விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | 12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation
உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
பாடம் - 12
நீலகிரி வரையாடு அழியும் நிலையில் உள்ள விலங்காகும். அத்து மீறி நுழைந்து திருடுவதாலும் மற்றும் அதிகமாக வேட்டையாடப்படுவதாலும் அழியும் நிலையில் உள்ள விலங்கு என்று சிவப்பு பட்டியலில் IUCN வெளியிட்டுள்ளது.
பாட உள்ளடக்கம்
12.1 உயிரிய பல்வகைத்தன்மை
12.2 உலக மற்றும் இந்தியா அளவில் உயிரிய பல்வகைத்தன்மையின் முக்கியத்துவம்
12.3 இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள்
12.4 உயிரியப் பல்வகைத்தன்மையின் அச்சுறுத்தல்கள்
12.5 உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கான காரணங்கள்
12.6 சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு - (IUCN)
12.7 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
12.8 சிதைந்த விட்ட வாழிடங்களின் மீள் உருவாக்கம்
12.9 உயிரிய பல்வகைத்தன்மை சட்டம் - (BDA)
கற்றலின் நோக்கங்கள் :
* உயிரினப் பல்வகைத்தன்மையின் கோட்பாடு, அடுக்கு மற்றும் பாங்கு ஆகியவற்றை பற்றிய அறிவைப் பெறுதல்
* இந்திய பல்வகைத்தன்மையின் பரிமாணத்தை உணர்ந்து பாராட்டல்.
* இந்தியாவின் உயிரியப் – புவி மண்டலங்கள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல்.
* உயிரிய பல்வகைத்தன்மைக்கான அச்சுறுத்தல்களை ஆழ்ந்து நோக்கல்.
* உயிரினங்கள் மரபற்றுப்போவதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை புரிந்து கொள்ளுதல்.
* அழிந்து வரும் வாழிடங்களையும் , சுற்றுச் சூழலையும் மீட்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
* உயிரிய பல்வகைமை சட்டம் மற்றும் அதன் விதிமுறைளை பற்றி அறிதல்.
இப்புவிக் கோளத்தை நம்மோடு பகிர்ந்து வாழும் பல்வேறு வகையான உயிரினங்களான, தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் இவ்வுலகத்தை வாழ்வதற்கேற்ற அழகான இடமாக மாற்றுகின்றன. மலை உச்சி முதல் ஆழ்கடல் வரையிலும், பாலைவனங்கள் முதல் அடர்த்தியான காடுகள் வரையிலும் ஏறத்தாழ உலகின் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவை தங்களது பழக்கம், நடத்தை, வடிவம், அளவு மற்றும் நிறத்தால் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகின்றன. உயிரினங்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க பன்முகத் தன்மை, நம் பூமிகோளின் பிரிக்க முடியாத முக்கிய அங்கமாகும். இருப்பினும் தொடர்ந்து அதிகரித்து வரும் மானுட மக்கள் தொகை பெருக்கம் உயிரியப் பல்வகைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகிறது. உயிரியப் பல்வகைத்தன்மையின் கோட்பாடுகள், அடுக்குகள், பரிமாணம் மற்றும் பாங்கு, உயிரியப் பல்வகைத்தன்மையின் முக்கியத்துவம், இந்திய உயிரிய புவியமைப்பு மண்டலங்கள், உயிரியப் பல்வகைத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், உயிரியப்பல்வகைத்தன்மையின் அழிவிற்கான காரணங்கள், மரபற்றுப்போதல் மற்றும் உயிரிய பல்வகைத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை பற்றி இப்பாடத்தில் விளக்கப்படுகிறது.
நன்னீர், வன உயிரிகள், உணவு மற்றும் காலநிலை ஆகியன "இருந்தால் நல்லது" எனப்படுபவை அல்ல. அவற்றைப் பெற்றிருப்பது அவசியம் எனப்படுபவையாகும். இவை அனைத்தும் மனித குலம் உயிர் பிழைத்திருப்பதற்கு இன்றியமையாதவை நாம் ஒன்றிணைந்தால் நம் கோளத்திலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும் - நம்மையும் சேர்த்து.