மராத்தியர் - சிவாஜி (1627-1680) | 11th History : Chapter 15 : The Marathas
சிவாஜி (1627-1680)
ஜுன்னார் என்ற இடத்திற்கு அருகே ஷிவ்னர் என்ற பகுதியில் ஷாஜி போன்ஸ்லே மற்றும் அவரது முதல் மனைவி ஜீஜாபாய்க்கு மகனாக சிவாஜி பிறந்தார். தாய் வழியில் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்களின் வழித்தோன்றலாகவும் தந்தை வழியில் மேவாரின் சிசோடியாக்களின் வழித்தோன்றலாகவும் ஷாஜி போன்ஸ்லே விளங்கினார். அகமது நகர், அகமது ஷாவின் அபிசீனிய அமைச்சராகவும், முன்னாள் அடிமையாகவும் இருந்த மாலிக் அம்பர் (15481626) என்பவரின் கீழ் ஷாஜி போன்ஸ்லே சேவை புரிந்தார். மாலிக் அம்பர் மறைவுக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட ஷாஜி போன்ஸ்லே அகமதுநகர் முகலாயர்களால் இணைக்கப்பட்ட பிறகு பீஜப்பூர் சுல்தானிடம் தன் பணியைத் தொடர்ந்தார்.
பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகீர்தாரான தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பராமரிப்பில் சிவாஜியும் அவரது தாயும் விடப்பட்டனர். (இராணுவ மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் ஜாகீர் ஆகும்.) பூனாவைச் சுற்றியிருந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனுபவமும் அறிவும் வலிமையும் கொண்ட மாவலியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தலைவர்களின் நன்மதிப்பை சிவாஜி பெற்றார். மதத் துறவிகளாக விளங்கிய ராம்தாஸ், துக்காராம் ஆகியோரும் சிவாஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள், துறவி ராம்தாஸ் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்.
இராணுவ வெற்றிகள்
சிவாஜி தமது 19ஆவது வயது முதல் இராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 1646இல் தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார். தோர்னாவில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த ராய்கர் கோட்டையையும் கைப்பற்றி மீண்டும் முழுமையாக அதனைக் கட்டினார். 1647இல் தாதாஜி கொண்ட தேவ் மறைந்த பிறகு தமது தந்தையின் (ஜாகீர்) நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சிவாஜி ஏற்றார். அதனைத் தொடர்ந்து பாராமதி, இந்தபுரம், புரந்தர், கொன்டானா ஆகிய கோட்டைகளும் அடுத்தடுத்து அவரது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தப் பகுதியிலிருந்த கல்யாண் என்ற முக்கிய நகரையும் மராத்தியர் முன்பே கைப்பற்றி இருந்தார்கள்.
பீஜப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தையை சிறுமைப்படுத்திச் சிறையில் அடைத்தார். தக்காணத்தின் முகலாய அரசப்பிரதிநிதியாக இருந்த இளவரசர் மூராத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் முகலாய சேவையில் சேர விருப்பம் தெரிவித்தார். 1649ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பீஜப்பூர் சுல்தான் ஷாஜியை விடுதலை செய்தார். 1649 முதல் 1655 வரை இராணுவச் செயல்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து சிவாஜி விலகியிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் தனது அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.
1656ஆண்டு முதல் சிவாஜி, தனது இராணுவச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கினார். சதாரா மாவட்டத்தில் ஜாவ்லி என்ற இடத்தைக் கைப்பற்றினார். இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றியால் அவர் மராத்தியரின் மத்தியில் பிரபலம் அடைந்தார். இளைஞர்கள் அவரது இராணுவத்தில் இணைந்தனர். ஜாவ்லி என்ற இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் பிரதாப்கர் என்ற புதிய கோட்டை கட்டப்பட்டது.
பீஜப்பூருக்கு எதிரான மோதல்
1656 நவம்பர் மாதம் பீஜப்பூரின் முகமது அடில்ஷா மரணமடைந்தார். பதினெட்டு வயதே நிரம்பிய இளைஞர் இரண்டாம் அடில்ஷா அடுத்துப் பொறுப்பேற்றார். 1657ஆம் ஆண்டு பீடார், கல்யாணி, புரந்தர் ஆகியவற்றை ஔரங்கசீப் கைப்பற்றினார். எனவே பீஜப்பூர் சுல்தானும் சிவாஜியும் ஒளரங்கசீப்புடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டார். தில்லியில் அவரைத் தொடர்ந்து யார் ஆட்சிக்கு வருவது என்பதில் போட்டி நிலவியது. ஒளரங்கசீப் ஆட்சியைக் கைப்பற்றி தில்லி வந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிவாஜி வடக்கு கொங்கணம் மீது போர் தொடுத்து கல்யாண், பிவாண்டி, மாகுலி கோட்டைகளைக் கைப்பற்றினார்.
சிவாஜி மற்றும் அஃப்சல்கான், 1659
முகலாயரிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார். அஃப்சல்கான் பெரும்படையுடன் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார். "மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை' சங்கிலியில் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாக அவர் சூளுரைத்தார். ஆனால் மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது. சூழ்ச்சி மூலமாக சிவாஜியை வீழ்த்த நினைத்தார். ஆனால் அதிலும் தோல்வியே கிடைத்தது. தெற்கு கொங்கணம் மற்றும் கோல்ஹாபூர் மாவட்டங்களைத் தாக்கிய மராத்தியப் படைகள் பன்ஹலா கோட்டையை கைப்பற்றின. பீஜப்பூர் சுல்தான் தாமே இந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தப் போர் சுமார் ஓராண்டுக் காலம் நீடித்தது. ஆனாலும் எந்தப் பகுதியையும் வெல்ல முடியவில்லை . இறுதியாக, பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிவாஜி, தமது ஆளுகையின் கீழுள்ள பகுதிகளின் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
சிவாஜி மற்றும் முகலாயர்
1658 ஜூலை மாதம், ஒளரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறினார். சிவாஜியை அடக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 1660ஆம் ஆண்டு செயிஷ்டகான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சிவாஜி ஒரு தைரியமான திட்டத்தை வகுத்தார். ஓர் இரவு நேரத்தில், பூனாவுக்கு 400 படை வீரர்களுடன் திருமணக் குழுவினர் போல் சென்ற அவர் செயிஷ்டகானின் இல்லம் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் 1663 டிசம்பர் மாதம் ஔரங்கசீப் செயிஷ்டகானை தக்காணத்திலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டார்.
சிவாஜி மற்றும் ஜெய்சிங்
அரபிக் கடல் பகுதியில் முகாலாயரின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய சூரத் நகரைக் குறிவைத்து 1664ஆம் ஆண்டு சிவாஜி தாக்குதல் நடத்தினார். அவரது படை வீரர்கள் நகரைச் சூறையாடினார்கள். சிவாஜியை வீழ்த்துவதற்காகவும் பீஜப்பூரை இணைப்பதற்காகவும் ரஜபுத்திரத் தளபதி ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு இராணுவத்தை ஒளரங்கசீப் அனுப்பினார். அப்பொழுது இளவரசர் மூவாசம் (பின்னர் முதலாம் பகதூர் ஷா என அழைக்கப்பட்டவர்,) தக்காணத்தின் ஆளுநராக பதவி வகித்தார். அனைத்துத் தரப்புக்களிலிருந்தும் சிவாஜியைச் சுற்றி வளைக்க ஜெய்சிங் விரிவான திட்டம் வகுத்திருந்தார். ராய்கர் கோட்டையும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. 1665 ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் படைகள் சுற்றி வளைத்தன. சிவாஜியின் தீரமான வீரதீர தற்காப்பு பலன் தரவில்லை. இதை உணர்ந்த சிவாஜி பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார். 1665 ஜூன் 11ஆம் தேதி ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. மன்சப்தாராகச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
ஆக்ரா பயணம்
முகலாய அரசவையை பார்வையிடுமாறு சிவாஜியிடம் ஜெய்சிங் வற்புறுத்தினார். சிவாஜியிடம் அதிக நம்பிக்கை வார்த்தைகளைச் கூறிய ஜெய்சிங், தலைநகரில் சிவாஜியின் பாதுகாப்புக்குத் தாமே உறுதியளித்தார். 1666 மே மாதம் சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் ஆக்ராவை அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அவமரியாதை காத்திருந்தது. சிறுமைப்படுத்தப்பட்ட அவர் கொதித்தெழுந்து மன்னரை கண்டித்துப் பேசினார். சிறையில் அடைக்கப்பட்ட சிவாஜி பழக்கூடை ஒன்றில் ஒளிந்துகொண்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
1666 ஆண்டு முதல் சிவாஜி தீவிர போர்க் கொள்கையைக் கடைபிடிக்கலானார். அதனால் மராத்திய வீரர்கள் புதிய வெற்றிகளைப் பெற்றனர்.
வடமேற்கே ஆப்கன் எழுச்சி காரணமாக அதில் கவனம் செலுத்திய முகலாயருக்கு சிவாஜியை சமாளிக்க முடியவில்லை. தனது உள் நிர்வாகத்தை மறு சீரமைப்பு செய்வதில் சிவாஜி ஈடுபாடு காட்டினார். இளவரசர் மூவாசம், தக்காணத்தின் அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) மிகவும் வலுகுறைந்தும் சோம்பலுடனும் இருந்தார். ராஜா ஜஸ்வந்த் சிங் சிவாஜியுடன் நட்பு பாராட்டினார். மன்சப்தார் ஐந்தாயிரம் என்ற படிநிலையில் சாம்பாஜி நியமிக்கப்பட்டார்.
முகலாயருடன் மோதல் (1670)
பீராரில் சிவாஜிக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஜாகீர் நிலத்தின் ஒரு பகுதியை ஒளரங்கசீப் எடுத்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த சிவாஜி முகலாயர் சேவையிலிருந்த தனது படைகளைத் திரும்ப அழைத்துக்கொண்டார். புரந்தர் உடன் படிக்கையால் சிவாஜி தான் இழந்த
கோட்டைகளைத் திரும்ப
வும் மீட்டுக்கொண்டார். 1670ஆம் ஆண்டு மேற்குக்
கடற்கரையோ ரத்தின்
முக்கியத் துறைமுகமான
சூரத்தை அவர்
மீண்டும் கைப்பற்றினார். 1672ஆம் ஆண்டு சூரத்திலிருந்து சௌத் எனப்படும் நான்கில்
ஒரு பங்கு
வருமானத்தை வருடாந்திரக்
கப்பமாக மராத்தியர்
பெற்றனர்.
அரியணை ஏறுதல்
1674 ஜூன்
6ஆம் தேதி
சிவாஜி ராய்கர்
கோட்டையில் வேத
முறைப்படி அரியணை
ஏறினார். ‘சத்ரபதி’
(Supreme King) என்ற பட்டத்தைச் சூடினார்.
தக்காணப் போர் முயற்சிகள்
1676ஆம் ஆண்டு தெற்குப் பகுதியில் சிவாஜி தனது வெற்றியைத் துவக்கினார். கோல்கொண்டா சுல்தானுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்குக் கைமாறாக சிவாஜி சில பகுதிகளைத் தருவதாக உறுதியளித்தார். செஞ்சி, வேலூர் ஆகியவற்றைக் கைப்பற்றிய அவர், அடுத்திருந்த தனது தந்தை ஷாஜிக்குச் சொந்தமான பகுதிகளையும் சேர்த்துக்கொண்டார். சகோதர உறவிலான வெங்கோஜியை அல்லது எக்கோஜி, தஞ்சாவூரை நிர்வகிக்குமாறு அவர் பணித்தார். மதுரை நாயக்கர்களுக்குப் பெரும் தொகையைக் கப்பமாக தரவும் உறுதியளித்தார். கர்நாடக முற்றுகை முயற்சிகள் சிவாஜிக்கு பெருமையையும் புகழையும் கொடுத்தன. புதிதாகக் கைப்பற்றிய செஞ்சி அவருக்குப் பிறகு பொறுப்பேற்றவர்களுக்கு இரண்டாம் கட்டப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.
சிவாஜியின் கடைசி நாட்கள்
சிவாஜியின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை. அவரது மூத்த மகன் சாம்பாஜி அவரைக் கைவிட்டுவிட்டு முகலாய முகாமில் இணைந்தார். சாம்பாஜி திரும்பியபோது ஒளரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்டு பன்ஹலா கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அடுத்தடுத்த போர்கள் சிவாஜியின் உடல் நலத்தைப் பாதித்தன. அவர் தனது 53 ஆவது வயதில் 1680ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவின் போது மேற்குத் தொடர்ச்சி மலைகள், கல்யாண் மற்றும் கோவா இடையேயான கொங்கணப் பகுதி ஆகியன சிவாஜி அரசின் கீழ் இருந்தன. தெற்கில் பெல்காம் தொடங்கி துங்கபத்திரை நதிக்கரை வரை மேற்கு கர்நாடகாவை உள்ளடக்கிய பகுதிகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவரது மரணத்தின் போது வேலூர், செஞ்சி மற்றும் இதர சில மாவட்டங்கள் பற்றிய விஷயத்தில் தீர்வு காணப்படவில்லை.