வரலாறு - ஜனபதங்களிலிருந்து மகாஜனபதங்களுக்கு | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects
ஜனபதங்களிலிருந்து மகாஜனபதங்களுக்கு
பிந்தைய வேதகாலம் (பொ.ஆ.மு. 1000 -
600) வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசியலிலிருந்து ஒரு பிராந்திய அரசு என்ற மாற்றத்தைச்
சந்தித்தது. கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த ‘ஜன’ இனக்குழுக்கள் பல்வேறு பகுதிகளில் நிலையாகத்தங்க
ஆரம்பித்தன. மக்களின் ஆதரவு ஜனத்திடமிருந்து (இனக்குழு) ஜனபதத்திற்கு (பகுதி) மாற ஆரம்பித்தது.
ஜனபதம் என்ற சொல்லுக்கு “இனக்குழு தன் காலைப் பதித்த இடம்" என்று பொருள். ஜனபதங்கள்
வளங்களுக்காகவும், அரசியல் மேலாதிக்கத்திற்காகவும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டன.
சில ஜனபதங்கள் தமது பகுதிகளை விரிவுபடுத்தி, பல்வேறு ஜனங்களைத் தமது அதிகாரத்தின் கீழ்
கொண்டுவந்தன. இப்படிப்பட்ட ஜனபதங்கள் மகாஜனபதங்களாக வளர்ச்சி பெற்றன.
ஒரு நாட்டிற்கு நிலம், மக்கள், அரசாங்கம்,
இறையாண்மை ஆகியவை முக்கியக் கூறுகளாகும். இவ்வனைத்துக் கூறுகளும் சில மகாஜனபதங்களில்
காணப்பட்டன. மகாஜனபதங்கள் மக்களை (ஜனங்களை) ஆண்ட பிரதேச முடியரசுகள் உருவானதைப் பிரதிபலித்தன.
அரசாங்கத்திற்கு அரசர் தலைமை தாங்கினார். அவருக்கு மையப்படுத்தப்பட்டதொரு நிர்வாகம்
உதவியது. அரசர் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக இருந்தார். வேளாண் உபரி மீது வரி விதித்தார்.
அதை மறுவிநியோகம் செய்தார். படிநிலைகளைக் கொண்ட சமூகத்தில் அதிகாரத்தின் மூலமும், அடக்குமுறை
மூலமும் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்தார். இக்கூறுகள் கங்கைச் சமவெளியில்
அரசுகள் உருவானதைக் குறிக்கின்றன.
புராண, பௌத்த, சமண மரபுச் சான்றுகளின்படி
பதினாறு மகாஜனபதங்கள் பற்றி அறியமுடிகின்றது.
1. காந்தாரம்
2. காம்போஜம்
3. அஸ்ம கம் (அசகம்)
4. வத்சம்
5. அவந்தி
6. சூரசேனம்
7. சேதி
8. மல்லம்
9. குரு
10. பாஞ்சாலம்
11. மத்ஸ்யம்
12. வஜ்ஜி (விரஜ்ஜி)
13. அங்கம்
14. காசி
15. கோசலம்
16. மகதம்
மகாஜனபதங்கள் அவற்றின் அரசு அதிகாரத்தின்
தன்மையைப் பொறுத்து, கண சங்கங்கள் என்றும் குடித்தலைமை ஆட்சி என்றும் பிரிக்கப்பட்டன.
கங்கைச் சமவெளியின் முந்தைய நாடுகள்
ஜனபதங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றில் குடியரசுகள், சிறு அரசுகள், குடித்தலைமை ஆட்சிப்
பகுதிகள் என அனைத்தும் கலந்திருந்தன. தொடக்ககால நூல்களில் பதினாறு மகாஜனபதங்கள் சுட்டப்படுகின்றன.
இனக்குழுக்களை மையமாகக் கொண்ட குழுவினரால் ஆளப்பட்ட கணசங்கங்களும் இருந்தன. இவற்றில்
மிகவும் பிரபலமானது விரிஜ்ஜிகளின் கண்சங்கமாகும். இது மிதிலைப் பகுதியில் இருந்தது.
இதன் தலைநகரம் வைசாலி. இந்த அரசுகள், தான் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அரசர்களின்
கீழ் இருக்கவில்லை . இங்கு பல்வேறு இனக்குழுக்களின் தலைவர்களால் கூட்டாக முடிவுகள்
எடுக்கப்பட்டன. கோசலம், காசி போன்ற சிறு அரசுகளும் இருந்தன. இக்ஷவாகு, விருஷ்ணி போன்ற
இனக்குழுக்களின் பெயர்களும் இந்தத் தொடக்ககால அரசுகளின் பெயர்களும் ராமாயணம், மகாபாரதம்
ஆகிய இரு இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முடியாட்சி முறை நடைமுறையிலிருந்த அரசுகள்
அனைத்திலும் வைதீக வேத மரபுகள் நடைமுறையில் இருந்தன. கண சங்கங்களைப் போலன்றி, மதகுருமார்கள்
மகாஜனபதங்களில் உயர்ந்த தகுதிநிலையை அனுபவித்தார்கள். அரசுகள் அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இருந்தது. பல்வேறு சடங்குகள் மூலம் பிராமண குருக்கள் அரசனுக்குச்
சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்தனர். அரச உரிமை வாரிசு முறையில் வந்தது. அரச உரிமை பெரும்பாலும்
மூத்த மகனுக்கே உரிமை என்ற விதிப்படி தொடர்ந்தது. பரீஷத், சபா என்ற அமைப்புகள் அரசருக்கு
உதவி செய்தன. இந்த அமைப்புகள் ஆலோசனை தருபவையாக இருந்தன. வேளாண் உபரியை அரசர் நில வரி
மூலமும் வேறு சில வரிகள் மூலமாகவும் பெற்றுக் கொண்டார். வேளாண் நிலத்தின் மீதான வரி
‘பலி’ எனப்பட்டது. உற்பத்தியில் ஒரு பங்காகப் பெறப்பட்ட வரி ‘பாகா’ என்று சொல்லப்பட்டது.
‘கரா’, ‘சுல்கா’ ஆகியவை இக்காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வேறு சில வரிகளாகும். இவ்வாறாக,
ஒரு விரிவான நிர்வாக அமைப்பையும் ராணுவத்தையும் பராமரிக்கத் தேவையான வருவாயை அரசர்
வரிகள் மூலம் ஈட்டினார்.
செல்வம் மிக்க நில உரிமையாளர்கள் கிரகபதி
என்றழைக்கப்பட்டனர். இவர்கள் தாசர் அல்லது கர்மகாரர் என்று அழைக்கப்பட்ட வேலைக்காரர்களை
பணியமர்த்தியிருந்தனர். சிறு நில உரிமையாளர்கள் கசாகா அல்லது கிரிஷாகா என்று அறியப்பட்டனர்.
சமூகம், வர்ணத்தின் அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இது சமூக மரியாதையின்
குறியீடானது. விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் சூத்திரர் எனப்பட்டார்கள். இக்காலத்தில்
வேறுசில சமூகக் குழுவினர் உருவாகியிருந்தனர். சமூகப் படிநிலையில் அவர்கள் சூத்திரர்களுக்குக்
கீழே வைக்கப்பட்டார்கள்; தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் ஊருக்கு வெளியே
வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தம் உணவிற்காக, பிழைப்பிற்காக இவர்கள் வேட்டையாடுதல்,
உணவு சேகரித்தல் ஆகியவற்றை நம்பி இருந்தார்கள். இவர்கள் பொதுவான வாழிடங்களின் ஓரங்களில்
வசிக்கும்படி ஒதுக்கப்பட்டார்கள். நகரமயமாக்கம் அதிகரித்த போது, இவர்களுக்கு குற்றேவல்
வேலைகளே தரப்பட்டன. இவர்கள் தங்களுக்கெனத் தனி மொழியைக் கொண்டிருந்தனர். அது இந்தோ-ஆரியர்களால்
பேசப்பட்ட மொழியிலிருந்து மாறுபட்டிருந்தது.