வரலாறு - சமணம் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects

   Posted On :  14.05.2022 06:28 am

11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

சமணம்

பல்வேறு பிரிவுகளில், வர்த்தமான மகாவீரரின் தலைமையிலான பிரிவு (பௌத்த இலக்கியங்களில் நிகந்த நடபுத்தர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்) சமணம் என்ற ஒரு மதமாக மலர்ந்தது.

சமணம்

பல்வேறு பிரிவுகளில், வர்த்தமான மகாவீரரின் தலைமையிலான பிரிவு (பௌத்த இலக்கியங்களில் நிகந்த நடபுத்தர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்) சமணம் என்ற ஒரு மதமாக மலர்ந்தது. இது முதலில் நிர்கிரந்தம் (தளைகளிலிருந்து விடுபட்டது) என்று அழைக்கப்பட்டது. மகாவீரர் ஜீனர் (உலகை வென்றவர்) என்று அழைக்கப்பட்டதால், அவரது பிரிவு ஜைனம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமணம் என்று அழைக்கப்படுகிறது. சமணப் பாரம்பரியத்தின் படி, சமணத்தை ஆதியில் தோற்றுவித்தவர் மகாவீரர் அல்ல. அவர் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர். சமண பாரம்பரியத்தின்படி அதைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்பவராவார். இவர் முதல் தீர்த்தங்கரராகக் கருதப்படுகிறார். யஜுர்வேதம் ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடுகிறது. மகாவீரர் தமது உறுப்பினர்களைத் துறவிகளாகவும், துறவறம் கொள்ளாது தம்மைப் பின்பற்றுபவர்களாகவும் திரட்டினார்.

மகாவீரரின் வாழ்க்கை

வர்த்தமானர் ஏறத்தாழ பொ.ஆ.மு. 540இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒருகணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சித்தார்த்தர், ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர். இவரது தாய் திரிஷலை ஒரு லிச்சாவி இளவரசி. அவர் லிச்சாவியின் தலைவர் சேதகரின் சகோதரியும்கூட. மகாவீரர் தன் தாய் வழியில் மகதம், அங்கம், விதேகம் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு நெருங்கிய உறவினர். சிறுவயதிலிருந்தே அவர் ஆன்மீக வாழ்வின்பால் ஈர்க்கப்பட்டார். பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகு, தமது முப்பதாவது வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். அவர் கடுமையான விரதத்தை மேற்கொண்டார். ஆடைகளைத் துறந்தார். இப்படித் திரிந்த காலத்தில் கோசால மாஸ்கரிபுத்திரரைச் சந்தித்து அவரோடு ஆறாண்டு காலம் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இப்படித் திரிய ஆரம்பித்த பதின்மூன்றாவது ஆண்டில், தனது நாற்பத்தியிரண்டாம் வயதில் வர்த்தமானர் ஞானத்தை அல்லது நிர்வாணத்தை அடைந்தார். பிறகு தீர்த்தங்கரர் ஆனார். ஜீனர் (வெற்றி பெற்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் முப்பதாண்டு காலம் உபதேசம் செய்தார். செல்வர்களும் மேட்டுக்குடியினரும் அவரை ஆதரித்தனர். பொ.ஆ.மு. 468 வாக்கில் தனது எழுபத்தியிரண்டாம் வயதில், ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார். சமண நம்பிக்கையின்படி, அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததாக நம்பப்படுகிறது. அவரது மரணம், அதாவது இறுதி விடுதலை சமணர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும்.


மகாவீரரை ஏராளமானோர் பின்பற்றினர். ஆரம்ப காலங்களில், இவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் வந்தனர். எனினும் காலப்போக்கில், சமணம் வணிகம், வட்டிக்குக் கடன் தருவோர் ஆகிய சமூகத்தினரோடு சுருங்கிவிட்டது. அகிம்சையை சமணம் மிகவும் வலியுறுத்தியதால், வேளாண்மை உள்ளிட்ட மற்ற தொழில்களை அவர்களால் செய்ய முடியாமல் போனது. ஏனெனில் இத்தொழில்களில் தெரிந்தோ, தெரியாமலோ பிற உயிர்களைக் கொல்ல நேரலாம்.

மகாவீரரின் மறைவிற்கு 500 ஆண்டுகள் கழித்து, சுமார் பொ.ஆ. 79 அல்லது 82இல், சமணத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. பத்ரபாஹு தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் உடைகள் எதுவுமின்றி இருந்தார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். மற்றவர்கள் ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தார்கள். இவர்கள் வெள்ளையுடை உடுத்தினார்கள். இவர்கள் ஸ்வேதாம்பரர்கள் (வெள்ளை ஆடை உடுத்தியவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள். இந்தப் பிளவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது. எனினும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா ஆகிய இடங்களில் தீவிரமாகச் சமணத்தைப் பின்பற்றுவோர் இருந்தார்கள்.

பத்ரபாஹு மரணமடைந்த பிறகு, ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இது சமண நெறிமுறைகளைத் தொகுத்தது. அத்தொகுப்பு பன்னிரண்டு அங்கங்களைக் (பாகங்களை) கொண்டது. இதைப் போன்ற மற்றொரு மாநாடு, பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில், குஜராத்தில் உள்ள வல்லபியில் நடந்தது. இது பன்னிரண்டு உப அங்கங்களைச் சேர்த்தது. சமணத் துறவிகள் மத நூல்களை எழுதியதோடு, மதச்சார்பற்ற இலக்கியத்தையும் வளர்த்தனர். அச்சரங்க சூத்திரம், சூத்ரகிருதங்கம், கல்பசூத்திரம் ஆகியவை மிகத் தொடக்க கால சமண நூல்கள். இக்காலகட்டத்தைச் சேர்ந்த சமண நூல்கள் பெரும்பாலும் எளிய மக்களின் மொழியான அர்த - மகதி என்ற மொழியில் எழுதப்பட்டவை.

சமணத் தத்துவங்கள்

சமணத்தின் மையமான தத்துவம் அஹிம்சை. சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை. அது மனித உணர்ச்சிகளையும் விமர்சித்தது. சமணம் கடவுளின் இருப்பை மறுத்தது. அதன் தொடக்க கட்டங்களில், சமணத்தில் உருவ வழிபாடு கிடையாது. ‘கடவுளை வழிபடுவதாலோ, வேள்விகள் செய்வதாலோ முக்தி பெற முடியாது; எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கை மேற்கொள்வதன் மூலமாகவே ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும்’ என்று சமணம் வலியுறுத்தியது.


மகாவீரர் வேதங்களின் அதிகாரத்தை நிராகரித்தார். சமணம் வைதீகத்தை மறுக்கும் மதம். சமணத்தின்படி, உலகத்திற்குத் தொடக்கமும், முடிவும் கிடையாது. அது என்றும் நிலைத்திருக்கும். அது தொடர்ச்சியான வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சந்திக்கும். சமணம் இருபொருள் வாதத்தை முன்வைத்தது. உலகம் ஆன்மாவாலும் (ஜீவன்) பொருளாலும் (அஜீவன்) உருவானது. இவ்விரண்டும் காலவரம்பற்றவை. ஜீவனும் அஜீவனும் இணையும்போது கர்மா (வினை) உண்டாகிறது. இது பிறப்பு, இறப்பு என்ற முடிவற்ற சுழற்சிக்கு இட்டுச் செல்கிறது. இக்கர்மாவிலிருந்து ஒருவர் விடுபட வேண்டும் எனில், அவர், கடுமையான துறவறங்களை மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்தும் நோன்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே சமண மதத்தைப் பொறுத்தவரை துறவிகளால் மட்டுமே பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுதலை பெற முடியும்.

மும்மணிகள் (திரிரத்தினங்கள்)

சமண மதத்தினர் சில கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும். அனைத்து சமணர்களும் கடைபிடிக்க வேண்டிய மூன்று கொள்கைகள் மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன :

1. நன்னம்பிக்கை (சம்யோக் - தர்ஷனா)

2. நல்லறிவு (சம்யோக்- ஞானா)

3. நன்னடத்தை (சம்யோக் - மஹாவ்ரதா)

ஐம்பெரும் சூளுரைகள்

துறவிகள் ஐம்பெரும் சூளுரைகளை (பஞ்ச - மஹாவ்ரதா) மேற்கொள்ள வேண்டும்.

1. கொல்லாமை. (அஹிம்சா)

2. கள்ளாமை (அஸ்தேயா)

3. பொய்யாமை (சத்யா)

4. புலனடக்கம் (பிரும்மச்சரியா)

5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா)

அஹிம்சை

இந்த ஐந்து சபதங்களும் துறவிகள், துறவி அல்லாதவர்கள் அனைவருக்கும் பொதுவானவை. மற்றவர்களை விடத் துறவிகள் இந்த ஐந்தையும் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சமணம் அஹிம்சைக்கு அதிக முக்கியத்துவம் தந்ததால், மதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள், தாங்கள் அறியாமல் கூடச் சிறு பூச்சிகளை மூச்சோடு சேர்த்து இழுத்துவிடக் கூடாது என்று வாயையும் மூக்கையும் துணியால் மறைத்துக் கொள்வார்கள். எறும்பு போன்ற சிறு பூச்சிகளை மிதித்து விடக் கூடாது என்பதற்காகச் சமணத் துறவிகள் தாம் நடக்கும் பாதையை இறகால் பெருக்கியபடியே செல்வார்கள். வேளாண்மை முதலான தொழில்களில் உயிருள்ள ஜீவன்களைக் கொல்லவோ, காயப்படுத்தவோ நேர்ந்துவிடலாம் என்பதால் சமணர்களால் அவற்றில் ஈடுபடமுடியவில்லை. எனவே அவர்கள் வியாபாரத்திலும் வட்டிக்குக் கடன் கொடுப்பதிலும் ஈடுபட்டு, அவற்றில் சிறந்து விளங்கினார்கள். அதன் காரணமாக, நகரமயமாக்கத்தோடு அவர்கள் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள் ஆனார்கள்.

சமணம் ஒரு சமத்துவமான மதம். அது பிறப்பின் காரணமாக எந்தவித ஏற்றத்தாழ்வையும் அனுமதிக்கவில்லை. சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர, பிறப்பல்ல எனச் சமணம் கூறுகிறது. ”ஒருவன் தன் செயல்களால், பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான்” எனச் சமணம் நம்புகிறது. பிறப்பின் காரணமாகப் பெருமை கொள்ளுதல் பாவமாகக் கருதப்படுகிறது. பெண்களும் துறவிகளாக ஏற்கப்பட்டார்கள்.

எனினும், பெண்களால் முக்தி அடைய முடியாது. நற்செயல்களைச் செய்து புண்ணியங்களை ஈட்டுவதன் மூலம், ஒரு பெண் ஆணாக மறுபிறவி எடுத்து, பிறகு முயற்சி செய்து முக்தி பெறலாம்.

தமிழ்நாட்டில் சமணம்

ஏறத்தாழ பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ்நாட்டில் பரவியது. மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத் துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தான் என்று புறநானூற்றில் காணப்படும் செய்தி சல்லேகனா என்ற சமண நடைமுறையை ஒத்திருக்கிறது. தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது. நாலடியார், பழமொழி, சீவகசிந்தாமணி, யாப்பெருங்கலக்காரிகை, நீலகேசி போன்றவை தமிழின் முக்கியமான சமண நூல்கள் ஆகும். பொ.ஆ. 470இல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர். சமணம் தமிழ்நாட்டில் பரவியதால், பல சமணக் கோவில்களும் கட்டப்பட்டன. காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோவில் இத்தகைய சமணக்கோவில்களில் ஒன்று. காஞ்சிபுரத்தின் இப்பகுதி சமணக்காஞ்சி எனப்பட்டது.



இந்தியாவில் சமணத்தின் வீழ்ச்சி

இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:

1. அரச ஆதரவைச் சமணம் இழந்தது.

2. திகம்பரர், ஸ்வேதாம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது சமணத்தை மிகவும் பலவீனப்படுத்தியது.

3. ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.

4. குழுமனநிலை சமணத்தைப்பலவீனப்படுத்தியது.

5. சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

6. ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

Tags : Rise of New Religious Sects | History வரலாறு.
11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects : Jainism Rise of New Religious Sects | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் : சமணம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்