பொருளாதாரம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் | 12th Economics : Chapter 7 : International Economics
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம்
பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் பல பாகங்களை உள்ளடக்கியது. அவை கீழ் கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. தூய வாணிபக் கோட்பாடு
நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கான காரணங்கள், எந்த வகையான பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன, எந்தெந்த வகையான நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகிறது, வாணிகம் செய்யப்படும் அளவு, அயல் வாணிப விகிதம், பண மாற்று விகிதம் பன்னாட்டு பொருள் வாணிக செலுத்துநிலை மற்றும் அயல் வாணிக செலுத்து நிலை ஆகியவற்றை விவரிக்கும் பிரிவே தூய வாணிப கோட்பாடாகும்.
2. கொள்கைச் சச்சரவுகள்
நாடுகளுக்கிடையேயான வாணிக உறவுகளை கட்டுப்படுத்துவதா, தடைகளற்ற வாணிகத்தை அனுமதிப்பதா போன்றவற்றை இப்பிரிவு விவாதிக்கிறது. பொருள் வாணிகம் முதலீடு மற்றும் தொழில்நுட்பம் இடம் பெயர்தல், அயல் வாணிகத்தின் மீது வரிவிதித்தல், மானியம் வழங்குதல், பன்னாட்டு விலை பேதம், செலவாணிக் கட்டுப்பாடுகள், பன்னாட்டு நிதி உதவி மற்றும் பன்னாட்டுக் கடன் அன்னிய நேரடி முதலீடு, அயல்நாட்டுச் செலுத்துநிலைத் தீர்வுகள் ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் அடங்கும்.
3. பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களும்
இந்த பிரிவு பன்னாட்டுக் கூட்டமைப்பு, சுங்கவரி ஒன்றியங்கள், பணவியல் ஒன்றியங்கள் மற்றும் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, அமைப்புகளின் மூலமாக நாடுகளின் பொருளாதாரம் இணைக்கப்பட்டுள்ளதை விவரிக்கிறது. பன்னாட்டு வாணிக நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இப்பிரிவு விவாதிக்கிறது.
4. பன்னாட்டு நிதி மற்றும் வாணிப ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள்
பன்னாட்டுப் பண நிதியம், மறு கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி (உலக வங்கி), உலக வர்த்தக நிறுவனம் மற்றும் வாணிகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகள் நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கும் விதம் பற்றி இப்பிரிவில் புரிந்து கொள்ளலாம்.