பணவியல் பொருளியல் - வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும் | 12th Economics : Chapter 7 : International Economics
வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும்
வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்தல் நிலையும் பன்னாட்டு வாணிபத்தின் இரண்டு பிரதான கருத்துக்களாகும். இவை, இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டால் பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படை சிக்கல்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
1. வாணிபக் கொடுப்பல் நிலை (BOT)
ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பையே வாணிபக் கொடுப்பல் நிலை என்கிறோம். ஒரு நாட்டின் வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில் பண்டங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் மட்டுமே தொகுத்தளிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியை "புலப்படும் வாணிகம்" எனவும் அழைக்கலாம் ஏனென்றால் பொருட்களை கண்ணால் காணவும் தொட்டுணரவும் முடியும்.
சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நாட்டின் பண்ட ஏற்றுமதியின் மொத்த மதிப்பு இறக்குமதியின் மொத்த மதிப்பை விட அதிகமாக இருந்தால் அந்த நாடு சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை பெற்றிருப்பதாக கருதலாம்.
பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை
ஒரு நாட்டின் பண்ட ஏற்றுமதியின் மொத்த மதிப்பு பண்ட இறக்குமதியின் மொத்த மதிப்பைவிட குறைவாக இருந்தால் அந்த நாடு பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலையை பெற்றிருப்பதாகக் கூறலாம்.
2. அயல் நாட்டு செலுத்து நிலை (BOP)
நாடுகளுக்கிடையே பொருட்கள் மட்டுமல்லாமல் பணிகள், மூலதனம் பணம் போன்றவையும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. இவற்றையும் உள்ளடக்கிய சமநிலையை ஒரு நாடு அடைய வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய தொகுப்பு அறிக்கையே அயல்நாட்டுச் செலுத்து நிலை.
அயல் நாட்டுச் செலுத்து நிலை பொருள் விளக்கம்
ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளாதார பரிவர்த்தனை அறிக்கையை அயல்நாட்டுச் செலுத்துநிலை என்கிறோம். இது இரட்டைப் பதிவு கணக்கியல் முறையில் தயாரிக்கப்படும் அறிக்கையாகும்.
உலக நாடுகளிலிருந்து பெறப்படும் கட்டனத் தொகைகளை வரவு பரிவர்த்தனையாகவும் மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய செலவுத் தொகைகளை பற்று பரிவர்த்தனையாகவும் பதிவு செய்யப்படுகிறது. பண்டம் மற்றும் பணிகளின் ஏற்றுமதி, ஒரு நாட்டின் தொழிலாளர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் தொகை, வெளிநாட்டுக் கடன், அந்நிய மூலதனம் மற்றும் தங்கம் உள்ளிட்ட அந்நிய செலாவணி விற்பனையில் கிடைக்கும் வருவாய் போன்றவை பிரதான வரவினங்களாகும்.
பொருட்கள் மற்றும் பணிகள் இறக்குமதி, நாட்டில் வாழும் வெளிநாட்டினர் அவர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் தொகை, வெளிநாடுகளுக்கு கடன் கொடுத்தல், வெளிநாடுகளில் முதலீடு செய்தல் மற்றும் தங்கம் உள்ளிட்ட அந்நிய செலாவணிகளை வாங்குதல் ஆகியவை பற்று பரிவர்த்தனையாக பதியப்படும் பிரதான செலவினங்களாகும்.
3. அயல்நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகள்
வரவு மற்றும் பற்று இனங்கள் நேர்க்கிடையாக அயல்நாட்டுச் செலுத்துநிலை அறிக்கையில் பதியப்படுகிறது. அவை படுக்கை கிடைமட்டமாக கீழ்கண்ட மூன்று இனங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
அ. நடப்பு கணக்கு
ஆ. மூலதன கணக்கு
இ. மைய வங்கி தீர்வு கணக்கு அல்லது மைய வங்கி நிதி சொத்து கையிருப்பு கணக்கு
அ. நடப்பு கணக்கு : பன்னாட்டு பண்ட பரிவர்த்தனைகள், பன்னாட்டுப் பணி பரிவர்த்தனைகள், உற்பத்திக்காரணி வருவாய் மற்றும் பரிசுத் தொகை பரிவர்த்தனைகள் இந்த கணக்கின் கீழ் பதியப்படுகிறது.
ஆ. மூலதன கணக்கு: வெளிநாட்டுக் கடன், அந்நிய முதலீடு, பன்னாட்டு பண மற்றும் நிதி சந்தை விற்றல் வாங்கல் பரிவர்த்தனைகள் இந்த கணக்கின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.
இ. மைய வங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கு: மைய வங்கியின் கையிருப்பில் உள்ள செலவானி சொத்துக்களில் நடைபெறும் பரிவர்த்தனை இந்த கணக்கில் பதிவு செய்யப்படுகிறது. நடப்பு மற்றும் மூலதன கணக்கில் உபரி எழுந்தால் கையிருப்புக் கணக்கில் சேர்க்கப்படும். பற்றாக்குறை விழுந்தால் கையிருப்பிலிருந்து எடுத்து செலவிடப்படும். எனவேதான் இதற்கு மைய வங்கி கையிருப்பு தீர்வு கணக்கு என்ற பெயரும் வழங்கப்பட்டது. இந்த கணக்கின் கீழ் தங்கத்தின் இருப்பு, எளிதாக மற்ற நாட்டு சிறப்பு எடுப்புரிமை (பன்னாட்டு பண நிதியத்தின் பணம்) மற்றும் பன்னாட்டுப் பண நிதியத்தின் நிகர கடன் பெறும் தகுதி நிலை ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.
அயல்நாட்டுச் செலுத்துநிலைச் கணக்கு வரைபடம்
வரவு (வருவாய்) - பற்று (செலவு) = நிகரநிலை [பற்றாக்குறை (-), உபரி (+)]
பற்றாக்குறை (செலவு > வருவாய்)
4. அயல்நாட்டுச் செலுத்துநிலையின் சமனற்ற நிலை
ஒரு நாட்டின் பன்னாட்டு வரவும் (R) செலவும் (P) சமமாக இருந்தால் அந்நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையிலிருக்கும். குறியீடுகளில் இதை எனலாம்.
R / P = 1.
சாதகமான அயல் நாட்டுச் செலுத்துநிலை
ஒரு நாட்டின் பன்னாட்டு வரவு பன்னாட்டு செலவைவிட பெரிதாக இருந்தால் அந்நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்து நிலை சாதகமாக அமையும். இதை குறியீடுகளில்
R / P > I.
என குறிப்பிடலாம்.
பாதகமான அயல்நாட்டுச் செலத்துநிலை
பன்னாட்டு வரவு செலவைவிட குறைவாக இருந்தால் அந்த நாட்டிற்கு அயல்நாட்டுச் செலுத்துநிலை பாதகமாகிவிடும். குறியீடுகளில்
R / P < 1.
என எழுதலாம்.
5. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலையின் வகைகள்
அயல்நாட்டுச் செலுத்து சமனற்ற நிலையின் மூன்று வகைகளை கீழ்கண்டவாறு புரிந்துக் கொள்ளலாம்.
அ) சுழற்சி சமனற்ற நிலை
ஆ) நீண்டகால சமனற்ற நிலை
இ) கட்டமைப்பு சமனற்ற நிலை
அ) சுழற்சி சமனற்றநிலை
வாணிப சுழற்சியின் விளைவாக எழும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையை சுழற்சி சமனற்றநிலை என்கிறோம். கீழ்கண்ட இரண்டு காரணங்களால் இது நிகழ்கிறது முதலாவது, நாடுகள் வாணிப சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களிலிருப்பது இரண்டாவது, நாடுகளுக்கிடையே தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது
ஆ) நீண்டகால சமனற்ற நிலை
நாடுகள் பொருளாதார வளர்ச்சி படிநிலைகளில் முன்னேறும்பொழுது நீண்டகால தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வதால் உண்டாகும். அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையை நீண்டகால சமனற்ற நிலை எனலாம். வளர்ச்சியின் துவக்கநிலையில் ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீடு உள்நாட்டு சேமிப்பைவிடகூடுதலாக இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கும். இந்தியாவில் 1951லிருந்தே இந்த சூழ்நிலை நிலவுகிறது.
இ) கட்டமைப்பு சமனற்ற நிலை
நாட்டின் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்களினால் நிகழும் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையே கட்டமைப்பு சமனற்ற நிலையாகும். மாற்று வழங்கல் ஆதாரங்களை கண்டுபிடித்தல், செயற்கையான பதிலீட்டுப் பொருட்களை கண்டுபிடித்தல், உற்பத்தி வளங்கள் தீர்ந்து போதல் அல்லது போக்குவரத்து வழிகளும் செலவும் மாற்றமடைதல் போன்றவையே பொருளாதார கட்டமைப்பு மாற்றம் என்கிறோம்.
6. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மைக்கான காரணங்கள்
ஒரு நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலைக்கான காரணங்களாவன
1. சுழற்சியான ஏற்ற இறக்கம்
நாடுகளின் வாணிப சுழற்சியின் ஏற்ற இறக்கம், அவற்றின் காலகட்டங்கள் மற்றும் அவை உருவாக்கும் மாற்றங்களின் அளவுகள் அயல்நாட்டு செலுத்து சமனற்ற நிலையை உருவாக்குகிறது. மந்தகாலங்களில் பன்னாட்டு வாணிகம் வீழ்ச்சி அடைகிறது. செழிப்பான காலங்களில் வாணிகம் வளர்கிறது.
2. கட்டமைப்பு மாற்றங்கள்
வளரும் நாடுகளில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் அபரிமிதமான முதலீடும் கட்டமைப்பை மாற்றி அமைத்து அயல்நாட்டுச் செலுத்து சமனற்ற நிலையை உருவாக்குகிறது. வளரும் நாடுகள் தொழில் வளர்ச்சிக்காக அதிகப்படியான இறக்குமதி நாட்டம் கொண்டுள்ளது. ஆனால் இறக்குமதிக்கு ஈடாக ஏற்றுமதி செய்வதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. மேம்பாட்டுச் செலவு
பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு செய்யும் செலவு வருமானத்தையும் விலையையும் அதிகரிக்க செய்கிறது. நாடுகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் தற்சாற்பற்றவையாக இருக்கும். மக்களின் வருமானம், சேமிப்பு மற்றும் முதலீடு மிகக் குறைவாக இருக்கும். பொருட்கள், மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வளர்ந்த நாடுகளை நம்பி இருக்கும். ஏற்றுமதி வாய்ப்பு குறைவு அதே நேரத்தில் இறக்குமதி நாட்டம் அதிகம் எனவே வளரும் நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமனற்றநிலையிலேயே உள்ளது.
4. மிகை நுகர்வுப்போக்கு
ஆடம்பர பொருட்கள் மீதான பேராசை அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது ஏனென்றால் மிகை நுகர்வுப்போக்கு இறக்குமதியை அதிகப்படுத்தி ஏற்றுமதித் திறனை குறைத்து விடுகிறது.
5. வெளிக்காட்டும் விளைவு
மற்றவர் ஒரு பொருளை பயன்படுத்தும் காட்சியைப் பார்க்கும் ஒருவர் அந்தப் பொருளை தானும் பயன்படுத்த வேண்டும் என விருப்பம் கொள்வதே வெளிகாட்டும் விளைவு. விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்கள் இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்த நாடுகளின் பொருட்களை வளரும் நாட்டு நுகர்வோரை வாங்கவைத்துவிடுகிறது. இதன் விளைவாக வளரும் நாடுகளின் இறக்குமதி நாட்டம் அதிகரித்து அயல்நாட்டுச் செலுத்துநிலையில் பற்றாக்குறை உண்டாகிறது.
6. வெளிநாட்டில் கடன் வாங்குதல்
வெளிநாட்டில் கடன் வாங்கினால் வாங்கும் ஆண்டில் அயல்நாட்டு செலுத்துநிலையில் உபரியும் வட்டியுடன் திரும்ப செலுத்தும் காலங்களில் பற்றாக்குறை சமமின்மையும் ஏற்படும். இதே போன்று வெளிநாட்டு முதலீடு உள்வரும் ஆண்டில் உபரி சமமின்மையும் வெளிநாட்டிற்கு முதலீடு வெளிசெல்லும் ஆண்டுகளில் பற்றாக்குறை சமமின்மையும் உருவாகும்.
7. தொழில்நுட்பப் பின்னடைவு
உள்நாட்டுத் தொழில்நுட்பம் பின்தங்கியிருந்தால், புதிய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்குவதால் அயல்நாட்டுச் செலுத்து நிலை சமனற்ற நிலையை அடைகிறது.
8. பன்னாட்டு அரசியல்
போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நாடுகள், மற்ற நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏராளமாக விற்பனை செய்கின்றன. போர்களில் வெற்றி பெற பின்தங்கிய நாடுகள் போர் கருவிகள் வாங்க தங்களது ஏற்றுமதி வருவாயை செலவிட்டு, வாணிப பற்றாக்குறையில் பிடிபடுகின்றன. அயல்நாட்டுச் செலுத்துநிலை பற்றாக்குறைச் சமமின்மைக்கு இது வழிவகுக்கிறது.
7. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும் வழிமுறைகள்
அயல் நாட்டுச்செலுத்து சமமின்மையை நீக்குதல்
தானாக சரியாதல் நிலை
1. விலையை சரிசெய்தல்
2. வட்டிவீதம் சரிசெய்தல்
3. வருமானம் சரிசெய்தல்
4. மூலதனப் பெயர்வு
விரும்பி செயல்படுத்தப்படும் வழிமுறைகள்
பணவியல் வழிமுறைகள்
1. பண அளிப்பு சுருங்குதல்/விரிவடைதல்
2. பணமாற்று மதிப்பை குறைத்தல்/ பண மாற்றுபதிப்பை அதிகப்படுத்துதல்
3. செலாவணிக் கட்டுப்பாடு
இதர வழிமுறைகள்
1. வெளிநாட்டுக்கடன்
2. வெளிநாட்டு முலதன வருகையை ஊக்குவித்தல்
3. சுற்றுலா மேம்பாடு
4. வெளிநாடு வாழ்குடிமக்கள் பணம் அனுப்ப ஊக்குவித்தல்
5. இறக்குமதி பதிலீட்டு பொருள் உற்பத்தி
வாணிப வழிமுறைகள்
ஏற்றுமதி ஊக்குவித்தல்
1. ஏற்றுபதி தீர்வையை நீக்குதல்/ குறைத்தல்
2. ஏற்றுமதி மானியம்
3. ஏற்றுமதி ஊக்குவித்தல்
இறக்குமதி கட்டுப்பாடுகள்
1. இறக்குமதி தீர்வை
2. இறக்குமதி பங்களவு
3. இறக்குமதித் தடை
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்குவதற்கு இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. அவை (i) தானாக செயல்படும் வழிமுறைகள் மற்றும் (ii) விரும்பி செயல்படுத்தப்படும் வழிமுறைகள்
I தானாக சரியாதல்
சந்தை விசைகளான தேவையும் அளிப்பும் எந்தவித தலையீடுமின்றி அதிகரிக்க குறைய அனுமதித்தால் காலப்போக்கில் அயல்நாட்டு செலுத்துநிலை தானாக சமநிலையை அடையும் என நம்பப்படுகிறது. மாறுகின்ற அந்நிய செலாவணி மாற்றுவீத முறையில் அயல்நாட்டு செலுத்துநிலை விலை, வட்டி வீதம், வருமானம் மற்றும் மூலதன இடபெயர்வு போன்றவற்றில் நடக்கும் மாற்றங்களினால் சமனற்றநிலை தானாக சரியாகி சமநிலையை அடையும்.
1. விலையை சரிசெய்தல்
அயல்நாட்டு செலுத்து சமநிலை பற்றாக்குறையான நாடுகளிலிருந்து உபரி நாடுகளுக்கு அந்நிய செலாவனி வெளியேறுவதால் பற்றாக்குறை நாடுகளில் பண அளிப்பானது குறைகிறது. உபரி நாடுகளில் பண அளிப்பானது அதிகரிகிறது. இதன் விளைவாக விலையுயர்ந்து உபரி நாடுகள் இறக்குமதியை ஊக்குவிக்கிறது, எற்றுமதியை தவிர்க்கிறது. அதேசமயம் பற்றாக்குறை நாடுகளில் காணும் விலை வீழ்ச்சியானது எற்றுமதியை ஊக்குவிக்கிறது, இறக்குமதியை தவிர்க்கிறது. இவற்றின் மூலமாக அயல்நாட்டு செலுத்து சமநிலை நிலைப்படுத்தப்படுகிறது.
2. வட்டி வீதம் சரிசெய்தல்
அயல்நாட்டுச் செலுத்துநிலை பற்றாக்குறை நாட்டில் பண அளிப்பு குறைந்து வட்டி வீதம் உயரும். உபரி நாட்டில் பண அளிப்பு உயர்ந்து வட்டிவீதம் குறையும், உபரிநாட்டு வட்டி வீதம் குறைவினாலும். பற்றாக்குறை நாட்டு வட்டிவீத உயர்வினால் அந்நாட்டின் நிதி முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிதி சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்ப பெற்று உள்நாட்டுக்குள் கொண்டு வருவார்கள் உபரி நாடுகளில் இது தலைகீழாக நடக்கும். விளைவாக இரு வகை நாடுகளிலும் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையை அடையும்.
3. வருமானம் சரிசெய்தல்
செலுத்து நிலை உபரி நாட்டின் வருமானம் உயரும். வருமானம் உயர்வு வெளிநாட்டு பொருட்களை வாங்கத் தூண்டும். இதனால் இறக்குமதி அதிகரித்து செலுத்து நிலை உபரி நீங்க சமநிலையை அடையும்.
4. மூலதனப் பெயர்வு
வெளிநாட்டு மூலதனத்தை வட்டிவீதத்தை உயர்த்தி கவர்ந்திழுக்க முடியும். செலுத்துநிலைப் பற்றாக்குறை நாடுகள் வட்டிவீதத்தை உயர்த்தி செலுத்து நிலை சமமின்மையை நீக்கலாம்.
II விரும்பி செயல்படுத்தப்படும் வழிமுறைகள்
விரும்பி செயல்படுத்தப்படும் வழிமுறைகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம். அவையாவன: அ) பணவியல் வழிமுறைகள், ஆ) வாணிப வழிமுறைகள் மற்றும் இ) இதர வழிமுறைகள்
அ. பணவியல் வழிமுறைகள்
1. பண அளிப்பு சுருக்கம்
உள்நாட்டுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் மலிவான வெளிநாட்டு பொருட்களை மக்கள் அதிகம் வாங்குவார்கள். இது இறக்குமதியை உயர்த்திவிடும். வெளிநாட்டினரோ அதிக விலையுள்ள பொருட்களை வாங்கமாட்டார்கள். இது ஏற்றுமதியைக் குறைத்துவிடும். நாட்டின் மைய வங்கி பண அளிப்பை கட்டுப்படுத்தி உள்நாட்டு பொருட்களின் விலையையும் கட்டுபடுத்தும் இதன் விளைவாக ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்து அயல்நாட்டுச் செலத்துநிலையின் சமமின்மை நீங்கும். மேலும், கடன் அளவு கட்டுக்குள் இருந்தாலும், முதலீடு குறையும், உற்பத்தியின் அளவு குறையும் விலை அதிகரிக்கும். இது 2010 - ல் அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
2. பண மதிப்புக் குறைப்பு
ஒரு நாட்டின் மைய வங்கி அந்நாட்டின் பணத்தை மற்ற நாடுகளின் பண மதிப்பில் தானாக முன்வந்து குறைத்து நிர்ணயிப்பதே செலாவணி மதிப்பு குறைப்பு ஆகும். உதாரணமாக $1 = ₹70 என்ற பண மாற்று வீதத்தை $1 = ₹80 என்று குறைந்து நிர்ணயிப்பதை செலாவணி மதிப்பு குறைப்பு எனலாம்.
அயல் நாட்டுச் செலுத்துநிலையில் சமமின்மை உள்ள நாடு தன் பணத்தின் மதிப்பை குறைத்து நிர்ணயித்து ஏற்றுமதிக்கு ஊக்கம் கொடுத்து இறக்குமதிக்கான ஊக்கத்தை கெடுத்து செலுத்து சமமின்மையை சரிசெய்யலாம். செலாவணி மதிப்பு குறைப்பு ஏற்றுமதி பொருட்களை மலிவானதாகவும் இறக்குமதி பொருட்களை விலை உயர்ந்தவையாகவும் மாற்றும். பணமதிப்பிறக்கம் இந்திய உணவுப் பொருட்கள் வெளிநாட்டினருக்கு மலிவான விலையிலும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு பொருட்கள் உயர்ந்த விலையிலும் கிடைக்க செய்கிறது.
3. அந்நிய செலாவணிக் கட்டுப்பாடு
அந்நிய செலாவணி சந்தையில் அரசு தலையிடுவதையே செலாவணிக் கட்டுப்பாடு என்கிறோம். அயல்நாட்டுச் செலுத்துநிலை நிர்வகிக்க இது புகழ்வாய்ந்த நடைமுறையாகும். அந்நியச் செலாவணி ஈட்டுவதையும் இருப்பு வைப்பதையும் மைய வங்கி முழுமையாக தன்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. ஏற்றுமதியாளர்கள் போன்ற அந்நிய செலாவணி ஈட்டுபவர்கள் அதை மைய வங்கியிடம் ஒப்படைத்து உள்நாட்டு பணமாக மாற்றி பெற்றுக் கொள்ள வேண்டும். இறக்குமதியாளர்களுக்கும் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் இருப்பதால் ஒரு நாடு இறக்குமதியையும் சிறப்பாக குறைக்க முடியும் கட்டுப்பாடுகள் பொருள் கடத்தலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தும் உண்டு. பத்திரிக்கைகள் கருத்துப்படி இந்திய விமானநிலையங்களில் தங்கம் கடத்தி வருதலை பிடிப்பது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.
III. வாணிப வழிமுறைகள்
ஏற்றுமதிக்கு ஊக்கமளித்து இறக்குமதியை குறைக்கும் வழிமுறைகளேயே வாணிப் வழிமுறைகளாகும். அவற்றை இங்கே விவாதிக்கலாம்.
1. ஏற்றுமதி ஊக்கமளித்தல்
கீழே பட்டியலிடப்பட்டுள்ள வழிமுறைகளை செயல்படுத்தி ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கலாம். i) ஏற்றுமதி மீது விதிக்கப்படும் சுங்க வரியை குறைத்தல் அல்லது நீக்குதல் ii) ஏற்றுமதி மானியம் வழங்குதல் ii) ஏற்றுமதிக்காக உற்பத்தி தொழில் நடத்துபவர்களுக்கு பண, நிதி, உருவ மற்றும் நிறுவனச் சலுகைகள் வழங்குதல் (உள்நாட்டு மக்களும்,நிறுவனங்களும் பாதிக்கப்படும்)
2. இறக்குமதி கட்டுப்பாடு
இறக்குமதியை கட்டுப்படுத்தும் கீழ்கண்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி இறக்குமதியை கட்டுப்படுத்தலாம். i) இறக்குமதி மீது வரிவிதித்தல் முன்பே விதிக்கப்பட்டிருந்தால் விகிதத்தை அதிகப்படுத்தலாம். ii) பங்களவு நிர்ணயித்து இறக்குமதியை குறைக்கலாம். பங்களவு என்பது இறக்குமதி அளவை நிர்ணயித்தலாகும். iii) கட்டுபாடு அல்லது தவிர்ப்பு என்ற முறையில் அத்தியாவசியமற்ற பொருட்களை குறைப்பது. ஆனால் இது கடத்தலை ஊக்குவிக்கும்.
IV. இதர வழிமுறைகள்
இதுவரை நாம் கற்றுக்கொண்ட வழிமுறைகள் மட்டுமல்லாமல், இன்னும் சில வழிமுறைகளையும் பின்பற்றி அயல்நாட்டுச் செலுத்து நிலையில் சமநிலையை உருவாக்க முடியும். அவையாவன
i) வெளிநாட்டுக்கடன்
ii) சலுகைகள் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்தல்
ili) வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த ல்
iv) வெளிநாடுவாழ் மக்களின் அனுப்புதல்களை நாட்டுக்குள் கொண்டு வர ஊக்கமளித்தல்
v) இறக்குமதியாகும் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல்.