நிகழ்வு, இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், பயன்கள் - கார்பன் டைஆக்சைடு | 8th Science : Chapter 11 : Air
கார்பன் டைஆக்சைடு
கார்பன் டைஆக்சைடு ஒரு கார்பன் மற்றும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களால்
பிணைக்கப்பட்ட வேதிச்சேர்மம். அறை வெப்பநிலையில் வாயுவாக உள்ளது. இது CO, என்ற வாய்ப்பாட்டால்
குறிக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தில் இது காணப்படுகிறது. பூமியால் திருப்பி
அனுப்பப்பட்ட சூரிய ஆற்றலை மீண்டும் பூமிக்கே அனுப்பி, உயிரினங்கள் புவியில் வாழத்
தேவையான வெப்பநிலையை இது வழங்குகிறது. ஆனால், வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடின் அளவு
மிகவும் அதிகரிக்கும் பொழுது அது பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
1. கார்பன்
டைஆக்சைடு பரவல்
பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடு வாயு 0.03% உள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின்போதும், நொதித்தல் நிகழ்வுகளின்போதும் இது
வெளியிடப்படுகிறது. இயற்கையில் காணப்படும் பெரும்பாலான கார்பன் டை ஆக்சைடு எரிமலையிலிருந்து
வரும் மேக்மா மூலம் வெளியேற்றப்படுகிறது. எண்ணெய் மற்றும் வாயுக்கள் உயிரிய சிதைவுக்குள்ளாகும்பொழுதும்
கார்பன் டைஆக்சைடு டைஆக்சைடு உருவாகிறது. செயல்பாடுகளினால் வெளியேறும் கார்பன் டைஆக்சைடு,
கார்பன் சுழற்சியின் இயற்கைச் சமநிலையைப் பாதிக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கார்பன்
டை ஆக்சைடு வளிமண்டலத்தில் அதிகமாகி உலகெங்கிலும்
வெப்பநிலையை உயர்த்துவதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. கார்பன் சுழற்சியில் படிம
எரிபொருள்களால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு ஒரு சிறிய பகுதியாகவே இருந்தாலும்
கார்பன் டைஆக்சைடின் அளவு ஒட்டுமொத்தமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏனெனில், இயற்கையான
கார்பன் பரிமாற்றத்தினால் கூடுதலாக வெளியேற்றப்படும் கார்பன் டைஆக்சைடு முழுவதையும்
உறிஞ்ச முடிவதில்லை.
2. கார்பன் டைஆக்சைடின் இயற்பியல் பண்புகள்.
• .கார்பன் டைஆக்சைடு நிறமற்ற, மணமற்ற வாயு.
• காற்றைவிடக் கனமானது.
• எரிதலுக்குத் துணைபுரியாது.
• நீரில் ஓரளவுக்கு நன்றாகக் கரையக்கூடியது. மேலும், நீல லிட்மஸ்
தாளை சற்று சிவப்பாக மாற்றுகிறது. எனவே, இது அமிலத்தன்மை வாய்ந்தது.
• அதிக அழுத்தத்தைப் பயன்படுத்தி இதனைத் திரவமாக்கலாம். அதுமட்டுமல்லாமல்
திண்மமாகவும் மாற்றலாம். திட நிலையிலுள்ள கார்பன் டைஆக்சைடு உலர் பனிக்கட்டி என்று
அழைக்கப்படுகிறது. இது பதங்கமாதலுக்கு உட்படக்கூடியது.
வெப்பப்படுத்தும்போது
ஒரு பொருள் திடநிலையில் இருந்து திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல்
எனப்படும்.
3. கார்பன்
டைஆக்சைடின் வேதிப்பண்புகள்
1.எரிதல்
இது தானாக எரியாது; மற்றும் எரிதலுக்கும் துணைபுரியாது.
2. உலோகங்களுடன் வினை
கார்பன் டை ஆக்சைடு லேசான உலோகங்களான சோடியம், பொட்டாசியம்,
கால்சியம் ஆகியவற்றுடன் இணைந்து அவற்றின் கார்பனேட்டுகளை உருவாக்குகின்றது. ஆனால்,
மெக்னீசியம், அதனுடைய ஆக்சைடையும், கார்பனையும் தருகிறது.
3. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை (காரம்)
சோடியம் ஹைட்ராக்ஸைடு (காரம்), கார்பன் டைஆக்சைடு (அமிலம்) மூலம்
நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தப்பட்டு கார்பனேட்டையும் (உப்பு) நீரையும் தருகிறது.
சோடியம் கார்பனேட்டையும் (உப்பு) நீரையும் தருகிறது
4. சுண்ணாம்பு நீருடன் வினை (கால்சியம் ஹைட்ராக்சைடு)
சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டைஆக்சைடை செலுத்தும்பொழுது
கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால், கரைசல் பால் போல் மாறுகிறது.
அதிகளவு கார்பன் டைஆக்சைடை சுண்ணாம்பு நீரில் செலுத்தும்பொழுது
முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்குக் காரணம் கரையக் கூடிய
கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் Ca(HCO3)2 உருவாவதே ஆகும்.
வெள்ளிக்
கோளின் வளிமண்டலத்தில் 96-97% கார்பன் டைஆக்சைடு உள்ளது. கார்பன் டைஆக்சைடின் அளவு
அதிகமாக இருப்பதால் வெள்ளியின் மேற்பரப்பால் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 462°C ஆக இருக்கிறது. எனவேதான், சூரிய குடும்பத்தில்
வெள்ளி மிகவும் வெப்பமான கோளாக இருக்கிறது.
4. கார்பன்
டைஆக்சைடின் பயன்கள்
. • காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் அல்லது மென்பானங்கள்
தயாரிக்கப் பயன்படுகிறது.
• திட கார்பன் டைஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படுகிறது. இது
குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
• இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம்
இதன் மீது விழுந்து அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றம் உருவாகிறது. இப்பண்பு
மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக் காட்சிகளில் பயன்படுகிறது.
• கார்பன் டைஆக்சைடு தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
• சால்வே முறையில் சோடியம் கார்பனேட் தயாரிக்கப் பயன்படுகிறது.
• யூரியா போன்ற உரங்கள் தயாரிக்க அம்மோனியாவுடன் சேர்ந்து பயன்படுகிறது.
• உணவு தானியங்கள், பழங்கள் போன்றவற்றைப்பதப்படுத்த இது பயன்படுகிறது.