பன்னாட்டுப் பொருளியல் - பண மாற்று வீதம் | 12th Economics : Chapter 7 : International Economics

   Posted On :  16.03.2022 07:18 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

பண மாற்று வீதம்

ஒவ்வொரு நாட்டுக்கும் தனியான நாணயமும் நாணய வெளியீட்டு முறையும் உள்ளது. இவற்றை மற்ற நாட்டு பணமாக மாற்றும் செயல்முறைகளையும் விதிகளையும் மற்றும் அலுவலக அமைப்புகளையும் அந்நிய செலவாணி என்ற சொல் விரிவாக குறிக்கிறது.

பண மாற்று வீதம்

பண மாற்று வீதத்தை அந்நிய செலாவணி மாற்று வீதம் என்ற சொல்லை பயன்படுத்தியும் குறிப்பிடலாம்.



1. அந்நிய செலாவணியின் பொருள்விளக்கம் (FOREX)

ஒரு நாட்டின் மைய வங்கியின் இருப்பில் உள்ள மற்ற நாடுகளின் பணமே அந்நிய செலாவணி என பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Forex என்ற சுறுக்க சொல்லை பயன்படுத்தியும் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனியான நாணயமும் நாணய வெளியீட்டு முறையும் உள்ளது. இவற்றை மற்ற நாட்டு பணமாக மாற்றும் செயல்முறைகளையும் விதிகளையும் மற்றும் அலுவலக அமைப்புகளையும் அந்நிய செலவாணி என்ற சொல் விரிவாக குறிக்கிறது. இந்த அமைப்பு முறையே நாடுகளுக்கிடையிலான பண பரிவர்த்தனைக்கு வழிமுறைகளை செய்து கொடுக்கிறது.



2. செலாவணி வரைவிலக்கணம்

"அந்நிய செலாவணி என்பது ஒரு நாட்டின் பணத்தை மற்ற நாட்டுப் பணமாக மாற்றும் மற்றும் ஒரு நாட்டிலிருந்து பிற நாட்டிற்குப் பணத்தை மாற்றும் முறையே ஆகும்."



3. செலாவணி மாற்று வீதம்

அந்நிய செலாவணி சந்தையில் பரிவர்த்தனைகள் சந்தையில் நிலவுகின்ற பணமாற்று வீதத்தில் நடைபெறுகிறது. இது அயல் பண அளவில் உள்நாட்டு பணத்தின் மதிப்பாகும். நாடுகள் அவர்களின் பணத்தை பல முகமதிப்பு இனங்களாக (Denomination) பிரித்து வெளியிடுகிறார்கள். ஒரு அலகு அயல்பணத்தை பெறுவதற்கு எத்தனை அலகு உள்நாட்டுப் பணத்தை கொடுக்கிறோம். என்பதே பணமாற்று வீதமாகும். உதாரணமாக ஒரு அமெரிக்க டாலரைப் பெறுவதற்கு ₹ 75 இந்திய ரூபாய் கொடுப்பதை ரூபாய் டாலர் மாற்று வீதம் எனலாம். இதே போன்று மற்ற நாட்டு பணத்தில் இந்திய ரூபாயின் மதிப்பை இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளலாம். மாற்று வீதத்தை இரண்டு வகைகளில் குறிப்பிடலாம்.

1. ஒரு அலகு அயல் பணத்திற்கு (1 USD) எத்தனை அலகு உள்நாட்டுப் பணம் (₹) நிகரானது உதாரணமாக $1 = ₹75

2. எத்தனை அலகு வெளிநாட்டுப் பணத்துக்கு (USD) ஒரு அலகு உள்ளூர் பணம் (₹1) நிகரானது.

உதாரணமாக,

1 அமெரிக்க டாலர் = ₹70 அல்லது ₹1 = U.S 1.42 சென்ட்

₹1 =$1 => 1947 ₹70 = $1 => 2018




4. சமநிலை பணமாற்றுவீதம் - வரைவிலக்கணம்

"ஒரு குறிப்பிட்ட காலத்தில் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையில் நிறுத்தி வைக்கும் பணமாற்று வீதம் சமநிலை பணமாற்று வீதம்"

- ரேகனர் நர்க்ஸ் .



5. சமநிலை பணமாற்று வீதம் நிர்ணயமாதல்

அந்நிய செலாவணி பரும் சந்தையில் சமநிலை பணமாற்று வீதம் பொது விலை நிர்ணய கோட்பாட்டின்படி நிர்ணயமாகிறது. சந்தை விசைகளான தேவையளவும் வழங்களளவும் (அளிப்பு) ஒருங்கே செயல்பட்டு சமநிலை விலையை நிர்ணயிக்கும் என்பதே பொது விலை நிர்ணயக் கோட்பாடாகும். இக்கோட்பாட்டின்படி பார்த்தால் அந்நிய செலாவணிக்கான தேவையளவும் வழங்கலளவும் சமமாகுமளவில் சமநிலை பணமாற்றுவீதம் நிர்ணயமாகும். வரைபடத்தில் அந்நிய செலாவணி தேவை மற்றும் அளிப்பு வளைகோடுகள் சந்திக்கும் வெட்டுப்புள்ளியில் சமநிலை பணமாற்று வீதம் நிர்ணயமாகும்.


மேலே உள்ள வரைபடத்தில் செங்குத்து அச்சு பண மாற்று வீதத்தையும் படுகிடை அச்சு அந்நிய செலாவனிக்கான தேவை மற்றும் அளிப்பு அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன. E என்ற புள்ளியில் அந்நிய செலாவணி தேவை வளைகோடு அளிப்பு வளைகோட்டை வெட்டுகிறது. இந்தப் புள்ளியில் அந்நிய செலாவணி தேவை மற்றும் அளிப்பு அளவு ஒன்றுக்கொன்று சமமாவதால் பணமாற்று வீதம் சமநிலையை அடைகிறது. தேவையும் (DD) அளிப்பும் (SS) சந்திக்கும் வெட்டுப் புள்ளியில் (E) பணமாற்று வீதம் சமநிலையை அடைகிறது. தேவையும் அளிப்பும் OQ என்ற அளவில் இருக்கும் பொழுது நிர்ணயமாகும் OP2 என்ற பணமாற்று வீதமே சமநிலை பணமாற்று வீதமாகும்.



6. பண மாற்று வீதம் நிர்ணய முறைகள்

பண மாற்று வீதம் இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது. அவையாவன 1) நிலையான பணமாற்று வீதம் மற்றும் 2) மாறுபடும் நிலையற்ற பண மாற்று வீதம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிர்வகிக்கப்பட்ட பணமாற்று வீத நிர்ணமுறை ஒன்றும் உண்டு. இந்தியாவில் இவ்வகையான முறையே பின்பற்றப்படுகிறது.

1. நிலையான பணமாற்று வீதம்

மாறாத பணமாற்று வீதத்தை நிலையான பண மாற்று வீதம், மற்றும் நிலைநிறுத்தப்பட்ட பணமாற்று வீதம் என்ற பெயர்களாலும் குறிப்பிடலாம். ஒரு நாட்டின் அரசாங்கம் மைய வங்கியின் மூலம் பணமாற்று வீதம் நிர்ணயித்தால் அதை மாறாத பண மாற்று வீதம் என்கிறோம். தங்க மாற்று பன்னாட்டு பணவியல் முறையில் (Gold Standard) நாடுகளின் பணமாற்று மதிப்பு தங்கத்தின் அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

2. மாறுபடும் / நிலையற்ற பண மாற்று வீதம்

அந்நிய செலாவணி சந்தை விசைகளான மாறுகின்ற அந்நிய செலாவணிக்கான தேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கும் முறையே மாறுகின்ற பண மாற்று வீதமாகும். இதை மிதக்கும் பணமாற்று வீதம் என்றும் அழைக்கலாம்.



7. பணமாற்று வீத வகைகள்

கீழ்கண்ட நான்கு வடிவங்களில் பணமாற்று வீதத்தை வகைப்படுத்தலாம். அ) பெயரளவு பண மாற்று வீதம் ஆ) மெய்யான பண மாற்று வீதம் இ) பெயரளவு செயலாக்க பண மாற்று வீதம் (NEER) ஈ) மெய்யான செயலாக்க பண மாற்று வீதம் (REER). 

உதாரணமாக: $1 = ₹75 என்றால் பெயரளவு பணமாற்று வீதம் = 75/1 = 75 இது இருதரப்பு பெயரளவு பணமாற்ற வீதமாகும்.

மெய்யான பண மாற்று வீதம் = ePf/P


இங்கு P = உள்நாட்டு விலை

Pf = வெளிநாட்டு விலை (USD)

e = பெயரளவு பண மாற்று வீதம்

ஒரு பேனாவின் விலை இந்தியாவில் ₹ 50 அமெரிக்காவில் $ 5,

மெய்யான பணமாற்று வீதம் =75 × 5 / 50 = 7.5

மெய்யான பணமாற்றுவீதம் 1 என கணக்கிடப்பட்டால், இரண்டு நாடுகளின் பணமும் சமமான வாங்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக பேனாவின் விலை அமெரிக்காவில் $0.66 என்றால்

மெய்யான பண மாற்றம் = 0.66 × 75 / 50  € 1

இந்நிலையிலிருந்தால் இந்திய ரூபாயும் அமெரிக்க டாலரும் சமமான வாங்கும் ஆற்றல் பெற்றவையாக கருதலாம்.



8. பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

நாடுகளுக்கிடையிலான பன்னாட்டு வாணிக உறவுகளுடன் தொடர்புடைய பல காரணிகள் பணமாற்று வீதத்தை தீர்மானிக்கின்றன.



1. பண வீக்க அளவு வேறுபாடுகள்

பண வீக்க அளவும் பணமாற்ற வீதமும் தலைகீழ் தொடர்புள்ளவை. மற்ற நாட்டு பணத்துடன் ஒப்பிடுகையில் தொடர்சியாக குறைவான பண வீக்க அளவு நிலவும் நாட்டின் பணத்தின் வாங்கும் ஆற்றல் அதிகரிப்பதனால் குறைந்த பண வீக்க அளவு அந்த நாட்டின் பணமாற்ற வீதத்தை உயர்த்துகிறது. 

2. வட்டி வீத வேறுபாடுகள்

வட்டி வீதத்திற்கும் பண மாற்ற வீதத்திற்கும் நேரடி உறவு நிலவுகிறது. ஒரு நாட்டின் மைய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுக்க முடியும். இதன் விளைவாக பணமாற்று வீதம் உயரும் 

3. நடப்பு கணக்கு பற்றாக்குறை

அயல்நாட்டுச் செலுத்துநிலையின் நடப்பு கணக்கில் பற்றாக்குறை வரவைவிட செலுத்துகை அதிகமிருப்பதைக் காட்டுகிறது. அயல்நாட்டு செலாவணிக்கான கூடுதல் தேவை நாட்டின் பண மாற்று வீதத்தை குறைத்துவிடும்.

4. பொது கடன்

பொது கடன் பண வீக்கத்தை உருவாக்கும் பண வீக்கம் பண மாற்று வீதத்தை குறைத்து விடும்.

5. வாணிக விகிதம்

இறக்குமதி விலையைவிட ஏற்றுமதி விலை வேகமாக அதிகரித்தால் அந்த நாட்டின் வாணிப விகிதம் மேம்படும். சாதகமான வாணிப விகிதம் நாட்டின் ஏற்றுமதி தேவையை அதிகரிப்பது மேம்பட்டால் பணமாற்று வீதம் உயரும்.

6. அரசியல் மற்றும் பொருளாதார உறுதிநிலை

ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார உறுதியான சூழ்நிலை பணமாற்று வீதத்தையும் உறுதிபடுத்தும். பண மதிப்பு உயர்வதால் வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுக்கும்.

7. பொருளதார பின்னிறக்கம்

பொருளாதார பின்னிறக்க காலத்தில் ஒரு நாட்டில் வட்டி வீதம் வீழ்ச்சி அடையும். வட்டி வீத வீழ்ச்சி வெளிநாட்டு முதலீட்டை குறைத்து விடும். இதன் விளைவாக பணமாற்று வீதமும் வீழ்ச்சி அடையும்

8. ஊக வாணிகம்

ஒரு நாட்டின் பணமாற்று வீதம் குறுகிய காலத்தில் அதிகரிக்குமென கணிக்கப்பட்டால் நிதி சந்தை ஊக வாணிப முதலீட்டாளர்கள் மத்தியில் அந்த நாட்டின் பணத்திற்கு தேவை கூடும். இதனால் அந்த நாட்டின் பண மாற்று வீதம் அதிகரிக்கும். 

மேற்கண்ட காரணிகள் மட்டுமல்லாமல் உலக அரசியல் சூழ்நிலையும் ஒரு நாட்டுக்கெதிராக பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரமும் பண மாற்று வீதத்தை தீர்மானிக்கும் ஆற்றல் மிக்க காரணிகளாகும்.


Tags : International Economics பன்னாட்டுப் பொருளியல்.
12th Economics : Chapter 7 : International Economics : Exchange Rate International Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல் : பண மாற்று வீதம் - பன்னாட்டுப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்