறையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


28. நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.

நன்மைகள்: 

* மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துக்கள் உற்பத்திக்கு உதவுகின்றது. 

* தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது. 

பாதகங்கள்: 

* விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர். இச்செயல் பரிணாமத்தை மாற்றி இனத்தொகை மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கம் என்று கருதுகின்றனர். 

* நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது

* இச்செயலால் விலங்குகள் பாதிப்படையும் 

* வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர் இறப்பு வீதம் ஏற்படுகின்றது. 

* நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது. 

* இயல்பான விலங்குகளை விட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதுடன் பெற்றோர் உயிரியை விட குறைந்த நலமுடையனவாக உள்ளன. 

* 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.


29. மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக. 

* மனித கணையச் செல்களிலிருந்து, இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணு பிரித்தெடுக்கப்பட்டு வரையறு நொதிகளால் வெட்டப்படுகிறது. 

* பாக்டீரிய செல்லின் பிளாஸ்மிட் டி.என்.ஏ. பிரித்தெடுக்கப்பட்டு வரையறு நொதிகளால் வெட்டப்படுகிறது. 

* வெட்டப்பட்ட இன்சுலின் மரபணு மற்றும் பிளாஸ்மிட் டி.என்.ஏக்கள் DNA லைகேஸ் நொதியை பயன்படுத்தி 'ஒட்டுதல் நடைபெற்று மறுசேர்க்கை டி.என்.ஏ உருவாகிறது. 

* ஒரு குறிப்பிட்ட ஒம்புயிரி பாக்டீரியத்தினுள் மறுசேர்க்கை டி.என்.ஏ நுழைக்கப்படுகிறது. 

* நொதித்தல் தொட்டியினுள் மறுசேர்க்கை பாக்டீரியங்கள் பெருக்கமடைந்து மனித இன்சுலினை உற்பத்தி செய்கிறது. 

* மறுசேர்க்கை பாக்டீரியங்களிலிருந்து மனித இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.


30. மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன் (recombinanthGH) உற்பத்தியின் படிநிலைகளை விளக்குக.

* ஆய்வுக் குழுவானது ‘சொமட்டோஸ்டேட்டின்' மற்றும் 'சொமட்டோடிரோபின்' என்னும் இருவகை மனித வளர்ச்சி ஹார்மோன்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டது பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் இந்த பெப்டைடு ஹார்மோன்கள், அமினோ அமில உள்ளெடுப்பு மற்றும் புரத உற்பத்தியை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனித வளர்ச்சியைத் தூண்டவும் நெறிப்படுத்தவும் செய்கின்றன. 

* வளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறையினால் 'குள்ளத்தன்மை' ஏற்படுகிறது. மனித பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனை ஊசி வழியாகச் செலுத்துவதன் மூலம் இக்குள்ளத்தன்மையைச் சரி செய்யலாம். 

* பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து hGH உற்பத்திக்கு காரணமான மரபணு பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த மரபணுவுடன் ஒரு கடத்தி பிளாஸ்மிட்டை இணைத்து எ.கோலை பாக்டீரியத்தினுள் செலுத்தப்படுகிறது. 

* இவ்விதம் மறுசேர்க்கையுற்ற எ.கோலை, மனித வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த எ.கோலை பாக்டீரியங்கள் வளர்ப்பு ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நொதித்தல் தொழில் நுட்பத்தின் மூலம் பெருமளவில் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது. 

* மறு சேர்க்கை வகையான ‘சொமட்டோட்ரோபின்' என்று அழைக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனானது குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாக விளங்குகிறது.



Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல்.
12th Zoology : Chapter 10 : Applications of biotechnology : Applications of biotechnology: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 10 : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 10 : உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்