Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு

தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு - தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India

   Posted On :  18.05.2022 05:47 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு

ஒரு பழங்குடிச் சமூகம் நன்கு கட்டமைக்கப்பட்ட சமூகமாக மாற்றம் பெறும் பொழுதும் அதிகாரமிக்க முடியாட்சி முறையிலான நிர்வாகமுறை உருவாகும் போதும் தனது அதிகாரத்தை நியாயப்படுத்திக்கொள்ள அதற்கு ஏதாவது ஒரு மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு

ஒரு பழங்குடிச் சமூகம் நன்கு கட்டமைக்கப்பட்ட சமூகமாக மாற்றம் பெறும் பொழுதும் அதிகாரமிக்க முடியாட்சி முறையிலான நிர்வாகமுறை உருவாகும் போதும் தனது அதிகாரத்தை நியாயப்படுத்திக்கொள்ள அதற்கு ஏதாவது ஒரு மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. பௌத்தமும் சமணமும் பெரும்பாலும் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டன. அரசுகளும் அவற்றை ஆதரித்தன. பக்தி இயக்கம் நிலவுடைமைச் சாதிகளிடையேயிருந்து தோன்றியதால் அது பௌத்தத்தையும் சமணத்தையும் விமர்சனம் செய்தது. இதன் விளைவாக அரசர்களின் ஆதரவைப் பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன. பக்தியானது சாதி, பாலின வேறுபாடுகளின்றி அனைவராலும் அணுக இயலும் என்ற நிலையை ஏற்படுத்தியதன் மூலம் சமணமும் பௌத்தமும் பிராமணர்களின் அதிகாரத்தை எதிர்த்தன.

பௌத்த மற்றும் சமணத்தோடு மோதல்

சான்றுகள்: பக்தி இலக்கியங்கள், பெரும்பாலும் புராணங்கள், திருத்தொண்டர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் ஆகியவை தமிழகத்தில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன. தேவாரமானது அப்பர் (திருநாவுக்கரசர்) சம்பந்தர் (திருஞான சம்பந்தர்) சுந்தரர் ஆகிய மூவரால் எழுதப்பட்டப் பாடல்களைக் கொண்டவை. இவை மூன்றும் சேர்ந்து பன்னிரு சைவத்திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாக இடம் பெறுகின்றன. மாணிக்கவாசகரின் பாடல்கள் எட்டாவது திருமுறை ஆகும். இவற்றில் பல பாடல்கள் பெளத்தர்களையும் சமணர்களையும் பற்றிய விமர்சனங்களை விவரிப்பவையாகும். அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி கூறும் சேக்கிழாரின் பெரிய புராணம் பக்தி இயக்கம் குறித்த முக்கியச் சான்றாகும். வைணவ அடியார்களான ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்வியப்பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பக்தி இயக்கப் பாடல்களின் முக்கியத்துவம் யாதெனில் அவை இன்றுவரை மக்களால் படிக்கப்படுகின்றன, பாடப்படுகின்றன, வணங்கப்படுகின்றன. அவை தமிழ் இலக்கிய மரபின் முக்கியப் பகுதியாகவும் விளங்குகின்றன.

ஆரம்ப கால மோதல்கள்

பல்லவர் காலத்தில்தான் முதன்முதலாகச் சைவமும் வைணவமும் ஒருபுறமாகவும் சிரமணப் பிரிவுகளான சமணம், பௌத்தம் மறுபுறமாகவும் இருந்து மோதிக்கொண்டன.

முதலாம் மகேந்திரவர்மப் பல்லவர் சமணத்தைப் பின்பற்றியதால் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தினார். அப்பர் தொடக்கத்தில் சமணராக, தர்மசேனன் எனும் பெயருடனிருந்தார். பின்னர் தனது தமக்கையின் செல்வாக்கால் சைவமதத்தைத் தழுவினார். சில சமணர்களால் தூண்டப்பட்ட மகேந்திரவர்மன் அப்பரை மீண்டும் சமணராக மாறும்படி வற்புறுத்தினார். அப்பர் மறுத்தபோது துன்புறுத்தப்பட்டார். முடிவில் மகேந்திரவர்மனே சைவமதத்திற்கு மாறிய போது பிரச்சனை முடிவுக்கு வந்தது.

மரபுசார்ந்த ஒரு கதையின்படி சம்பந்தர் இறையியல் வாதங்களில் சமணர்களை வென்றதால் தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். கூன் பாண்டியன் எனவும் அறியப்பட்ட மாறவர்மன் அரிகேசரி (640-670) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிய பின்னர் சம்பந்தருடைய செல்வாக்கால் மீண்டும் சைவரானார். ஒரு சைவக் கதையின்படி சைவத்திற்குத் திரும்பிய பின்னர் சமணர் பலரை மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் கொல்லும்படி ஆணையிட்டதாகவும் தெரிகிறது.

சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்குகின்றன. சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றான சிவஞானசித்தியாரில்பரபக்கம்என்ற பெயரில் தனிப் பிரிவொன்றுள்ளது. அது பௌத்த சமண வாதங்களை முற்றிலுமாக எதிர்க்கின்றது. பக்தி இலக்கியங்களும் திருத்தொண்டர்களைப் பற்றிய நூல்களும் மோதல்கள் ஏற்பட்ட நிகழ்வுகளையும் புறச்சமயத்தார் தோற்கடிக்கப்பட்டதையும் விளக்குகின்றன. அவ்வாறான மோதல்கள் இறுதியில் வன்முறை சார்ந்ததாக மாற்றம் பெற்று பல சமணத் துறவிகள் கழுவில் ஏற்றப்பட்டதில் முடிந்ததெனக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.

தத்துவம் சார்ந்த வாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் பக்தி இயக்கம் மன்னர் ஆதரவைப் பெற்றிருந்ததன் விளைவாக பௌத்தமும் சமணமும் தோல்வியைச் சந்தித்தன. பதினோராம் நூற்றாண்டில் இவ்விரு மதங்களும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. பௌத்தம் தமிழகத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் முற்றிலுமாகத் துடைக்கப்பட்டாலும் தமிழ்மொழி பேசுகின்ற சமணர்கள் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். சமண பௌத்த கோவில்களும் கருவறைகளும் பெரும்பாலும் சிதைக்கப்பட்டன, அல்லது பயன்பாட்டில் இல்லாமல் ஆயின. கலைப்பொருட்கள் பல புறக்கணிக்கப்பட்டன அல்லது கொள்ளை போயின. இன்றைய அளவிலும் தமிழ்நாட்டின் பலபகுதிகளில் தலைப்பகுதி உடைக்கப்பட்ட புத்தர், சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைக் காணமுடிகிறது.

இவ்வாறு இருந்தபோதிலும் வைதீகமும் புறச் சமயங்களும் ஒன்றோடொன்று கருத்து பரிமாற்றம் செய்துகொண்ட அடையாளங்களும் காணப்படுகின்றன. பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக்கருத்தான துறவறத்தை சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன. பௌத்தம், வைணவம் ஆகிய இரண்டும் எளிமையையும் உலக சுகங்களை மறுப்பதையும் முன்னிறுத்திய போது பக்தி இயக்கம், விழாக்கள், சடங்குகள் என வாழ்க்கையைக் கொண்டாடியது. சைவ உணவு, கொல்லாமை ஆகிய மதிப்பு வாய்ந்த நெறிகளும் பரஸ்பர செல்வாக்கின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம். புறச் சமயங்கள் வடமொழியான பிராகிருதத்தைப் பயன்படுத்தியதற்கு எதிர்வினையாக தமிழ்மொழிக்கு மேலதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பௌத்தமும் சமணமும் ஊழ்வினைக் கோட்பாட்டை பேசியபோது பக்தி இயக்கத்தை விளக்கியவர்கள் சிவனையும் விஷ்ணுவையும் சரணடைவதன் மூலம் விதியை வெல்லமுடியும் எனக் கூறினர்.

பெளத்தம், சமணம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக வேதமதங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாயின.

Tags : Bhakti Movement in India தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு.
11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India : Bhakti Movement in the South Bhakti Movement in India in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் : தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு - தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்