பாடச்சுருக்கம்
உயிரியப் பல்வகைத்தன்மை என்பது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் மரபியல், சிற்றினம் மற்றும் சுற்றுச்சூழல் மண்டலங்களின் வேறுபாடுகளை உள்ளடக்கியது. இன்றைய பல்வகைத்தன்மை இயற்கை செயல்முறைகளால் வடிவமைக்கப்பட்ட பல பில்லியன் ஆண்டு கால பரிணாம வளர்ச்சி, மற்றும் மனிதனின் முயற்சிகளுக்கு கிடைத்த பலன் ஆகும். இன்றைய தேதி வரை புவியில் 2 மில்லியன் சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த சில நூறு ஆண்டுகளில் உயிரிய பல்வகைத்தன்மை பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக வளங்கள் அதிகமாக நுகரப்படுவதால் உயிரியல் வளங்களுக்கான தேவை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய வரைமுறையற்ற சுரண்டலின் விளைவாக பல்வேறு மட்டங்களிலும் உயிரின இழப்பு ஏற்படுகிறது. உயிரினங்கள் மனிதர்கள் குறுக்கிடுவதற்கு முன்பு நடந்த இயற்கை இழப்பு விகிதத்தை விட 100 மடங்கு அதிக வேகத்தில் இழப்பு ஏற்பட்டு வருவதாகத் தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. பல இனங்கள் அழிந்து புதிய இனங்கள் தோன்றினாலும் தற்போதைய கணக்குப்படி இந்த தொடர் இழப்பு நீடித்தால் இரண்டு நூற்றாண்டுக்குள் நாம் அனைத்து இயற்கை வளங்களையும் இழக்க வாய்ப்பு உள்ளது.
உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும். இந்த சிக்கலை கண்டறிந்ததால் அறிவியலாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பல்வகைத்தன்மையை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் நிலைப்படுத்துதல் ஆகியவற்றிக்கான வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர்.
இன்றைய பல்வகைத்தன்மையின் ஆபத்தான நிலையை இளைய தலைமுறையினர் உணரச் செய்வது அவசியமாகும். மேலும் அவற்றைப் பாதுகாக்கவும், நன்னிலையில் வைத்திருக்கவும், இளையோர் தன்னார்வலர்களாக மாற வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தலைமுறையினரும் இயற்கையின் பயன்களைத் துய்க்க முடியும்.