இந்தியாவில் பக்தி இயக்கம் - பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India
பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள்
கபீர்
இடைக்கால இந்தியாவின் மிக முக்கியமான பண்பாட்டு ஆளுமையாகக் கபீர் கருதப்படுகிறார். புனிதங்கள் எனக் கருதப்பட்டவற்றை கேள்விக்குறியாக்கும் அவருடைய பாடல்கள் சடங்குகள், சம்பிரதாயங்களைக் கேலிக்குரியதாக்கி, கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன. இவருடைய கருத்துகளால் கவரப்பட்ட மக்கள் இவரைப் பின்பற்றினர். அவருடைய வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவான செய்திகளே கிடைத்துள்ளன. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இராமானந்தரின் சீடராக, அவரிடமிருந்து வேதாந்தத் தத்துவத்தைக் கற்றுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. பிரபலமான, தஸ்கிரா-இ-ஆலியா-இ-ஹிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எனும் நூல் அவரை சூபி துறவியான ஷேக் தகி என்பவரின் சீடராகச் சித்தரிக்கிறது. முற்போக்கான மதச் சிந்தனைகளைக் கொண்ட கபீர் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார். இந்து சமூகத்தின் கீழ்த்தட்டுகளைச் சார்ந்த மக்கள் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டனர். உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார். அதே சமயத்தில் இஸ்லாமிலிருந்த சம்பிரதாயங்களையும் கடுமையாக விமர்சித்தார். கடவுளின் மேல் உண்மையான பற்றுதலைக் கொண்டிருந்த அவர் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் தடைகளை உடைக்க முயன்றார். கடவுளை அடைய அவர் கண்டடைந்த பாதை கீழ்நிலையில் உள்ளோர்க்கும் மேல் நிலையில் உள்ளோர்க்கும் ஏற்புடையதாயிருந்தது. அவருடைய பாடல்கள் இன்றுவரை இந்தியாவின் பலபகுதிகளில் பாடப்பட்டுவருகின்றன.
ரவிதாஸ்
ரவிதாஸ் 15, 16ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞரும் துறவியுமாவார். பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களால் குருவாக வணங்கப்படுபவர். அவர் இயற்றிய பக்திப் பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ரவிதாஸின் வாழ்க்கை விவரங்களைப் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. கிடைத்துள்ள செய்திகளிலும் முரண்பாடுகளுள்ளன. பெரும்பான்மையான வரலாற்றறிஞர்கள் அவரை தோல் பதனிடுவோர் குடும்பத்தைச் சேர்ந்தவரெனக் கூறியுள்ளனர். இவர் பக்தி இயக்கத்துறவியும் புலவருமான இராமானந்தரின் சீடர்களின் ஒருவராவார். சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.
குரு நானக் (1469-1539)
குரு நானக் மிகப்பெரும் அமைப்பின் செல்வாக்குமிக்க துறவியாவார். அவரால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய , ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு ஒற்றுமைச் சிந்தனையைப் பறை சாற்றுகிறது. ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கிய மதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும், ஒழுக்க நெறிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறியது. இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது. சீக்கிய மதப் போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின. அக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி அடக்குமுறைக்கு வழி வகுத்து இறுதியில் குருக்களின் உயிர்த்தியாகத்தில் முடிந்தது. குரு கோவிந்த சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார். அவருக்குப் பின்னர் கிரந்த சாகிப் (புனித நூல்) குருவாகக் கருதப்பட்டது. குரு நானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் ஆகும். ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தர், சைதன்யர், நாமதேவர், கபீர், ஷேக் பரித் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின் சூபி துறவிகளின் போதனைகளும் ஆதி கிரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது
சைதன்யர் (1485-1533)
வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் பக்தி இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையை பிரதிபலித்தார். கபீர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த பக்தி இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார். அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்கும் இறைவனை புரிந்துகொள்ள மக்களை ஒருங்கிணைத்த கபீரைப் போலல்லாமல் சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக்கொண்டார். வேறு வகையில் சொல்வதென்றால் சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும். விஷ்ணுவின் பல வடிவங்களில் பரவசத்தைத் தரும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்குத் திரும்புவதாகும்.
வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர் திருத்த முயலவில்லை . மாறாக விஷ்ணுவின் மேல் பக்தி கொள்ள வற்புறுத்தினர். இருந்த போதிலும் பல சமூகங்களிலிருந்து சைதன்யருக்குச் சீடர்கள் உருவாயினர். சைதன்யர் இறை வழிபாட்டில் குழுவாகக் கூடிப் பாட்டிசைத்து அத்துடன் பரவசத்தை ஏற்படுத்தும் நடனமாடும் பழக்கத்தைப் பிரபலமாக்கினார் அவருடைய இயக்கம் வங்காளத்திலும் ஒரிசாவிலும் பிரபலமானது.
நாமதேவர்
மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் நரஸ் வாமணி எனும் கிராமத்தில் தையல் கலைஞரின் மகனாகப் பிறந்த நாமதேவர், ஜனதேவர் எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார். பந்தர்பூரிலுள்ள விட்டலா (விஷ்ணு அவதாரம்)வின் மேல் தீவிர பக்தி கொண்ட நாமதேவர் தன் சீடர்களுடன் பெரும்பாலான நேரத்தை இறை வழிபாட்டிலும் தானே இயற்றிய பாடல்களைப் பாடுவதிலும் கழித்தார். மராத்திய, இந்தி மொழிகளில் "அபங்க" (மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து மத குருமார்கள் இறைவனைப் புகழ்ந்து எழுதிய பாடல்கள்) என்றழைக்கப்பட்ட பாடல்களை எழுதினார். அவர் பஞ்சாப் வரை பயணம் மேற்கொண்டார். பஞ்சாபிலும் அவருடைய போதனைகள் பிரபலமாயின. பின்னர் அவை குருகிரந்தத்தில் சேர்க்கப்பட்டன. “முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள், மதப் பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள். உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள்" என்பனவே அவருடைய செய்திகளின் சாரமாகும்.
இராமானந்தர் (1400-1476)
சைதன்யர் மாதாவாச்சாரியாரின் (வேதாந்தத்தில் துவைதக் கொள்கையை முன்னிறுத்தியவர்) தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர். இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். பிரயாகையில் (அலகாபாத்) பிறந்த இராமானந்தர் காசியில் இந்து மதத் தத்துவத்தில் உயர்கல்வியைக் கற்று இராமானுஜரின் பள்ளியில் போதகராகப் பணியிலமர்ந்தார். வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த அவர் வைணவத்தை போதித்தார். இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்று தானே உருவாக்கிய புதிய கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார். சாதிமுறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தார். சமூகத்தின் அடித்தளத்தைச் சேர்ந்த மக்கள் இவரைப் பின்பற்றினர். ரவிதாஸ், கபீர் மற்றும் இரண்டு பெண்கள் அவருடைய பன்னிரண்டு சீடர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பது மரபு. பிராந்திய மொழியான இந்தியில் தனது கொள்கைகளை போதித்தவர்களில் முதலாமவர் இராமானந்தரே. இதன் காரணமாகவே அனைத்துத் தரப்பு மக்களாலும் அறியப்பட்டவரானார். இவருடைய சீடர்கள் மிதவாதிகள், முற்போக்கர்கள் என இரு பிரிவாகப் பிரிந்தனர்.
மீராபாய் (1498-1546)
மீராபாய் ராஜஸ்தானில், மேர்தா மாவட்டத்தில் குத் எனும் ஊரில் பிறந்தார். ஜோத்பூர் அரசை நிறுவிய ராணா ஜோதாஜியின் கொள்ளுப் பேத்தி ஆவார். இவர் மேவாரின் அரசனான ராணா சங்காவின் மகன் போஜராஜன் என்பாரை மணந்தார். கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையைவிட்டு வெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாடல்களைப் பாடவும் தொடங்கினார். கடவுளை கிருஷ்ணர் எனும் பெயரில் வணங்க வேண்டுமென்றும், பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது எனப் போதித்தார். அவருடைய பக்திப் பாடல்களும் இசைப்பாடல்களும் வளமான பண்பாட்டு மரபாகும். அவருடைய போதனைகள் தெய்வீகபக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.
சூர்தாஸ்
அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்த சூர்தாஸ் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகன் எனப் பலராலும் அறியப்பட்டவர். சூர்தாஸ் தில்லி சுல்தானியர் காலத்து, வைணவப் போதகரான வல்லபாச்சாரியாரின் சீடர் என நம்பப்படுகிறது. வல்லபாச்சாரியார் புஷ்தி மார்க்கத்தை (அருள் பாதை) நிறுவியவராவார். சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார். கடவுள் கிருஷ்ணரைக் குறித்து இந்தி மொழியில் உணர்வு பூர்வமான பாடல்களை இயற்றினார். சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய ‘பாலலீலா’ முக்கியக் கருப்பொருளாக விளங்கியது. அவருக்குக் கிருஷ்ணர் தெய்வீகமானவர். அவரைப் பொருத்த அளவில் காதல் என்பது உணர்வுபூர்வமான கருப்பொருளாகும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் மீது கோபியர் கொண்ட கட்டுப்படுத்த இயலாத காதலை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார். கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார். சூர்சாகர், சூர்சரவளி, சாஹித்ய லஹரி ஆகியன அவருடைய முக்கியப் படைப்புகளாகும். அவருடைய மாபெரும் படைப்பான சூர்சாகர் அல்லது சூர் சமுத்திரம் கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து மதுராவுக்கு புறப்படும் வரையிலான கதைகளைக் கொண்டுள்ளது.
துக்காராம்
துக்காராம் 1608ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார். சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் போன்றோரின் சமகாலத்தவர். தொடக்கத்தில் ஒரு வணிகராக இருந்த இவர் பின்னர் தனக்குப் பிரியமான கடவுளான பந்தர்பூர் விட்டலாவின் புகழைப்பாடும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டார்.
துக்காராம் கடவுள் வடிவமற்றவர் என நம்பினார். அவரைப் பொருத்த அளவில் உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தைத் துய்க்க முடியாது எனக் கூறினார். வேத வேள்விகள், சடங்குகள், புனிதப் பயணங்கள், உருவ வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கடவுள் பற்று மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார். சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார். அவர் தன்னுடைய ‘அபங்க’ பாடல்களை மராத்தி மொழியில் எழுதினார்.