வரலாறு - கங்கைச் சமவெளியில் ஏற்பட்ட வளர்ச்சி | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects
கங்கைச் சமவெளியில் ஏற்பட்ட வளர்ச்சி
இக்காலகட்டத்தில் மத்திய கங்கைச் சமவெளிகளில் வேளாண்மை செழித்தது. நஞ்சை சாகுபடி முறையால் மற்ற பயிர்களைவிட அரிசி உற்பத்தி அதிகரித்தது. அதனால் தேவையான வேளாண் உபரி உருவானது. பாதுகாக்கப்பட்ட பாசன வசதி மட்டுமே அரிசியின் உபரி உற்பத்திக்குக் காரணமல்ல. இரும்புத் தொழில் நுட்பமும் முக்கியமான பங்காற்றியது. இரும்புக் கோடரி காடுகளைத் திருத்த உதவியதா? இரும்புக் கலப்பைக் கொழுமுனை வேளாண் உற்பத்தியை அதிகரித்ததா? என்ற கேள்விகள் இருந்தாலும், கைவினைப்பொருள் உற்பத்தி அதிகரித்ததில் இரும்புத் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்காற்றியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இரும்புக் கருவிகளின் அறிமுகம் பல்வேறு கைத்தொழில் நடவடிக்கைகளில் ஏற்படுத்திய தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டால்தான், இரும்புத் தொழில் நுட்பத்தின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். வேளாண் உபரி, தொழில்நுட்பம் ஆகியவற்றால் கிடைத்த ஓய்வு நேரம் கைத்தொழில் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. அது சிறப்பான வணிகத்திற்கு வழிவகுத்தது.
இரண்டாவது நகரமயமாக்கம்
வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி, பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தன. இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. முதவாவது நகரமயமாக்கம் ஹரப்பா நாகரிகத்தின் போது நிகழ்ந்ததாகும். கங்கைப்பகுதியில் கீழ்க்கண்ட பல்வேறு வகையான நகரங்கள் உருவாகின:
1. ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல், நிர்வாக மையங்கள்
2. உஜ்ஜையினி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்
3. வைசாலி போன்ற புனிதத் தலங்கள்