இந்தியாவில் பக்தி இயக்கம் - சூபியிஸத்தின் தாக்கம் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India
சூபியிஸத்தின் தாக்கம்
இந்து மதத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு இணையாக இஸ்லாம் மதத்தில் அதைப் போன்ற கருத்துக்களை சூபியிஸம் கொண்டிருந்தது. சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும். இவர்கள் தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறை நிலையை உணர்ந்தவர்களாவர். 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது.
சூபியிஸம் இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த உள்முகமான, ஆச்சரியமான மற்றொரு பக்கமாகும். மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணிசெய்தனர் தத்துவ ஞானிகளான இவர்கள் தங்கள் பரந்த மனப்பான்மைக்காகப் பெயர் பெற்றனர். இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் எனசூபிகள் கருதினர். அவ்வழகைக் கண்டு ஆச்சரியப்படல் வேண்டும், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல் வேண்டும், முழுக்கவனத்தையும் இறைவன் மேல் குவித்தல் வேண்டும் என்றனர். அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர். பின்னாளில் சூபியிஸம் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது. சிஸ்டி, சுரவார்டி, குவாதிரியா, நஸ்பந்தி ஆகியன முக்கியப் பிரிவுகளாகும்.
சூபியிஸம் நகர்ப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேர்கொண்டது. சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சூபியிஸம் அனைத்து விதமான மதச்சம்பிரதாயம், பழமைவாதம் வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது. ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது. அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதே இயல்பாக இருந்த ஒரு சூழலில், போர்களாலும் போட்டிகளால் சூழல் பாழ்பட்டுக்கிடந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினர். சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்பின் கூரிய முனைகளை மழுங்கடித்து அவர்களிடையே சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.