பொருளாதாரம் - பன்னாட்டுப் பொருளியல் | 12th Economics : Chapter 7 : International Economics
பன்னாட்டுப் பொருளியல்
நாடுகளின் பொருளாதாரம் பொருள், வாணிகம் மற்றும் நிதி சந்தைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
- டார்ன்புஸ்ச், பிசர் மற்றும் ஸ்டார்ட்ஸ்
புரிதலின் நோக்கங்கள்
1. பன்னாட்டு வாணிபத்தின் அவசியத்தையும், அதன் கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்ளுதல்.
2. செலாவணி விகித நிர்ணயம், மாற்றம் மற்றும் பன்னாட்டு வாணிபச் செலுத்து நிலை ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல்
3. பன்னாட்டு வாணிகம் மற்றும் பன்னாட்டு நேரடி முதலீடு பற்றி நுண்ணறிவைப் பெற்றுக் கொள்ளுதல்.
அறிமுகம்
பன்னாட்டுப் பொருளியல் பாடம் சில அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உருவாக்கப்பட்ட ஒரு எளிய பன்னாட்டு வாணிபக் கோட்பாட்டிலிருந்து தோன்றியது. முதன் முதலில் இப்பாடம் உலகத்தின் குறிப்பிட்ட பகுதியான மேற்கு ஐரோப்பாவில் உருவானது. ஆடம்ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, டாசிக், ஹேபர்லர், ஜே.எஸ்.மில், பேலா பாலஸா போன்ற தொன்மைப் பொருளியல் நிபுணர்களின் பங்களிப்புகளால் பன்னாட்டுப் பொருளியலின் பாடப்பொருள் வடிவமைக்கப்பட்டது.
பன்னாட்டுப் பொருளியல் பண்டங்கள், பணிகளின் வாணிபத்தை மட்டும் உள்ளடக்கிய சர்வதேசப் பொருளியல் நடவடிக்கைகளின் முழுப் பரப்பைப் படிப்பதோடு, மூலதன ஓட்டம், தொழில்நுட்ப மாறுதல், மாற்று விகிதப் பிரச்சினை, வாணிபச் செலுத்து சமநிலை, இறக்குமதி வரிகள், பாதுகாப்பு வாணிபக் கொள்கை, தடையற்ற வாணிபக் கொள்கை, முதலீட்டு ஓட்டம், தனிநாடுகளால் பின்பற்றப்படும் நிதி மற்றும் பணக்கொள்கைகளின் பங்கு ஆகியவற்றை ஒட்டிய கருத்துகளையும் கற்பிக்கிறது.