Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

வரலாறு - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects

   Posted On :  14.05.2022 06:01 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினர்.

பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தின் மூலம் நாம் கீழ்க்கண்டவை குறித்த அறிவைப் பெறலாம்.

கங்கைச் சமவெளியை நோக்கிய ஆரியர்களின் இடப்பெயர்ச்சி, இரும்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு

இரண்டாம் நகரமயமாதல்; மகாஜனபதங்களின் தோற்றம்

அரசியல் அமைப்பு மாற்றத்துடன் இணைந்த சமூக, பொருளாதார மாறுதல்கள்

பௌத்தம், சமணம், ஆசீவகம் ஆகியவை ஏற்படுத்திய அறிவுமலர்ச்சி, புதிய விழிப்புணர்வு

தமிழ்நாட்டில் உருவான அவைதீக மதக்கோட்பாடுகள்

 

அறிமுகம்

ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர்கொண்டார்கள். காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கியப் பங்காற்றியது. கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக்கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின. பானை வனைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப்பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. இவற்றின் விளைவாக நகரமயமாக்கத்துக்கு வழி ஏற்பட்டது. இதே காலகட்டத்தில் சமூகத்தில் பின்பற்றப்பட்ட வைதீகச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியனவற்றின் மீது கேள்விகளை எழுப்பிய சந்தேகிக்கும் உணர்வுகள் தோன்றின. இவை புதிய கருத்தியல்களும் நம்பிக்கைகளும் தோன்ற வழிவகுத்தன. இவ்வாறு உருவான பல அவைதீக மதக்கோட்பாடுகளில் சமணம், பௌத்தம் ஆகியன மக்களின் மனதைத் தொட்டன. இக்காலத்தின் போது உருவான பிராந்திய அடையாளங்கள், அவைதீக மதக் கோட்பாடுகள் ஆகியன குறித்து இப்பாடத்தில் காண்போம்.

இரும்புத்தொழில் நுட்பத்தின் தாக்கம்: பல்வேறு பார்வைகள்

தெற்கு பிகாரில் கிடைக்கும் இரும்புக் கனிமத்தைத் தேடி அடைந்து, அதன் மீது ஏக போகத்தினை நிலைநாட்டும் நோக்குடன் இந்தோ-ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். மகத அரசு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கு இரும்புத்தாது வளமே காரணமாக இருந்தது – டி.டி.கோசாம்பி

கங்கை வடிநீர்ப் பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்புக்கோடரிகளும் இரும்புக்கலப்பைகளும் வழிவகுத்தன - ஆர்.எஸ்.சர்மா

காடுகள் அழிக்கப்படவும் உபரி வேளாண் உற்பத்தி ஏற்படவும் இரும்புக்கோடரிகளும் இரும்புக்கலப்பைகளும் காரணம் என்பது கட்டுக்கதை. ஏனெனில், 16, 17 ஆம் நூற்றாண்டு வரைகூட கங்கைச்சமவெளி அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்தது – மக்கன் லால்

கங்கைப்பகுதியின் காடுகள் நெருப்பின் மூலமாகவும் அழிக்கப்பட்டிருக்கலாம் – ஏ.கோஷ், நிஹரஞ்சன் ரே

சான்றுகள்

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், திரிபீடகங்கள், ஜாதகக்கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமண நூல்கள், அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும். தொல்லியல் சான்றுகள் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

1. மண்வெட்டிகள், கதிர் அரிவாள்கள், கத்திகள், கொக்கிகள், ஆணிகள், அம்புகள், கலங்கள், கண்ணாடிகள் ஆகியவை இரும்புத்தொழில்நுட்பம் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.

2. துணிகள், மணிகள், மட்கலன்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், பீங்கான் பொருட்கள், கண்ணாடிப்பொருட்கள், பிற உலோகங்களாலான கலைப்பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3. சுடுமண் கலைப்பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நகரங்களை அகழாய்வு செய்ததில், முன்பு இருந்த பழமையான நகரங்களுக்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

1. ஆடம்பர பாண்டங்கள், நகரங்களுக்கே உரியவை என்று கருதப்படும் வடபகுதி கரு நிற மெருகூட்டப்பட்ட பாண்டங்கள் (Northern Black Polished Ware) அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

2. ராஜகிருகாவிலும் கௌசாம்பியிலும் காணப்படுவதுபோல, நகரங்கள் அகழிகளால் சூழப்பட்டிருந்தன. சில இடங்கள் அரண்களால் பாதுகாக்கப்பட்டன.

3. வீடுகள் சுடாத செங்கற்களாலும் சில இடங்களில் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.

4. கங்கைச் சமவெளியில் காணப்படும் வடிகால்கள், உறைகிணறுகள், கழிவுநீர்ப்போக்குக்குழிகள் போன்ற வசதிகள் அங்கே இரண்டாவது நகரமயமாக்கம் நிகழ்ந்திருந்ததை உறுதிப்படுத்துகின்றன. 

Tags : History வரலாறு.
11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects : Rise of Territorial Kingdoms and New Religious Sects History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்