வரலாறு - பௌத்தம் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects
பௌத்தம்
அவைதீக மதங்களிலேயே மிகவும் பிரபலமானது பெளத்தம்தான். இது பல்வேறு அரசர்களால் ஆதரிக்கப்பட்ட, செல்வாக்குமிக்க மதமாக உருவானது. இதன் கருத்துகள் மிகவும் செல்வாக்காக இருந்ததன் காரணமாக, அசோகர் இதை அரசாங்கக் கொள்கையாக ஏற்றார். ஏறத்தாழ சென்ற ஆயிரமாண்டுகளில் இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டாலும்கூட, அதற்கு வெளியே தொலைவிற்குப் பரவியது. இன்றும் தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் பெளத்தம் இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றது.
புத்தரின் வாழ்க்கை
கௌதம புத்தர் சாக்கிய இனக்குழுவின் அரசர் சுத்தோதனர், பட்டத்தரசி மாயாதேவி (மகாமாயா) ஆகியோரின் மகன் ஆவார். இயற்பெயர் சித்தார்த்தர். அவருடைய தாய் மகாமாயா கருவுற்றிருந்தபோது, ஆறு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை தன் கருப்பையில் புகுவதாகக் கனவு கண்டார். “பிறக்கப் போகும் குழந்தை உலகம் முழுவதற்கும் பேரரசனாக அல்லது உலகம் முழுவதற்குமான ஆசிரியனாக இருக்கும்” என்று அறிஞர்கள் ஆருடம் கூறினர்.
மகாமாயா தன் தாய்வீடு செல்லும் வழியில் கபிலவஸ்துவிற்கு அருகில் உள்ள லும்பினியில் உள்ள ஒரு பூங்காவில் சித்தார்த்தர் பிறந்தார். பட்டத்து இளவரசராக அவர் வளமாக வளர்ந்தார். யசோதராவை மணந்தார். அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான். ஒரு நாள் தனது தேரோட்டி சன்னாவுடன் தேரில் அரண்மனையை விட்டு வெளியே சென்றபோது, ஒரு கிழவரையும், ஒரு நோயாளியையும், இறந்த உடலையும், ஒரு பிச்சையெடுக்கும் துறவியையும் பார்த்தார். மக்களுடைய துன்பங்கள் கண்டு வேதனைப்பட்ட அவர் நிரந்தர உண்மையைத் தேடி, நள்ளிரவில் தன் அரண்மனையை விட்டு வெளியேறினார். அவருக்குப் பிரியமான குதிரையான காந்தகா பூட்டப்பட்ட தேரை தேரோட்டி சன்னா நகர்க்கு வெளியே வெகு தொலைவிற்கு ஓட்டிச் சென்றார். சித்தார்த்தர் தனது முடியை வெட்டி, களையப்பட்ட தன் உடை, நகைகளோடு தந்தைக்குக் கொடுத்தனுப்பினார். இது மஹாபிரஸ்கிரமனா என்று அழைக்கப்படுகிறது.
ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தர், சிறிது காலத்திற்கு அலார கலாமா என்பவரிடம் சீடராக இருந்தார். உத்தக ராமபுத்தர் என்ற துறவியிடமும் வழிகாட்டுதல் பெற்றார். இவர்களுடைய பாதைகள் சித்தார்த்தருக்கு மனநிறைவைத் தரவில்லை. கடுமையான விரதங்கள் மேற்கொண்டு, ஒரு கட்டத்தில் சாவின் விளிம்பிற்குச் சென்றுவிட்டார் சித்தார்த்தர். ஒரு நாள் அவர் பால் விற்கும் பெண்மணியான சுஜாதா என்பவர் கொடுத்த பாலில் சமைத்த சோறை உண்டுவிட்டு, புத்தகயாவில் ஒரு அரசமரத்தின் கீழ் தியானம் செய்ய ஆரம்பித்தார். நாற்பத்தியொன்பது நாள் தியானத்திற்குப் பிறகு, தமது முப்பத்தைந்தாவது வயதில் ஞானத்தை அடைந்தார். அதிலிருந்து அவர் புத்தர், அதாவது ஞானம் அடைந்தவர் என்று அழைக்கப்பட்டார். வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில் அவர் தனது முதல் உபதேசத்தை அளித்தார். அது தர்மச்சக்கரபரிவர்த்தனா எனப்படுகிறது. அவர் நான்கு சிறந்த உண்மைகள் பற்றியும், மத்திமப்பாதை பற்றியும் பேசினார். அவர் சங்கத்தை அமைத்து, தன் கருத்துக்களை வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கும் பரப்பினார். புத்தரும் அவருடைய சீடர்களும் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் பயணம் செய்தனர். மழைக்காலத்தின் போது நான்கு மாதங்கள் மட்டும் ஒரே இடத்தில் தங்கினர். அவர் தனது எண்பதாவது வயதில் குஷிநகரத்தில் மறைந்தார். அது பரிநிர்வாணம் என்று குறிப்பிடப்படுகிறது. சரிபுத்தர், மஹாமொக்கலனர், மஹாகச்சாயனர், ஆனந்தர் ஆகியோர் புத்தரின் முக்கியமான சீடர்கள் ஆவர். புத்தரை அரசர்கள் முதல் எளிய மக்கள் வரை ஏராளமானோர் பின்பற்றினர்.
பௌத்த சங்கங்கள்
புத்தரின் மரணத்திற்குப் பிறகு, பௌத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பௌத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப் போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடந்தன. முதல் பௌத்த சங்கம் புத்தரின் மரணத்திற்குப் பிறகு அஜாதசத்ரு காலத்தில் ராஜகிருகத்தில் நடந்தது. இதற்கு உபாலி தலைமை தாங்கினார். இந்த சங்கத்தில் உபாலி வினய பிடகத்தை வாசித்தார். ஆனந்தர் சுத்த பிடகத்தை வாசித்தார். இரண்டாவது பெளத்த சங்கம் புத்தரின் மரணம், அதாவது பரிநிர்வாணத்திற்கு நூறாண்டுகளுக்குப் பின், வைசாலியில் நடந்தது. பௌத்த மதம் ஸ்தவிரவதின்கள் அல்லது - பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் - என்றும், மகாசங்கிகா அல்லது பெரும் குழுவின் உறுப்பினர்கள் - என்றும் இரண்டு பிரிவுகளாகப்பிரிந்தது. மூன்றாவது சங்கம் பாடலிபுத்திரத்தில் நடந்தது. இதை அசோகர் கூட்டினார். இதற்குள் ஸ்தவிரவதின்கள் தம்மை வலுவாக நிறுவிக் கொண்டுவிட்டார்கள். தமக்கு எதிரான கருத்துக் கொண்டோரை மதத்திலிருந்து நீக்கினார்கள். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப் பகுதி சேர்க்கப்பட்டது. நான்காவது பெளத்த சங்கம் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்தது. சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவின் கொள்கைகள் மஹாவிபாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
பசித்த புலி : ஒரு ஜாதகக் கதை
நல்லொழுக்கத்திற்கும், ஆன்மீக நெறிக்கும் பெயர் பெற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த போதிசத்துவர் சிறந்த அறிஞராக, ஆசிரியராக உயர்ந்தார். செல்வம் பற்றிய ஆசை எதுவும் இன்றி, அவர் கானகம் சென்று துறவியாக வாழ்ந்தார். கானகத்தில் அவர் அப்போதுதான் பிரசவித்திருந்த பசியோடிருந்த புலியைப் பார்த்தார். புலி பசியில் தான் ஈன்ற குட்டிகளில் ஒன்றையே தின்ன இருந்தது. அருகில் வேறு உணவு எதுவும் இல்லாத நிலையில், போதிசத்துவர், இரக்கம் மேலிட, தனது உடலையே அதற்கு உணவாக அளித்தார்.
பௌத்தத்தின் பிரிவுகள்
மகாசங்கிகர்கள், ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின. மகாசங்கிகர்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது பௌத்தத்தில் மஹாயானம், ஹீனயானம் (பெரிய பாதை, சிறிய பாதை) ஆகிய பிரிவுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இந்தியாவில் மகாயானம் செல்வாக்குப் பெற்றது. பெளத்த கல்வியின் முக்கியமான மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. இது வங்காளத்தைச் சேர்ந்த ‘பால’ வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்குப் பரவியது. ஹீனயானம் இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. குப்தர்களின் ஆட்சியின் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடிமின்னல் பாதை உருவானது. இது வங்கம், பிகார் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றது. இது உள்ளூரின் புராதனப் பண்பாடுகளால் தாக்கம் பெற்று, பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் திபெத்திற்குப் பரவியது. பிகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன பௌத்தத்திற்கான முக்கியமான கல்வி நிலையமாகும். இந்தியாவில் பக்தி இயக்கத்தின் எழுச்சியின் காரணமாக பௌத்தம் வீழ்ச்சி பெறத் தொடங்கியது. விரைவிலேயே பௌத்தத்தை இந்துமதம் உள்வாங்க முனைந்தது. சில பாரம்பரியங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
பௌத்த இலக்கியங்கள்
பௌத்த இலக்கியங்கள் பாலி மொழியில் தொகுக்கப்பட்டன. பாலி பெளத்த சட்டங்கள் திரிபிடகங்கள் (மூன்று கூடைகள்) என்று அழைக்கப்பட்டன. அவை வினய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என்பவையாகும். வினய பிடகம் துறவறம் குறித்த விதிகளையும் ஒழுக்க விதிகளையும் கூறுவதாகும். சுத்த பிடகம் புத்தரின் போதனைகளைக் கூறுவது. அபிதம்ம பிடகம் பௌத்த தத்துவம் பற்றிப் பேசுகிறது. புத்தரின் போதனைகள் அடங்கிய சுத்த பிடகம் ஐந்து பகுதிகளாக அதாவது நிகாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தேராகதா, தேரிகதா (மூத்த பிட்சுகள், பிக்குனிகளின் பிரார்த்தனைப் பாடல்கள்), ஜாதகக் கதைகள் (போதிசத்துவராக முந்தைய பிறவிகளில் புத்தர் செய்த செயல்கள் பற்றிய கதைகள்) ஆகியவை அடங்கும்.
கிரேக்க - பாக்டீரிய அரசன் மினாண்டருக்கும், பௌத்தத் துறவி நாக்சேனருக்கும் நடக்கும் விவாதமானமிலிந்த பன்ஹா, இலங்கை வரலாற்றுக் குறிப்புகளான தீபவம்சம் (தீவு வரலாற்றுக் குறிப்புகள்), மகாவம்சம் (பெரும் வரலாற்றுக்குறிப்பு), குலவம்சம் (சிறிய வரலாற்றுக்குறிப்பு) ஆகியவை மற்ற சில முக்கியமான பெளத்த இலக்கியங்களாகும்.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள்
1. துன்பம் பற்றிய பெரும் உண்மை - பிறப்பு, வயது, மரணம், விரும்பத்தகாதவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது. (துக்கம்)
2. துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை - இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்றவற்றிற்கான ஆசையே துன்பத்திற்கான காரணமாகும். (துக்க நிவாரணம்)
3. துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) - துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை. (துக்கோற்பத்தி )
4. கர்மா அல்லது பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட நிர்வாண நிலையை அடைய வேண்டும். இந்நிலையை அடைய எண்வழிப்பாதை அல்லது மத்திமப்பாதையைப் பின்பற்ற வேண்டும். (துக்க நிவாரண மார்க்கம்)
புத்தரின் மத்திம வழி அல்லது எண்வழிப்பாதை (அட்டாங்க மார்க்கம்)
1. நன்னம்பிக்கை 2. நல்லர்வம் 3. நல்வாய்மை 4. நற்செயல் 5. நல்வாழ்க்கை முறை 6. நன்முயற்சி 7. நற்சிந்தனை 8. நல்ல தியானம்.
எனவே, புத்தர் கடவுள் பற்றிக் குறிப்பிடவோ, பேசவோ இல்லை. அவர் கடவுளின் இருப்பை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை. சமத்துவத்தை வலியுறுத்தியது. அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது. எனினும், அஹிம்சையைப் பொறுத்தவரை, சமணம் போல் தீவிரமாக இல்லாமல் மிதப் போக்கைக் கடைபிடித்தது. பௌத்தம் வீணடிப்பதற்கு எதிரானது, அது வணிகத்தையும் சிக்கனத்தையும் ஆதரித்தது. ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அது அனுமதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பௌத்தம்
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது. தக்காணப்பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுக்குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதைக் குறிப்பிடுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் பொ.ஆ. நான்காம் நூற்றாண்டில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததைத் தொல்லியல் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன. வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமா, பட்டினப்பாலையை ஆதாரமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் புலால் உணவுகளைத் தவிர்த்த, உயிர்ப்பலியை எதிர்த்த வணிகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் தாக்கத்தை உணர முடியும். சங்க காலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக் காப்பிய நூல்களில் ஒன்றான, சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். அதைப்போன்று ‘குண்டலகேசி’யும் ஒரு பெளத்த இலக்கியமாகும். பொது ஆண்டுத் தொடக்கத்தில் காஞ்சிபுரம் பௌத்தம் தழைத்தோங்கிய மையமாகவே இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்திற்குத் தலைமை தாங்கிய தின்னகர், தர்மபாலர் ஆகியோர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த அறிஞர்கள் ஆவர். தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததாக நம்பப்படும் யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில், அசோகரால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட பல ஸ்தூபிகளைக் குறிப்பிடுகிறார்.
பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனின் (பொ.ஆ 695-722) ஆட்சிக் காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோவில் கட்டப்பட்டது. சீனத்துறவி வு- கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார். பொ.ஆ.1006இல் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயிலைக் கட்டினார். அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சி
பௌத்தம் காலத்துக்குக் காலம் பிரிவுகளை எதிர்கொண்டது. அதில் ஏற்பட்ட ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா , தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத்தன்மையை இழக்கச் செய்தன. வட இந்தியாவில் பேச்சுமொழிகளாக இருந்த பாலி, பிராகிருதம் ஆகியவற்றில் பௌத்த மதச் செய்திகள் முதலில் பரப்பப்பட்டு வந்தன. கனிஷ்கரின் ஆட்சியில் நான்காம் பெளத்த சங்கம் நடத்தப்பட்டதிலிருந்து அவை சமஸ்கிருத மொழியில் எடுத்துச்செல்லப்பட்டன. எனவே பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப் பிறகு, பெளத்தம் அரச ஆதரவை இழந்தது. இதற்கு மாறாக, வேத மதம் முதன் முதலாகப் புஷ்யமித்தர சுங்கரிடமிருந்தும் பிற்காலத்தில் குப்தப் பேரரசர்களிடமிருந்தும் அரச ஆதரவைப் பெற்றது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமனுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலைநாட்டினர்.
ஹூணர்களின் படையெடுப்பு பௌத்தத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹூண ஆட்சியாளர்களான தோரமானர், மிகிரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பௌத்த மதத்தினரை கிட்டத்தட்ட அழித்தொழித்தனர். கூடவே இரஜபுத்திர ஆட்சியாளர்களும் இதில் ஈடுபட்டனர். அவர்களால் பௌத்தத்தின் கொல்லாமைக் கோட்பாட்டுடன் இணக்கம் காண முடியவில்லை. அவர்கள் வேத மதத்தின் தீவிரமான ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள். இராஜபுத்திரர்கள் பௌத்த மதத்தினரைத் துன்புறுத்துவதிலும் கொல்வதிலும் ஈடுபட்டனர். இறுதியாக, அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்தத் துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி, நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளில் அடைக்கலம் தேட வைத்தன. இதன் விளைவாக, பௌத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.