முதல் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அணு அமைப்பு | 7th Science : Term 1 Unit 4 : Atomic Structure
அலகு 4
அணு அமைப்பு
பொருளின் மூலக்கூறு அணு ஒன்றை உருவாக்கும் சரங்கள்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* அணுவின் அமைப்பினைப் பற்றி அறிந்துகொள்ளல்.
* அடிப்படைத் துகள்கள் அணுவில் அமைந்திருக்கும் நிலையினை அறிந்துகொள்ளல்.
* அணுவின் அடிப்படைத் துகள்களின் பண்புகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஒப்பிடுதல்
* அணு எண் மற்றும் நிறை எண்ணைப் புரிந்துகொள்ளல்
* தனிம ஆவர்த்தன அட்டவணையில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி ஒரு அணுவில் உள்ள புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்.
* அணுவின் இணைதிறனைப் பற்றி அறிந்துகொள்ளல்.
அறிமுகம்
நம்மைச் சுற்றிக் காணப்படும் அனைத்துப் பருப்பொருள்களும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஆனவை என்று நாம் படித்தோம். மூலக்கூறுகள் என்பவை ஒரே விதமான தனிமத்தின் அணுக்கள் அல்லது பல்வேறுவிதமான தனிமத்தின் அணுக்களால் ஆனவையாகும். மேஜை, நாற்காலி, மை, புத்தகம், சாக்பீஸ் மற்றும் கரும்பலகை சுருங்கக் கூறினால், நாம் காணும் அனைத்துமே அணுக்களால் ஆனவை. அணுக்களே மிகச்சிறிய துகள்களாகும். அவற்றை நுண்ணோக்கியால் கூட நாம் காணமுடியாது. இப்பாடப்பகுதியில், அணுக்கொள்கைகள், அணுவின் அடிப்படைத் துகள்கள், அணு எண், அணு நிறை மற்றும் இனைதிறன் ஆகியவற்றைப் பற்றி காண இருக்கிறோம்