அணு அமைப்பு | முதல் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அடிப்படை அணுத் துகள்கள் | 7th Science : Term 1 Unit 4 : Atomic Structure
அடிப்படை அணுத் துகள்கள்
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற கண்டுபிடிப்புகள் யாவும் அனைத்துத் தனிமங்களின் அணுக்களும் மிகச்சிறிய அணுக்கூறுகளான எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரானால் ஆனவை என்பதனை நிரூபித்தன. ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரானுக்கும் கார்பன் அணுவின் எலக்ட்ரானுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதேபோல் அனைத்துத் தனிமங்களின் புரோட்டான்களும், நியூட்ரான்களும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு அணுவினை உருவாக்கும் இத்துகள்கள் அணுவின் அடிப்படைத்துகள்கள் என அழைக்கப்படுகின்றன.
புரோட்டான்கள் (p)
புரோட்டான்கள் என்பவை அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர்மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும். இவை பெற்றுள்ள நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எலக்ட்ரான்கள் பெற்றுள்ள எதிர்மின்னூட்டத்தின் மதிப்பிற்குச் சமமாகும்.
அட்டவனை 4.1 அடிப்படைத் துகள்களின் மின்சுமை மற்றும் நிறை
நியூட்ரான்கள் (n)
இவை அணுக்கருவினுள் அமைந்துள்ளன. நியூட்ரான்கள் எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை. ஹைட்ரஜன் (புரோட்டியம்) தவிர அனைத்து அணுக்கருக்களும் நியூட்ரான்களைக் கொண்டுள்ளன அணுக்கருவினுள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் எனப்படும் இரண்டு வகையான துகள்கள் காணப்படுகின்றன. அவை நியூக்ளியான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான்கள் (e)
எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைகளில் அணுக்கருவினைச் சுற்றி வருகின்றன. புரோட்டான் மற்றும் நியூட்ரானின் நிறையுடன் ஒப்பிடும்போது ஒரு எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்க அளவில் உள்ளது. எனவே, ஒரு அணுவின் நிறையானது அணுக்கருவினுள் அமைந்துள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் நிறையினை மட்டுமே சார்ந்திருக்கிறது.
அணுக்கருவின் வெளியே காணப்படும் அனைத்து எலக்ட்ரான்களின் மொத்த எதிர் மின்னூட்டமானது அணுக்கருவின் உள்ளே காணப்படும் புரோட்டான்களின் மொத்த நேர் மின்னூட்டத்திற்குச் சமமாக இருக்கும். இதன் காரணமாகவே அணுக்கள் மின் நடுநிலைமையுடன் காணப்படுகின்றன.
ஓர் அணுவும் சூரிய மண்டலமும் ஒரே மாதிரியான அமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றனவா?
ஆமாம்! அணுவும் சூரிய மண்டலமும் ஒரே மாதிரியான அமைப்பினைக் கொண்டுள்ளன. சூரிய மண்டலத்தினைப் போலவே அணுவானது அணுக்கருவினை மையத்தில் கொண்டுள்ளது. அதனைச் சுற்றி எலக்ட்ரான்கள் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி வருகின்றன.
செயல்பாடு 2
கீழ்க்காணும் வரைபடத்தை உற்று நோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1. புரோட்டான் நேர்மின் சுமை கொண்ட துகளாகும்.
2. எலக்ரான் மின்சுமை அற்றது.
3. எலக்ரான் எதிர்மின்சுமை கொண்ட துகளாகும்.