உயிரி தொழில் நுட்பவியல் - உயிரிய பாதுகாப்பு வழிமுறைகள் | 12th Zoology : Chapter 10 : Applications of biotechnology
உயிரிய பாதுகாப்பு வழிமுறைகள் (Biosafety guidelines)
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள் (GMOs) வளர்ச்சி பற்றி கருத்துக்கள் புவியளவில் வளர்ந்து வருவதால் உலக சுகாதார நிறுவனம் (WHO) 1991ஆம் ஆண்டு உயிரிய பாதுகாப்புக்காக முறை சாரா பணிக் குழுக்களை உருவாக்கியது. இக்குழு சுற்றுச்சூழலில் உயிரிகளை விடுவிக்க "தன்னார்வக் குறியீடு" ஒன்றை தயாரித்துள்ளது. "மரபுப்பொறியியல் மற்றும் உயிரிய தொழில் நுட்பவியல் பன்னாட்டு மையம்" (ICGEB) உயிரிய பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் உயிரிய தொழில்நுட்பவியல் தொடர் பயன்பாடு ஆகியனவற்றில் முக்கியப் பங்காற்றுகின்றது. மனித சுகாதாரம் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை ஆகியனவற்றில் மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகளுக்கான அனுமதியால் தோன்றும் இடர்பாடுகள் பற்றி ICGEB வலைதளத்தில் அறியலாம். கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் மரபுப் பொறியியலால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் ஆகியனவற்றை உற்பத்தி செய்தல், பயன்படுத்துதல், இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், சேமித்தல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக, 1986ன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவில் உயிரிய தொழில் நுட்பத் துறை (DBT) "rDNA பாதுகாப்பு வழிமுறை” களை உருவாக்கியுள்ளது. மேற்கூறிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது "உயிரியப் பாதுகாப்பு நிறுவனக் குழுக்கள் (IBSC's), "விருப்பத்திற்கேற்ப மரபுப்பொருளை கையாளும் மீளாய்வுக் குழுக்கள்" (RCGM) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மரபுப் பொறியியல் ஒப்புதல் குழு (GEAC) ஆகியனவற்றின் பணிகளாகும்.
இயல்பொருட்களான வீட்டுத் தளவாடங்கள், நிலம் போன்ற சொத்துகளைப் பாதுகாக்க நாட்டில் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை வெளியில் புலப்படக் கூடியன. ஆனால், மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் வணிகப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்கள் போன்றன முழுமையாக அறிவு சார்ந்தனவாகும். இத்தகு பொருட்களை உருவாக்கியவர் அல்லது கண்டறிந்தவர் அப்பொருளுக்கு முழு உரிமையுடைவராவார். இத்தகு அறிவுசார் சொத்துகளுக்கும் நாட்டில் சட்டம் உருவாக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஏனெனில், இவை வெளியில் புலப்படாத சொத்துக்கள். மேலும் இத்தகு அறிவை பிறருக்கு வெளிப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதுமையாக்கலுக்கும் வழி செய்கின்றது.
இதற்கான பின்னூட்டமே சட்ட உரிமை அல்லது காப்புரிமை எனும் பயன்பட்டிற்கான தற்காலிக தனியுரிமை ஆகும். சட்டங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் அவ்வப்போது உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்படும் புதிய பயிர் வகைகளும் அறிவுசார் சொத்துரிமை ஆகும். இது தாவர சாகுபடியாளர்களின் உரிமைகள் (plant breeders rights - PBR's) மூலமாக பாதுகாக்கப்படுகின்றது. கிராம சமூகம் மற்றும் விவசாயிகளின் மரபியல் பல்வகைமை கொண்ட சிற்றினப் பயன்பாடு, மரபியல் அறிவு மற்றும் பரிமாற்றம் படைப்பு, பாதுகாப்பு ஆகியனவற்றை PBR அங்கீகரிக்கின்றது. தாவர சாகுபடியாளர் இதுவரை இல்லாத புதிய தாவர வகையை உற்பத்தி செய்ய அரசாங்கத்தால் அளிக்கப்படுவதே "அறிவுசார் சொத்துரிமை" (IPR) மற்றும் "பாதுகாப்பு" (IPP) ஆகும்.
காப்புரிமை , பதிப்புரிமை, வணிகக் குறியீடு போன்ற பல்வேறு வரிகளில் அறிவுசார் சொத்துகளின் உரிமை பாதுகாக்கப்படுகின்றது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற உயிரிய பொருட்களின் உற்பத்தியை உள்ளடக்கியது, உயிரிய தொழில் நுட்பவியல் எனும் அறிவியல் ஆகும். உயிரிய தொழில் நுட்பவியல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவை கண்டுபிடிப்புகளுள் அடங்கும். உயிருள்ள கூறுகளான நுண்ணுயிரிகள் விலங்குகள், தாவரங்கள், செல்வகைகள், செல் நுண்ணுறுப்புகள், பிளாஸ்மிடுகள், மரபணுக்கள் மற்றும் உயிரினத் தொகுப்பில் உருவாகும் இயற்கை உற்பத்திப் பொருட்களான முதனிலை மற்றும் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்ற உற்பத்திப் பொருட்களான ஆல்கஹால் மற்றும் எதிர்பொருட்கள் ஆகியன உற்பத்தி பொருட்களில் அடங்கும்.
தாமஸ் ஆல்வா எடிசன் மட்டுமே உலகில் 1000க்கும் மேற்பட்ட காப்புரிமையை தன் கணக்கில் கொண்ட அறிவியலாளர் ஆவார்.
பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல், வளர்த்தல், புதிய, எளிய, செலவு மலிவான உயிரிய மாற்ற செயல்கள் மற்றும் உயிரிய தொழில்நுட்ப விளைபொருட்களை உருவாக்குதல் போன்றன உயிரிய தொழில் நுட்பவியலின் பல்வேறு செயல்கள் ஆகும்.
ஒருவர் கண்டுபிடித்த ஒரு பொருளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த அரசால் ஒரு குறிப்பிட்ட காலம் (இயல்பாக 20 ஆண்டுகள்) வரை முழு உரிமையை ஆவணமாக வழங்குவதே காப்புரிமை (Patent) என்தாகும்.
இந்த சட்டப்படியான ஆவணம் கண்டுபிடித்தவர் மற்றும் கண்டுபிடித்தலை பாதுகாக்கும் உரிமை மற்றும் சலுகையாகும். கண்டுபிடிப்பாளரின் கடின உழைப்பு, நேரம், கருத்துக்கள், முதலீடு ஆகியனவற்றிற்கேற்ப சீரான வருவாய் கிடைக்க வழிசெய்வதே காப்புரிமையின் நோக்கமாகும்.
காப்புரிமை பெறத் தேவையான அடிப்படைத் தகுதிகள்
• கண்டுபிடிப்பு புதுமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
• உற்பத்திப் பொருட்கள் புதிய கண்டுபிடிப்பாகவும் மீண்டும் தயாரிக்கத் தகுந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
• காப்புரிமை விண்ணப்பத்தில் கண்டுபிடிப்பு பற்றிய முழு விளக்கமும் இருத்தல் வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா?
1980ல் முதன் முதலில் காப்புரிமை பெற்ற உயிரினம் மரபுப் பொறியியல் மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவான சூடோமோனாஸ் புடிடா (Pseudomonas putida). 1971 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி என்பவரால் இது உருவாக்கப்பட்டது.
அறிவுசார் சொத்துரிமை வணிகம் (TRIPs) தொடர்பான கட்டண நிர்ணயம் மற்றும் வர்த்தக பொது ஒப்பந்தம் (GATT):
உலக வர்த்தகப் பங்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண 1948 ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகளால் வடிவமைக்கப்பட்டது தான் GATT ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே அனுபவிக்கப்பட்டன. 1988-ல் "அமெரிக்க பாராளுமன்றம் அனைத்து வணிகம் மற்றும் போட்டித் தன்மை சட்டம்" (Ominibus trade and competitiveness act (OTCA)) எனும் சட்டத்தை இயற்றி, வர்த்தகம் தொடர்பான சட்ட திட்டங்களை விசாரிக்கும் அதிகாரத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வழங்கியது.
புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு உற்பத்திப் பொருள் தோன்றிய உற்பத்தியான குறிப்பிட்ட நிலப்பரப்பை சார்ந்தோ , அதன் சிறப்பியல்பு அல்லது பண்பைப் பொருத்து வழங்கப்படும் ஒரு பெயர் அல்லது குறியீடு ஆகும். இக்குறியீடு குறிப்பாக வேளாண் உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழிலக உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படுவதாகும். 2004- 2005ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பொருள் டார்ஜீலிங் தேயிலை ஆகும். காஞ்சிப்பட்டு, கோவை மாவரைக்கும் இயந்திரம், தஞ்சை வண்ண ஓவியங்கள், மதுரை மல்லிகை, திருநெல்வேலி அல்வா மற்றும் நாகர்கோவில் கோவில் ஆபரணங்கள் ஆகியன தமிழகத்தில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற சில பொருட்கள் ஆகும்.
ஒரு நூலாசிரியர் வெளியிட்ட படைப்புகளுக்கான படைப்புரிமையை பாதுகாத்தல் IPRSன் கீழ் வருகிறது. பதிப்புரிமை நூலாசிரியரின் கருத்து வெளிப்பாட்டிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, நூலாசிரியர், பதிப்பாசிரியர் (பதிப்பாளர்) நூல் வெளியீட்டாளர் அல்லது பதிப்பாசிரியர் நூல் வெளியீட்டாளர் ஆகிய இருவருக்கும் வழங்கப்படும் உரிமையாகும். நூலின் கருத்துகள் நகலாக்கம் அல்லது மறுபதிப்பு செய்ய பதிப்புரிமையாளரிடம் எழுத்து பூர்வமான அனுமதி பெறுதல் வேண்டும். ஒரு பொருள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை பாதுகாப்பது காப்புரிமை மற்றும் வணிக ரகசியங்கள் ஆகியனவாகும். ஆனால், அச்சில் வெளிவந்தவை, ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டவை போன்ற வெளிவந்த படைப்புகளைப் பதிப்புரிமை பாதுகாக்கிறது. உயிரிய தொழில் நுட்பவியல் துறையில் டி. என்.ஏ. வரிசைத் தரவுகள் அல்லது வேறு பதிப்பு வடிவங்கள், ஒளி நுண் வரை படங்கள் போன்றன பதிப்புரிமையில் அடங்கும்.
வணிகக் குறியீடு என்பது ஒரு நிறுவனத்தின் தனியொரு பொருளை அல்லது நடவடிக்கைகளைக் கண்டறியப் பயன்படும் சொற்கள் அல்லது குறியீடு ஆகும். பொதுமக்களுக்கு உண்மையான வணிகப் பொருளையும் பிறரால் உருவாக்கப்படும் போலிப் பொருளையும் பிரித்தறிய வணிக்குறியீடு வழிவகை செய்கின்றது. பரந்த எல்லையில்லா பயன்பாடுகளைக் கொண்டதால் உயிரிய தொழில்நுட்பவியல் உலகளவில் அரசு மற்றும் பெரியவணிகநிறுவனங்களை ஈர்க்கும் சுயசார்புத் துறையாகும். மரபியல் நோய்கள் மற்றும் பிற நோய்களை தீர்க்கவல்ல சஞ்சீவியாக இத்துறை கருதப்படுகின்றது. உயிரிதொழில் நுட்பவியல் உற்பத்திப் பொருட்களின் தேவை உலகளவில் உயர்ந்து வருகின்றது. இந்த அறிவியல் பிரிவு நலம், வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் தொழிலகங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் சிறந்த தீர்வளிக்கும் துறையாகும்.