உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
ஸ்டாக்ஹோம் பிரகடனம் 1972ன் படி இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக இயற்கை வளங்களான காற்று, நீர், நிலம், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை கவனத்துடன் திட்டமிட்டு மேலாண்மை செய்து இயற்கை சூழ்நிலை மண்டலங்களைப் பாதுகாக்க வேண்டும். உயிரின பல்வகைத்தன்மையின் பெரிய அளவிலான இழப்பு மற்றும் உலகளவிய தாக்கம் ஆகியவை பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.
உயிரின பல்வகைத்தன்மையின் பாதுகாப்பு என்பது உயிரின பல்வகைத்தன்மையை பேணிக்காத்தல் மற்றும் அறிவியல் ரீதியான மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதனால் இவைகளை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் வளங்களை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் தொடர்ச்சியான நன்மைகளைப் பெறலாம். மரபற்று போவதிலிருந்து சிற்றினங்கள் அவற்றின் வாழிடம் மற்றும் அவற்றின் சூழ்நிலை மண்டலம் ஆகியவற்றை சீரழிவிலிருந்து காப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பாதுகாப்பின் பொதுவான உத்திகள் :
· அபாயத்திலுள்ள அனைத்து சிற்றினங்களையும் அடையாளம் கண்டு பாதுகாத்தல்.
· பொருளதார முக்கியத்துவம் வாய்ந்த, உயிரிகளையும் அவற்றோடு தொடர்புடைய வன விலங்குகளையும் அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாத்தல்.
· உணவு, இனப்பெருக்கம், பேணி வளர்த்தல், ஓய்விடம் ஆகியவற்றுக்கான வாழ்விடங்களில் மிக ஆபத்தான நிலையில் இருப்பவைகளை அடையாளம் கண்டு பாதுகாத்தல்
· உயிரினங்களின் உறைவிடம், உணவு மற்றும் இனப்பெருக்க பகுதிகளைக் கண்டறிந்து பாதுகாத்தல்
· நிலம், நீர் மற்றும் காற்று முதலியவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாத்தல்.
· வன உயிரினங்களின் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படுத்துதல்.
பாதுகாப்பு உத்திகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. (அட்டவணை 12.4) அவை
i. சூழல் உள் பாதுகாப்பு (In - situ conversation)
ii. சூழல் வெளி பாதுகாப்பு (Ex- situ conservation)
உயிரினங்களின் மரபியல் வளத்தை இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை மண்டலங்களில் வைத்துப் பாதுகாத்தல் சூழல் உள் பாதுகாத்தல் ஆகும். இது ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உள்ள அனைத்து நிலை உயிரினத் தொகுப்புகளையும் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பதன் மூலம் அங்கு அழியும் ஆபத்திலுள்ள விலங்குகளையும் பாதுகாத்தல் ஆகும்.
மிக அதிக அளவு உயிரினச் செழுமையை கொண்ட பகுதிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அனைத்து உயிரினப் பன்மய புவிகோளத்தில் 2% க்கும் குறைவான நிலப்பரப்பினை கொண்டிருப்பினும் மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களை கொண்டுள்ளது. அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப்பகுதியை பாதுகாப்பதன் மூலம் தற்போது வாழும் உயிரினங்களைத் தக்க வைத்து கொள்ளலாம்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
இத்தகைய உயிரிய புவியமைப்புப் மண்டலங்களை இயற்கை மற்றும் கலாச்சார வளங்களுடன் உயிரியப் பல்வகைத்தன்மை பாதுகாக்கப்பட்டு, சட்டபூர்வமான முறையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. தேசியப் பூங்காக்கள், வன உயிரி புகலிடங்கள், சமூக காப்பிடங்கள் மற்றும் உயிர்க்கோள காப்பிடங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். உலகளவில் 37,000 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உலக பாதுகாப்பு கண்காணிப்பு மையம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் 16,2,099 ச.கி.மீ பரப்பளவில் 771 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இதில் தேசிய பூங்காக்கள் (104), வனவிலங்கு புகலிடங்கள் (544), உயிர்க்கோள காப்பிடங்கள் (18), மற்றும் பல புனித தோப்புகள் ஆகியவை அடங்கி உள்ளன.
தேசிய பூங்காக்கள் (National park)
இது சுற்றுசூழல், தாவர, விலங்கு, புவி அமைப்பியல் (அல்லது) விலங்கின கூட்டமைப்பு போன்றவற்றிற்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்று தேசிய பூங்காக்கள் உருவாக்குவதற்கென மாநில அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை வாழிடப் பகுதியாகும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act - WPA) 1972, பகுதி IVல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் படி மாநிலத்தின் முதன்மை வன உயிரி பாதுகாவலர் அனுமதித்த நபர்களை தவிர மற்ற மனித செயல்பாடுகளுக்கு தேசிய பூங்காக்களில் அனுமதில்லை (அட்டவணை 12.2.).
புலித்திட்டம்
நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1973ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது. 9 புலிகாப்பகங்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 50 புலிகாப்பகங்களை உள்ளடக்கியுள்ளது. புலிகள் காப்பிடங்கள் என மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நடந்துவரும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களின் புலித்திட்ட செயல்பாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. 1973 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இனப்பெருக்கத் திறனுடைய வங்கப்புலிகள் இயற்கை வாழிடங்களில் வாழ்வதையும் அவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதையும் மற்றும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புப் பகுதிகளை இயற்கை பாரம்பரியமாக பேணுவதையும் உறுதி செய்கிறது.
தேசிய புலிகள் காப்பக ஆணையம் (NTCA) என்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பாகும். உலகின் மொத்த புலி இனத்தின் எண்ணிக்கையில் பாதியளவு இந்தியாவில் காணப்படுகிறது. தேசிய புலிகள் காப்பக ஆணையம், ஜனவரி 20, 2015 அன்று வெளியிட்ட அறிக்கையில் தற்போதைய புலிகளின் எண்ணிக்கை 2,212 என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 40,501 ச.கி.மீ பரப்பில் 104 தேசிய பூங்காக்கள் அமைந்துள்ளன. இது நாட்டின் நிலப்பரப்பில் 1.23% ஆகும். (தேசிய வனவிலங்கு தரவுத்தளம், ஆகஸ்ட் 2018) தேசியப் பூங்கா என்பது உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் வனவிலங்குகளில் நல்வாழ்விற்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வளர்ச்சி, காடு வளர்ப்பு, வேட்டையாடல், மேய்ச்சல் மற்றும் வேளாண்மை, அத்துமீறி நுழைந்து திருடுதல் போன்ற நடவடிக்கைகள் எதுவும் அமைதிக்கப்படுவதில்லை.
தேசிய அழகினைப் பறைசாற்றும் இயற்கை எழில் நிறைந்த இப்பெரிய பகுதி அறிவியல் கல்வி மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது. இவற்றின் வளங்களை வணிகரீதியாக பயன்படுத்த இயலாது. அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா, ஒற்றை கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
வனவிலங்கு புகலிடங்கள் (Wild life Scantuaries; WLS)
ஏதேனும் காப்புக் காடுகள் அல்லது ஆட்சி எல்லைக்குட்பட்ட நீர்நிலைகள் தவிர பிற பகுதிகள் எதுவும் சூழ்நிலை, விலங்குகள், தாவரங்கள். புவியமைப்புகள், இயற்கை மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் பெற்றிருந்தால் அப்பகுதிகளை மாநில அரசு வனவிலங்கு புகலிடமாக அறிவிக்கலாம்.அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்பு இதன் நோக்கமாகும். சில வரையறுக்கப்பட்ட மனித நடவடிக்கைகள், புகலிடப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (விவரம்: பகுதி 6 வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் 1972). வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில் சுற்றுச்சூழல் சுற்றுலா அனுமதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள 544 புகலிடங்கள் சுமார் 1,18,918 ச.கி.மீ அளவிற்கு பரந்துள்ள ன. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 3.62% ஆகும். (தேசிய வனவிலங்கு தரவுத்தளம் 2017) காட்டுவிலங்குகளும் தாவரங்களும் வேட்டையாடப்படவும் திருடப்படவும் இன்றி அடைக்கலம் பெறும் நிலப்பகுதியே வனவிலங்குப் புகலிடம் எனப்படும். வன உற்பத்தி பொருட்கள் சேகரிப்பு, நெறிமுறைகளுக்குட்பட்டு மரம் வெட்டுதல், தனியார் நிலவுடமை போன்ற பிற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் உள்ள பெரியார் வனவிலங்கு புகலிடம் ஆசிய யானை மற்றும் இந்திய புலிகளுக்கு புகழ்பெற்றதாகும் (அட்டவணை 12.3).
உயிர்கோள காப்பிடங்கள் (Biosphere reserves)
நிலச்சூழ்நிலை மண்டலம், கடற்கரை / கடல் சூழ்நிலை மண்டலம் மற்றும் இவை கலந்து காணப்படும் சூழ்நிலை மண்டலங்களில் பரந்து விரிந்து காணப்படும் இயற்கை மற்றும் கலாச்சார நிலத்தோற்றத்தின் மாதிரிப் பகுதியே உயிர்க்கோள காப்பிடங்கள் என யுனெஸ்கோ சர்வதேச அளவில் நிர்ணயம் செய்துள்ளது. உயிரிய பல்வகைமை பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் மதிப்புகளோடு இணைந்த பராமரிப்பு ஆகிய பணிகளை உயிர்கோள காப்பிடங்கள் செய்கின்றன.உயிர்கோள காப்பிடங்கள் என்பது மக்கள் மற்றும் இயற்கை இருவருக்கும் அமைக்கப்பட்ட ஒரு சிறப்பான சூழலாகும். இங்கு ஒருவருக்கொருவர் தங்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து உடன் இணைந்து வாழ்வது மனிதர்களும் இயற்கை சூழலும் இணைந்து வாழ்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உயிர்கோள காப்பிடங்கள் திட்டத்தை யூனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்கோளத்திட்டம் (Man and Biosphere Reserve; MAB) வழிநடத்துகிறது. மனிதன் மற்றும் உயிர்கோள திட்டத்தின் அணுகுமுறையை ஆதரித்து இந்திய அரசு 1986ல் சையொப்பமிட்டு செயல்படுத்தியது. நாட்டில் 18 உயிர்கோள காப்பிடங்கள் உள்ளன. அகத்தியர் மலை (கர்நாடகா-தமிழ்நாடு-கேரளா), நீலகிரி (தமிழ்நாடு - கேரளா) மற்றும் மன்னார் வளைகுடா (தமிழ்நாடு) ஆகிய உயிர்கோள காப்பிடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
சூழல்வெளி பாதுகாப்பு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய தாவரங்கள் / விலங்குகளை அவற்றின் இயற்கை வாழிடங்களுக்கு வெளியே பாதுகாத்தல் ஆகும். இது வெளிப்புற சேகரிப்பு மற்றும் மரபணுவங்கி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
முதலை பண்ணை அறக்கட்டளை
சென்னை முதலை பண்ணை அறக்கட்டளை மற்றும் ஹெர்ப்பெட்டலாஜி மையம் (ஊர்வன இனங்களை பற்றிய அறிவியல் பிரிவு) என்பது புகழ்பெற்ற ரோமூலஸ் விட்டேக்கர் மற்றும் அவருடன் ஒத்த மனநிலைக் கொண்டவர்களின் மூளையிருந்து உதித்த குழந்தையாகும். 1976ம் ஆண்டு இதற்கான வேலை தொடங்கப்பட்டது. இந்தியாவில் குறைந்து வரும் முதலை இனத்தின் எண்ணிக்கையை உயர்த்துவதே இதன் இலக்காகும். கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சிறைப்பட்ட நிலை இனப்பெருக்கத்தின் மூலம் தவளை மற்றும் ஊர்வன இனத்தை பாதுகாத்தல் மற்றும் அதன் வாழிடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொள்கிறது. மேலும் முதலை வங்கியானது முதல்நிலை பாதுகாப்பிலும் இயற்கை நிலப்பரப்புகளை பேணுவதிலும் உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. தற்போது முதலை வங்கி சென்னைக்கருகில் ஊர்வனவற்றிற்கான பெரிய பண்ணை ஒன்றை அமைத்து இந்திய துணைக்கண்டம் முதல் நிக்கோபார் தீவுகள் வரை பல்வேறு களசெயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலை வங்கிக்கு ஆண்டுதோறும் 0.5 மில்லியன் பார்வையாளர்கள் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இது திகழ்கிறது.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூர்
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, சென்னையில் உள்ள வண்டலூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 602 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது பரப்பளவு அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும். இந்த பூங்கா பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற 180 சிற்றினங்களை உள்ளடக்கிய 2500 வன உயிரினங்களை கொண்டுள்ளது. இராஜகம்பீரமான வங்காள புலி, சிங்கவால் குரங்கு, நீலகிரி நெடுவால் குரங்கு, சாம்பல் ஓநாய் போன்ற அழியும் நிலையில் உள்ள விலங்குகளுக்கான சிறைபட்ட நிலை இனப்பெருக்க முறை மையமாகவும் சூழல்வெளி பாதுகாப்பு மையமாகவும் கடந்த 34 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.
இந்த விலங்கியல் பூங்காவில், பட்டாம்பூச்சி பூங்கா, குழந்தைகள் பூங்கா, பறவைப் பண்ணை வழியாக நடைபயண முறை, சிங்கம் மற்றும் மான்களை காண வாகன வனப்பயணம், வன அருங்காட்சியகம், வன தகவல் மையம் போன்ற பல மனம் கவரும் அம்சங்கள் உள்ளன. ஆண்டிற்கு சுமார் 21 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். " Zoo e-eye" என்ற பெயரில் விலங்கு மேலாண்மை மற்றும் பார்வையாளர் பாதுகாப்பு நலன் கருதி 24 மணி நேரமும் கண்காணிப்பு கோமராக்களை நிறுவி பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில் 24X7 விலங்கினங்களின் நேரடி அசைவுகளை பார்வையிடும் முறையை உலகில் முதல் முறையாகக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வண்டலூர் விலங்கியல் பூங்கா என்ற பெயரில் ஒரு கைபேசி செயலி மூலம் அனுமதிசீட்டு முன்பதிவு, விலங்குகளை வழிதொடர்தல், விலங்கின தகவல் வாக்கியங்கள் மற்றும் கேட்போலி போன்ற பல சேவைகள் அளிப்பட்டு வருகிறது. மின்னணு முன்பதிவு சேவையும் உள்ளது.
விலங்கியல் பூங்கா, கல்வி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான விரிவாக்க நிகழ்ச்சிகளை நடத்துவதில் தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான "விலங்கியல் பூங்கா தூதுவர் என்ற நிகழ்ச்சிபள்ளி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் 400க்கு அதிகமான பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு "விலங்கியல் பூங்கா தூதுவர்" என பட்டம் சூட்டப்பட்டுள்ளது. மேலும் மீட்பு மையம் ஒன்றை நிறுவி காட்டு விலங்குகளை ஆபத்தில் இருந்து மீட்டு மன அழுத்தத்திலிருந்து அவை வெளிவர உதவிசெய்யப்படுகின்றது.
தகவல்:- இயக்குநர், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூர், சென்னை
வெளிப்புற சேகரிப்பு (Off site-collection)
தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வனவிலங்கு சுற்றுலா பூங்கா, ஆர்போரிட்டா (மரங்கள் மற்றும் புதர்களை கொண்ட காடுகள்) ஆகியவற்றில் வன உயிரினங்கள் மற்றும் வளர்க்கப்படும் உயிரினங்களைச் சேகரித்தல் வெளிப்புற சேகரிப்பு எனப்படும். உயிரினங்கள் சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கம் செய்யும் வகையில் நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, வனங்களில் மரபற்றுப்போன பல விலங்குகள் கூட விலங்கியல் பூங்காக்களில் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன. சிறைப்பட்ட நிலையில் இனப்பெருக்கம் அதிகரிப்பதால் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் காடுகளில் விடப்படுகின்றன. இம்முறையில் இந்திய முதலை மற்றும் கங்கை டால்பின் ஆகிய இனங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன.
மரபணு வங்கிகள் (Gene banks)
மரபணுவங்கிகள் என்பது மரபணு பொருட்களை பாதுகாக்கும் ஒரு உயிர் களஞ்சியமாகும். வணிகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ரகமான தாவரங்களின் விதைகளை விதைவங்கிகளில் நீண்ட காலங்களுக்கு சேமிக்கலாம், அழியும் நிலையில் உள்ள இனங்களின் இனச்செல்களை வளமாகவும் மற்றும் வீரியமாகவும் உறைநிலை பாதுகாப்புமுறைகள் மூலமாக நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கலாம். இருப்பினும் அனைத்து உயிரியல் வளங்கள் மற்றும் அனைத்து சூழ்நிலையை மண்டலங்களையும் காப்பாற்ற பொருளாதார ரீதியாக இயலாது. அழிவில் இருந்த காப்பாற்ற வேண்டிய சிற்றினங்களின் எண்ணிக்கை பாதுகாப்பு முயற்சிகளை விட அதிகமாகவே உள்ளது.
அட்டவணை 12.4 சூழ் உள்பாதுகாப்பிற்கும் சூழ் வெளிபாதுகாப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
சூழல்உள் பாதுகாப்பு
தாவர அல்லது விலங்கினங்களை அவற்றுக்குரிய தளங்களிலேயே பாதுகாக்கப்படுதல் அல்லது தாவர விலங்கின மரபணு வளங்களை இயற்கை சூழலில் பாதுகாத்தல்
அழியும் நிலையில் உள்ள தாவர அல்லது விலங்கினங்களை அவற்றின் இயற்கை வாழிடங்களில் பாதுகாத்தல் இம்முறையில் இயற்கை வாழிடங்களையே மீட்பது அல்லது கொன்றுண்ணி விலங்குகளிடமிருந்து சிற்றினங்களை பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்
தேசிய பூங்காக்கள், உயிர்கோள காப்பிடங்கள் வனவிலங்கு புகலிடங்கள் ஆகியவை சூழல் உள்ள பாதுகாப்பு யுக்திகளாகும்.
சூழல்வெளி பாதுகாப்பு
அழியும் நிலையிலுள்ள விலங்கு அல்லது தாவர இனங்களை தனிப்பட்ட இடங்களில் வைத்து சிறப்பாக பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகும்.
இனத் தொகையை மீட்டெடுக்க உதவுதல் அல்லது இயற்கையான வாழிடங்களைப் நெருக்கமாக ஒத்திருக்கும் அமைப்புகளைக் கொண்டு மரபற்றுப் போவதிலிருந்து பாதுகாத்தல்.
விலங்கியல் பூங்காக்கள், தாவரவியல் தோட்டங்கள் ஆகியவை பொதுவான சூழல் வெளி பாதுகாப்புக்கான திட்டங்களாகும்.
புனித தோப்புகள்
புனித தோப்புகள் அல்லது புனித மரங்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் மத ரீதியான சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களுக்கு புனித தோப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை .
'இயற்கைக்கான, உலக வனவிலங்கு நிதியம்' (World wild fund, WWF) என்பது 1961ல் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அரசு சாரா தொண்டு அறக்கட்டளையாகும். இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள கிளாண்ட், வாட் பகுதியில் அமைந்துள்து. வனங்களின் பாதுகாப்பு மற்றும் மனிதனின் சுற்று சூழல் மீதான மனிதனின் தாக்கங்களை குறைப்பது ஆகியவை இதன் முக்கிய குறிக்கோளாகும். முன்னதாக, உலக வனவிலங்கு நிதியம் என பெயரிடப்பட்டிருந்தது. 1998ல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது உயிர்க்கோளம் பற்றி அறிக்கை வெளியிடுகிறது.
இயற்கையைப் பாதுகாத்தல், பூமியிலுள்ள உயிரிகளின் பல்வகைத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களை குறைத்தல், சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களைப் பாதுகாத்தல், சிற்றினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் மீட்டெடுத்துப் பாதுகாத்தல் மற்றும் தான் சார்ந்துள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக உள்ளூர் சமூகத்தின் திறனை மேம்படுத்தப்படுத்துதல். தனிமனிதர்கள், சமூகம், அரசு மற்றும் வணிகம் ஆகியவற்றின் முடிவுகளில் பிரதிபலிக்கும் இயற்கை மதிப்பீடுகள் ஆகியவை உலக வனவிலங்கு நிதியத்தின் நோக்கங்கள் ஆகும்.
இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு (Zoological survey of India)
இந்தியாவின் விலங்கியல் கணக்கெடுப்பு என்பது 1916 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது விலங்கினங்களின் கணக்கெடுப்பு, புதிய விலங்கினங்களை கண்டுபிடித்தல், ஆராய்ச்சிகள் நம் நாட்டின் பல்வகைமையின் பல்வேறு அம்சங்களில் தொடர்புடைய அறிவை மேம்படுத்த வழிவகுகின்றது.
இதன் நோக்கங்கள்
* பல மாநிலங்களிலுள்ள உள்ள உயிரினங்களின் பல்வகைத்தன்மை, சூழ்நிலை மண்டலங்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தல், இருப்புநிலை கணக்கெடுத்தல் மற்றும் அவற்றைப் பட்டியலிடுதல்.
* அழியும் நிலையிலுள்ள மற்றும் ஓரிட இனங்கள் நிலைமையை அவ்வப்போது களஆய்வு செய்தல்
* இந்திய விலங்குகளின் செந்தரவுப் புத்தகம், இந்திய விலங்குகள் பற்றிய விவரங்களை தயாரித்தல்.
* தேர்ந்தெடுக்கப்பட்டட சிற்றினங்களைக் கொண்டு உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்ளப்படுதல்.
* தேசிய விலங்கு சேகரிப்புகளை பராமரித்து மேம்பாடு செய்தல்.
வாஷிங்டன் மாநாடு என்று அறியப்படும் இது அழியும் நிலை சிற்றினங்களில் சர்வதேச வர்த்தகத்தின் (CITES) மாநாட்டு உடன்படிக்கையாகும். இது அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒப்பந்தமாகும். 1963 ஆம் ஆண்டு IUCN உறுப்பினர்களின் கூட்டத்தில் இத்தீர்மானம் வரைவு செய்யப்பட்டு 1973 ஆம் ஆண்டு கையெழுத்து இடப்பட்டு ஜீலை 1975 இல் நடைமுறைக்கு வந்தது.
சர்வதேச அளவில் நடைபெறும் வன விலங்கு மற்றும் தாவர இனங்களின் வர்த்தகம், காடுகளில் வாழும் உயிரினங்களுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் 3,50,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான பல்வேறு நிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
உயிரியப் பல்வகைத்தன்மைக்கான உடன்படிக்கை (Convention on Biological Diversity CBD)
ஐக்கிய நாடுகளில் உயிரியப் பல்வகைத்தன்மைக்கான உடன்படிக்கையில் இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் டிசம்பர் 29, 1993ல் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின் படி, உயிரிய வளங்களை பாதுகாப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஒரு சர்வதேச திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க உடன்படிக்கையில் மரபியல் வளங்களின் மீதான உரிமை அந்தந்த நாட்டின் இறையாண்மை என அங்கீகரித்து "மரபுவழி வளங்களுக்குப் பொருத்தமான அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த மரபு சார் வளங்களை பயன்படுத்துவதின் மூலம் கிடைக்கும் பயன்களை நியாயமான பங்கிடுதல் குறித்தும் இது கணக்கில் கொள்கிறது.