Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள்

பன்னாட்டுப் பொருளியல் - பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் | 12th Economics : Chapter 7 : International Economics

   Posted On :  16.03.2022 04:41 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள்

ஆடம் ஸ்மித் 1776 ஆம் ஆண்டில் தனி அடக்கச் செலவு கோட்பாட்டினை விளக்கினார்.

பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள்

பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் தொன்மை கோட்பாடுகள், தற்கால கோட்பாடுகள் என கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.



1. பன்னாட்டு வாணிப தொன்மை கோட்பாடுகள்

அறிமுகம்

ஆடம் ஸ்மித் 1776 ஆம் ஆண்டில் தனி அடக்கச் செலவு கோட்பாட்டினை விளக்கினார். இதை மேலும் செம்மை படுத்த டேவிட் ரிக்கார்டோ ஒப்புமை செலவுக் கோட்பாட்டினை விளக்கினார். இதை ஜெ.எஸ் மில், ஜெ.இ கெய்ர்ன ஸ், சி.எப் பாஸ்டபில், எப்.டபில்யூ டாசிக் மற்றும் காட்பிரய்ட் ஹாபெர்லர் போன்ற பொருளியல் அறிஞர்கள் செழுமைபடுத்தினார்கள். ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோவின் கோட்பாடுகளை மட்டும் இங்கே கற்றுத் தெளிவோம்.



2. ஆடம் ஸ்மித்தின் முழுச் செலவுக் கோட்பாடு 

வாணிபத்தடைகளற்ற சூழலில் குறைவான அடக்கச் செலவில் பொருளுற்பத்தி செய்யும் தனி தேர்ச்சியை அடைவதினால் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு வாணிகத்தின் பலன் கிடைக்குமென ஆடம் ஸ்மித் நம்பினார்.

தொன்மை வாணிபக் கோட்பாடுகள்

வணிகவாதம் (16 ம் நூற்றாண்டுக்கு முன்)

* நாம் - அவர்கள் வாணிபக் கருத்தைக் கொண்டது  

* பிற நாட்டின் ஆதாயம் நம் நாட்டின் நஷ்டம் 

தடையில்லா வாணிபக் கோட்பாடுகள்

* முழு நன்மை (ஆடம் ஸ்மித், 1776) 

* ஒப்பீட்டு நன்மை (டேவிட் ரிக்கார்டோ, 1817) 

* உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சி, பண்டங்களின் தடையில்லா நகர்வு வாணிபத் தொடர்பு கொண்டுள்ள அனைத்துப் பொருளாதாரங்களுக்கும் நன்மை பயக்கும்.

தடையில்லா வாணிபம் சரிசெய்த கோட்பாடுகள்

* காரணி - சரிவிகிதம் (ஹெக் செர் - ஓலின் 1919)

* பன்னாட்டு பொருளின் வாழ்க்கை சுழற்சி (ரே வெர்னன் 1966)

ஆடம் ஸ்மித்தின் கோட்பாடு

ஆடம்ஸ்மித்தின் கருத்தின் படி குறைந்த தனி அடக்கச் செலவில் பொருளுற்பத்தி செய்யும் தேர்ச்சியை நாடுகள் பெற்றிருப்பதே பன்னாட்டு வாணிகம் நடைபெறுவதற்கான அடிப்படையாகும். இரண்டு நாடுகள் பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபடுகிறது என எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு நாடு ஒரு பொருளை குறைந்த தனி அடக்கச் செலவில் உற்பத்தி செய்யும் சிறப்பு தேர்ச்சியை பெற்றுள்ளது. மற்றொரு நாடு வேறு பொருளை குறைந்த தனி அடக்கச் செலவில் உற்பத்தி செய்யும் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த இரு நாடுகளும் பொருட்களை பன்னாட்டு வாணிகத்தில் பரிவர்த்தனை செய்து கொண்டால் இரண்டு நாடுகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

எடுகோள்கள்

1. இரண்டு நாடுகள் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கின்றன (2 × 2 மாதிரி).

2. உழைப்பு மட்டுமே உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரே உற்பத்தி காரணி.

3. எல்லா உழைப்பாளர்களும் மாதிரியான இயல்புடையவர்கள்.

4. ஒரு பொருளின் செலவு அல்லது விலை அந்த பொருளை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பின் அளவைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

5. போக்குவரத்து செலவு இல்லை.

எடுத்துக்காட்டு விளக்கம்

முழுச் செலவுக் கோட்பாட்டை கீழ்கண்ட அட்டவணையின் மூலமாக எளிதாக விளக்கலாம்.




இந்தியா கோதுமையை சீனாவைவிட குறைந்த அடக்க செலவில் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது என்பது மேற்கண்ட உதாரணத்திலிருந்து தெளிவாகிறது. சீனா துணியை இந்தியாவைவிட குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளதும் தெளிவாகிறது. எனவே, இந்தியா கோதுமையை உபரியாக உற்பத்தி செய்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். சீனாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து கொள்ளலாம். சீனா இந்திய கோதுமையை வாங்கிக்கொண்டு துணியை இந்தியாவுக்கு விற்கும். இவ்வகையான பன்னாட்டு வாணிகத்தில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நன்மை உண்டாகும்.



3. ரிக்கார்டோவின் ஒப்புமைச் செலவுக் கோட்பாடு

டேவிட் ரிக்கார்டோ இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொருளியல் அறிஞர். தன் அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதித்தலின் கோட்பாடுகள்" என்ற புத்தகத்தை 1817 ல் வெளியிட்டார். இதில் ஒப்புமைச் செலவு கோட்பாட்டை விளக்கி எழுதியுள்ளார். இதற்கு பிறகு ஜே.எஸ்.மில், மார்ஷல், டசிக் மற்றும் பலர் இக்கோட்பாட்டை மெருகேற்றினர்.

ரிக்கார்டோ பொருட்களை உற்பத்தி செய்ய செலவழிக்கப்படும் செலவு வேறுபாட்டை பன்னாட்டு வாணிபத்திற்கான அடிப்படை என்கிறார். ஒரு நாடு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே தனி அடக்க செலவில் வேறுபாடில்லை என்றாலும் ஒப்புமை செலவு வேறுபட்டிருக்கும். ஒரு நாடு குறைந்த ஒப்புமை செலவில் ஒரு பொருளை உற்பத்தி செய்யுமானால் அந்த நாடு பன்னாட்டு வாணிபத்தின் மூலம் பலனடைய முடியும் என்கிறார்.

ரிக்கார்டோ இரண்டு பொருட்களை ஒரு நாடு குறைந்த தனி அடக்க செலவில் உற்பத்தி செய்ய முடிந்தாலும் அந்த நாடு மற்ற நாட்டு உற்பத்தி செலவுடன் ஒப்பிட்டு குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும் பொருளுற்பத்தியில் தனித் தேர்ச்சி அடைந்து ஏற்றுமதி செய்யலாம். இதே போன்று, எந்த பொருளையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலாத நாடு மற்ற நாட்டின் பொருளுற்பத்தி செலவுடன் ஒப்பிட்டு மிக உயர்வான உற்பத்தி செலவுள்ள பொருள் உற்பத்தியை நிறுத்திவிட்டு அவற்றை இறக்குமதி செய்து பலனடையலாம்.

எடுகோள்கள்

1. இரண்டு நாடுகள் இரண்டு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. (2 × 2 மாதிரி) 

2. கூலிச் செலவு மட்டுமே உற்பத்தி செலவாகும்.

3. உழைப்பாளர்களனைவரும் சமமான திறன் பெற்றவர்கள்.

4. உழைப்பு ஒரு நாட்டுக்குள் இடம்பெயர தக்கது. நாடுகளுக்கிடையே இடம் பெயர இயலாதது.

5. உற்பத்தியளவு மாறா விளைவு விதிக்குட்பட்டது.

6. நாடுகள் பன்னாட்டு வாணிகத்தின் மீது தடைகளை விதிப்பதில்லை.

7. உற்பத்தி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதில்லை . 

8. போக்குவரத்து செலவு கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. 

9. நாட்டின் சந்தையில் நிறைவுப் போட்டி நிலவுகிறது. 

10. உற்பத்தி வளங்கள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

11. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை

எடுத்துக்காட்டு விளக்கம்

ரிக்கார்டோவின் ஒப்புமைச் செலவு கோட்பாட்டினை அமெரிக்காவும் இந்தியாவின் துணி மற்றும் கோதுமை உற்பத்தி செலவுகளை கற்பனை உதாரணங்களாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.

ஒப்புமைச் செலவு 

(ஒரு அலகு உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பின் அளவு)


அமெரிக்காவுக்கு துணி மற்றும் கோதுமை இரு பண்ட உற்பத்தியிலும் முழுப் பயன்பாட்டுத் தேர்ச்சி இருப்பது மேற்கண்ட உதாரணத்திலிருந்து தெளிவாகிறது, இந்தியா அமெரிக்காவிற்கு கோதுமையை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்து வாணிகத்தின் பலனை பெறலாம். இருப்பினும் அமெரிக்காவிற்கு கோதுமை உற்பத்தியில் ஒப்பீட்டு செலவு சாதகமாக உள்ளது. (80 / 120 < 90 / 100) இந்தியாவிற்கு துணி உற்பத்தியில் ஒப்புமைச் செலவு பாதகம் குறைவாக உள்ளது. கோதுமை, துணி உற்பத்தியில் இந்தியாவிற்கு பாதகம் குறைவாக இருப்பதால் இந்தியா துணி உற்பத்தியில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கோதுமையை இறக்குமதி செய்யதுகொள்ளலாம். பன்னாட்டு வாணிகத்தில் பண்ட பரிமாற்ற விகிதம் 0.88 லிருந்து 1.2 அலகு வரை துணி ஒரு அலகு கோதுமையாக இருந்தால் இரு நாடுகளும் நன்மை பெறும். பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடாமல் இந்தியாவும் அமெரிக்காவும் துணி மற்றும் கோதுமையை அவரவர்களே உற்பத்தி செய்ய இந்தியா 170 அலகு உழைப்பையும் அமெரிக்கா 220 அலகு உழைப்பையும் பயன்படுத்த வேண்டிவரும். மாறாக, பன்னாட்டு வாணிகத்தை அனுமதித்தால் 80 அலகு உழைப்பளவைக் கொண்டு உற்பத்தி செய்த ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் கொடுத்து 90 அலகு உழைப்பு தேவைப்படுகிற ஒரு மீட்டர் துணியை வாங்கிவிட முடியும். ஆக இந்தியா 160 அலகு மட்டுமே உழைப்பைப் பயன்படுத்தி இரண்டு மூட்டை கோதுமையை உற்பத்தி செய்து அதில் ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் ஒரு மீட்டர் துணியை பரிமாறிக்கொள்ளலாம். இதுவே பன்னாட்டு வாணிபத்தால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலனாகும். பத்து அலகு உழைப்பு மிச்சப்படுவதே பன்னாட்டு வாணிகத்தின் பலன் என்கிறார் ரிக்கார்டோ, இதே போன்று 200 அலகு உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்தி அமெரிக்கா துணி ஒரு மீட்டர் மற்றும் கோதுமை ஒரு மூட்டையை பெறமுடியும். துணி ஒரு மீட்டர் கோதுமை ஒரு மூட்டை உற்பத்தி செய்தால் 220 அலகு உழைப்பு தேவைப்படும். அமெரிக்காவுக்கு 20 அலகு உழைப்பு மிச்சப்படுவதையே பன்னாட்டு வாணிகத்தின் பலன் எனலாம்.

திறனாய்வு

1. உழைப்பு செலவு உற்பத்தி செலவில் ஒரு பகுதிதான். எனவே, உழைப்பு செலவு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடு உண்மையை பிரதிபலிக்கவில்லை .

2. பல்வேறு நாட்டுத் தொழிலாளிகள் ஒரே அளவு திறன் பெற்றவர்களல்லர்.



4. புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு

அறிமுகம்

சுவீடன் நாட்டு பொருளியல் அறிஞர் இலி ஹெக்சர் 1919ல் ஒரு பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டை விளக்கினார். அந்த கோட்பாட்டை மேலும் விளக்கங்களை கொடுத்து ஹெக்சரின் மாணவரான பெர்டில் ஒலின் விரிவுபடுத்தினார். இந்த கோட்பாடு ரிக்கார்டோவின் கோட்பாட்டின் விரிவாக்கமாகவும் அமைந்தது. நாடுகளுக்கிடையே உற்பத்தி வளங்களின் அளிப்பு அளவில் நிலவும் வேறுபாடே பன்னாட்டு வாணிகத்துக்கான காரணம் என்ற இலி ஹெக்சரின் உற்பத்தி வள வேறுபாடு கோட்பாட்டை புதிய பன்னாட்டு வாணிக கோட்பாடு என்றழைக்கிறோம்.

காரணி இருப்பு மாதிரி

* ஹெக்செர், ஒலின் உருவாக்கினார் 

* அதிகமான காரணி இருப்புகளைக் கொண்ட நாடுகள் உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சி பெற்று வாணிபத்தில் ஈடுபடலாம் 

* திறன் உழைப்பின் இருப்பு சிறப்புத் தேர்ச்சி ஏற்றுமதி திறனற்ற உழைப்பு கொண்ட நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள், பணிகளுக்குப் பரிமாற்றம் செய்தல் 

* ஏற்றுமதிகள் இருப்பு அதிகமாக உள்ள காரணியுடன் தொடர்புடையது இறக்குமதிகள் பற்றாக்குறையான காரணியுடன் தொடர்புடையது.  

* அதிக காரணிப் பெயர்வு என்பதை எடுகோளாகக் கொள்கிறது

கோட்பாடு

ஒப்புமைச் செலவு வேறுபாடே பன்னாட்டு வாணிகத்திற்கான காரணம் என தொன்மைப் கோட்பாடுகளில் காணப்படுகிறது. மேலும் தொன்மை கோட்பாடு உழைப்பை மட்டுமே உற்பத்தி காரணியாக கருதுகிறது. ஆனால் புதிய வாணிகக் கோட்பாடு ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கான காரணங்களை விளக்குகிறது. கீழ்கண்ட இரண்டு காரணங்களால் நாடுகளுக்கிடையே ஒப்புமைச் செலவு வேறுபடுகின்றது.

i) நாடுகள் பெற்றுள்ள உற்பத்தி காரணிகள் அளவு வேறுபடுகிறது.

ii) உற்பத்திக்குத் தேவைப்படும் உற்பத்தி காரணிகளின் விகிதமும் வேறுபடுகிறது.

எடுகோள்கள்

1. இரண்டு நாடுகள் இரண்டு உற்பத்தி காரணிகளை பயன்படுத்தி இரண்டு விதமான பொருட்களை உற்பத்தி செய்கிறது (2X2X2 மாதிரி). 

2. நாடுகள் வெவ்வேறு அளவுகளில் உற்பத்தி காரணிகளை பெற்றுள்ளது. 

3. பொருட்கள் அவற்றின் உற்பத்தியில் உற்பத்தி காரணியின் தேவைப்படும் அளவு தீவிரத்தன்மையை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. 

4. இரண்டு நாடுகளும் ஒரே விதமான உற்பத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 

5. இரண்டு நாடுகளும் ஒரே இயல்பான தேவையை பெற்றுள்ளன. 

6. இரண்டு நாட்டின் பொருள் மற்றும் உற்பத்தி காரணிகளுக்கான சந்தையில் நிறைவுப் போட்டி நிலவுகிறது.


விளக்கம்

மூலதனம் மிகுதியாக உள்ள நாடு அதிக முதலீட்டில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உழைப்பாளர்கள் மிகுதியாக உள்ள நாடு அதிக உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என ஹெக்சர் ஒலின் கூறுகிறார்கள். ஒரு உற்பத்தி காரணி மிகுதியாகச் கிடைக்கிறதா பற்றாக்குறையாக உள்ளதா என்பது மற்ற காரணிகள் கிடைக்கும் அளவைப் பொருத்தது. ஒரு நாட்டின் மூலதன அளவிற்கும் மற்ற உற்பத்தி காரணி அளவிற்குமான விகிதம் மற்ற நாடுகளின் விகிதத்தை விட அதிகமாக இருந்தால் அந்த நாட்டை மூலதனம் மிகுந்த நாடு எனக் கருதலாம்.

உதாரண விளக்கம்


இந்தியா அதிக மூலதனம் உள்ள நாடு போன்று தோன்றினாலும் அமெரிக்காவே மூலதனம் மிகுந்த நாடாகும் என்பது அமெரிக்காவின் மூலதன உழைப்பு விகிதமான 1.25 இந்தியாவின் 0.8 விட அதிகமிருப்பதிலிருந்து புரிகிறது. கீழ்க்கண்ட வரைபடம் புதிய வாணிபக் கோட்பாட்டின்படி உலக வாணிகத்தில் பொருள் கலவை எப்படி இருக்கும் என விளக்குகிறது.



குறைபாடுகள்

1. நாடுகளில் உற்பத்தி காரணிகளின் இருப்பளவு காலத்திற்கேற்றாற் போல மாறலாம்.

2. உற்பத்திக் காரணிகளின் திறன் நாடுகளுக்கிடையே வேறுபடலாம். உழைப்பாளர்களின் எண்ணிக்கை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அமெரிக்கா உழைப்பாளர் பற்றாக்குறை உள்ள நாடு போன்று தோன்றும். ஆனால் உழைப்பாளர்களின் உற்பத்தி திறனை கணக்கிலெடுத்துக் கொண்டால் அமெரிக்கா உழைப்பாளர்கள் மிகுந்த நாடாகும்.



5. தொன்மை மற்றும் புதிய கோட்பாடுகள் ஒப்பீடு


தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு

1. பன்னாட்டு வாணிபத்தை விளக்குவதற்கு உழைப்பைச் சார்ந்த மதிப்புக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

2. இது ஒரு காரணி (உழைப்பு) மாதிரியாகும்

3. ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உழைப்பாளர்களின் உற்பத்திதிறன் வேறுபாடுகள் காரணம் என்கிறது

 

புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு

1. பன்னாட்டு வாணிபத்தை விளக்குவதற்கு பொது மதிப்புக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

2. இது ஒரு காரணி (உழைப்பு, முலதனம் ) மாதிரியாகும்

3. ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு உற்பத்தி காரணிகளின் கிடைப்பளவு வேறுபாடே காரணம் என நம்புகிறது.




Tags : International Economics பன்னாட்டுப் பொருளியல்.
12th Economics : Chapter 7 : International Economics : Theories of International Trade International Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல் : பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் - பன்னாட்டுப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்