வரலாறு - மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் | 11th History : Chapter 15 : The Marathas
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்
(அ) மக்களின் இயல்பும், புவியியல் கூறுகளும்
மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கணம் என்று அழைக்கப்பட்டது. செங்குத்தான மலைகளும், எளிதில் அணுகமுடியாத பள்ளத்தாக்குகளும், பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மலைகோட்டைகளும் இராணுவப் பாதுகாப்புக்கு உகந்தவையாக இருந்தன.
போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்ட மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். முன்னதாக பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்ட மராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப் பெற்றனர். சிவாஜி மறைவுக்குப் பிறகு அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார், பீரார் ஆகிய சுல்தான்களின் கீழ் செயல்பட்டனர்.
வலிமை மிகுந்த காலாட்படையும் ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை மராத்தியர் தவிர்த்தனர். கொரில்லா தாக்குதல் முறை அவர்களின் வலிமையாகத் திகழ்ந்தது. இரவு நேரங்களில் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் திறமை கொண்டிருந்தனர். மேலும் மேலதிகாரியின் உத்தரவுக்குக் காத்திருக்காமல் போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
(ஆ) பக்தி இயக்கமும் அதன் தாக்கமும்
பக்தி இயக்கம் பரவியதன் மூலமாக மராத்தியரிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது. துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர், ஆகியோர் பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். மராத்தி மொழியில் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் சமூகத்தில் வாழ்ந்த மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தின.
“(மராத்திய நாட்டில்) மத எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை . அமைப்புகள், சடங்குகள், வகுப்பு வேறுபாடுகள், ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது. துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்"- நீதிபதி ரானடே
(இ) பிற காரணங்கள்
பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகள் கலைந்த சூழலில் மராத்தியர் ஒன்றிணைந்து தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய உந்துதலைப் பெற்றனர். பீஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர் ஆகிய சுல்தான்களுக்கு எதிராக நடந்த தக்காணப் போர்களின் காரணமாக முகலாயர்களின் கருவூலம் காலியானது. தக்காணப் பகுதியில் சிதறிக் கிடந்த மராத்தியரைத் தனது தலைமையின் கீழ் ஒன்று திரட்டி சிவாஜி ஒரு வலுவான அரசை நிறுவினார். அந்த அரசுக்கு ராய்கர் தலைநகராக விளங்கியது.