Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சிவாஜிக்குப் பிறகு மராத்தியர்

மராத்தியர் - சிவாஜிக்குப் பிறகு மராத்தியர் | 11th History : Chapter 15 : The Marathas

   Posted On :  15.03.2022 03:55 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்

சிவாஜிக்குப் பிறகு மராத்தியர்

சிவாஜி மறைந்து ஓராண்டுக்குப் பிறகு அவரது மூத்த மகன் சாம்பாஜி மராத்திய இராணுவத்திற்கு தலைமை ஏற்று முகலாயப் பகுதிக்குள் நுழைந்து பீராரில் பகதூர்பூரைக் கைப்பற்றி அங்கிருந்த சொத்துக்களைக் கைப்பற்றினார்.

சிவாஜிக்குப் பிறகு மராத்தியர்

சிவாஜி மறைந்து ஓராண்டுக்குப் பிறகு அவரது மூத்த மகன் சாம்பாஜி மராத்திய இராணுவத்திற்கு தலைமை ஏற்று முகலாயப் பகுதிக்குள் நுழைந்து பீராரில் பகதூர்பூரைக் கைப்பற்றி அங்கிருந்த சொத்துக்களைக் கைப்பற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ஔரங்கசீப் மேவாரைச் சேர்ந்த ரஜபுத்திரர்களுடன் சமரசம் மேற்கொண்டு தக்காணப் பகுதிக்குள் படைகளை வழிநடத்திச் சென்றார். 1686இல் பீஜப்பூரும் 1687இல் கோல்கொண்டாவும் வெல்லப்பட்டன. தன்னுடன் மல்லுக்கட்டும் தனது மகன் இளவரசர் இரண்டாம் அக்பருக்குப் பாதுகாப்பு கொடுத்ததற்காக சாம்பாஜிக்கு தண்டனைக் கொடுப்பதே ஒளரங்கசீப்பின் அடுத்த இலக்காக இருந்தது. 1689இல் முகலாயப் படை சாம்பாஜியைச் சிறைபிடித்துக் கொன்றது.

சாம்பாஜியின் மறைவு மராத்தியரை முடக்கி விடவில்லை . அவரது இளவல் ராஜாராம் செஞ்சிக்கோட்டையிலிருந்து சண்டையைத் தொடங்கினார். இந்த மோதல் பல ஆண்டுகள் நீடித்தது. ராஜாராம் 1700இல் மரணமடைந்த பிறகு அவரது மனைவி தாராபாய் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. கைக்குழந்தை சார்பாக செயல்பட்ட தாராபாய் 50 ஆயிரம் வீரர்கள் அடங்கிய குதிரைப்படை மற்றும் காலாட்படையை ஹைதராபாத் அரசுக்கு எதிராகப் போர் தொடுக்க பணித்தார். அதன் விளைவாகத் தலைநகர் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக அருகிலிருந்த மசூலிப்பட்டினம் துறைமுகத்தில் வர்த்தகம் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டது. 1707இல் ஒளரங்கசீப் மறைந்த போது மராத்தியர் பல கோட்டை, கொத்தளங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு சாம்பாஜியின் மகன் சாஹூ விடுதலையாகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். தாராபாய் இதை எதிர்த்தார். அதன் பின் உள்நாட்டுக் கலகம் வெடித்தது. அதில் சாஹூ வெற்றி பெற்று 1708இல் அரியணையில் அமர்ந்தார். அரியணை ஏறிய பிறகு, பாலாஜி விஸ்வநாத் அவருக்கு ஆதரவாக இருந்தார். அதற்கு நன்றிக்கடனாக பாலாஜி விஸ்வநாத்தைப் பேஷ்வாவாக 1713இல் நியமித்தார். பின்னர் சாஹூ சதாராவுக்கு ஓய்வெடுக்கச் சென்றார். பூனாவில் இருந்து பேஷ்வா ஆட்சி செய்யத் தொடங்கினார்.

கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார். ராஜாராமின் இரண்டாவது மனைவி ராஜாபாய், அவரது மகன் இரண்டாம் சாம்பாஜி, தாராபாய் மற்றும் அவரது மகன் ஆகியோரை 1714 ஆம் ஆண்டு சிறைப்பிடித்தனர். இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார். சாஹூவின் அதிகாரத்தை அவர் ஏற்கவேண்டியிருந்தது. சாஹூ 1749இல் மறைந்தபிறகு ராமராஜா அரியணை ஏறினார். அவர் பேஷ்வாக்களுடன் ஒப்பந்தத்தை எட்டியதால் தலைமைப் பொறுப்பை அடைந்தார். தாராபாய் இதனால் ஏமாற்றம் அடைந்தார். 1761இல் தாராபாய், 1777இல் ராமராஜா ஆகியோர் மரணமடைந்தனர். ராமராஜாவின் தத்துப் புதல்வரான இரண்டாவது சாஹூ 1808இல் மரணமடையும் வரை பெயருக்கு மன்னராக ஆட்சியில் இருந்தார். அவரது மகன் பிரதாப் சிங் அடுத்து அரியணை ஏறினார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டி, 1839ஆம் ஆண்டு அவரை பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருந்து நீக்கியது. பிரதாப் சிங் ஒரு சிறைக்கைதியாக 1847இல் மரணமடைந்தார். அவரது இளவல் ஷாஜி அப்பா சாஹிப், இரண்டாம் ஷாஜி 1839ஆம் ஆண்டு அரசராக பிரிட்டீஷ் அரசால் பதவியில் அமர்த்தப்பட்டார். தனக்குப் பின் ஆள்வதற்கு ஒருவருமற்ற நிலையில் இரண்டாம் ஷாஜி 1848இல் மரணமடைந்தார்.



Tags : The Marathas மராத்தியர்.
11th History : Chapter 15 : The Marathas : Marathas after Shivaji The Marathas in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர் : சிவாஜிக்குப் பிறகு மராத்தியர் - மராத்தியர் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்