உயிரிய பல்வகைத்தன்மை சட்டம்- (Biodiversity Act: BDA)
பல்வகைத்தன்மையை பாதுகாக்கவும், இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்குமான ஐக்கிய நாடுகளின் முயற்சியே உயிரிய பல்வகைத்தன்மை உடன்படிக்கையாகும். 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த "புவி உச்சி மாநாட்டில்" இவ்வுடன்படிக்கை இயற்றப்பட்டது. இதனை ஆதரித்து இந்தியாவும் கையொப்பமிட்டது. இதன் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் உயிரிய பல்வகைத்தன்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்தியாவில் உள்ள உயிரியப்பல்வகைத்தன்மை பாதுகாப்பு மற்றும் பரம்பரையாக உள்ள உயிரியல் வளங்கள் மற்றும் அனுபவங்களில் இருந்து கிடைக்கும் நன்மைகளை சமஅளவில் பகிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. இந்தியா உறுப்பு நாடாக உள்ள உயிரியப் பல்வகைத்தன்மை பாதுகாப்பு மாநாட்டின் முடிவுகளை நிறைவேற்றுவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது.
2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயிரியப் பல்வகைத்தன்மை சட்டத்தை (2002) நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் 2003 ஆண்டு தேசிய உயிரியப் பல்வகைத்தன்மை ஆணையம் (National Biodiversity Authority) அமைக்கப்பட்டது. இவ்வாணையம் பாதுகாப்பில் ஏற்படும் பிரச்சினைகள், உயிரிய வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் உயிரியல் வளங்களால் கிடைக்கும் பயன்களை நியாயமாகவும் சமஅளவிலும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் இந்திய அரசுக்கு உதவி செய்து நெறிப்படுத்தி ஆலோசனைகளை வழங்கும் சட்டபூர்வமான அமைப்பாகும். சென்னையை தலைமையகமாகக் கொண்டு இவ்வாணையம் செயல்படுகிறது.