Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஆங்கிலேய-மராத்தியப் போர்கள்

மராத்தியர் - ஆங்கிலேய-மராத்தியப் போர்கள் | 11th History : Chapter 15 : The Marathas

   Posted On :  15.03.2022 04:03 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்

ஆங்கிலேய-மராத்தியப் போர்கள்

நானா பட்னாவிஸ் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

ஆங்கிலேய-மராத்தியப் போர்கள்

() முதலாவது ஆங்கிலேய-மராத்தியப் போர் (1775 - 1782)

நானா பட்னாவிஸ் ஆட்சியில் மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இருந்ததால் முன்னாள் பேஷ்வாவான முதலாம் மாதவ்ராவின் மாமா ரகுநாத் ராவ் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையைப் பார்க்க கம்பெனி நிர்வாகத்துக்கு வாய்ப்புக் கொடுத்தது. சால்செட், பேசின் ஆகிய பகுதிகளை ரகுநாத் ராவ் திரும்பப் பெற பம்பாயிலிருந்த கம்பெனி நிர்வாகம் ஆதரவாக இருந்தது. மகாதாஜி சிந்தியாவும் நாக்புரின் போன்ஸ்லேயும் ஆங்கிலேய ஆதரவாளர்களாக ஆனதை அடுத்து மராத்தியர் சால்செட், தானே ஆகிய பகுதிகளை ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்க நேரிட்டது. சால்பை உடன்படிக்கையின் படி 1782இல் ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார். இதனை அடுத்து கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டு காலத்துக்கு அமைதி நிலவியது.



() இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1803 - 1806)

நானா பட்னாவிஸ் மறைவு அவரது பெரும் சொத்துக்கள் சிதற வழி வகுத்தது. ரகுநாத் ராவின் மகன் இரண்டாம் பாஜி ராவ் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் இரண்டாம் பாஜி ராவுக்கு ஆங்கிலேயரின் உதவியை ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தைத் திணித்தார். 1802இல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது. 26 லட்சம் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதி கொடுக்கப்பட வேண்டும். முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித் தள்ளின. அதனால் இரண்டாவது ஆங்கிலேய - மராத்தியப் போர் மூண்டது. மராத்தியர் கடும் எதிர்ப்பைக் காட்டிய போதிலும் மராத்தியத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். துணைப்படைத் திட்டம் ஏற்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு தோஆப் (ஆற்றிடைப்பகுதி), அகமதுநகர், புரோச், மலைப்பகுதிகள் ஆகியன முழுமையாக கிடைத்தன.

()  மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1817 - 1818)

பரோடாவின் ஆட்சியாளர் (கெய்க்வாட்) முதன்மை அமைச்சர் கங்காதர் சாஸ்திரி, பேஷ்வாவின் விருப்பத்துக்கு உகந்த திரிம்பக்ஜியால் கொல்லப்பட்டதை அடுத்து பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேயருக்கு எதிராக மாறினார். பூனேயில் வசித்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோனின் வற்புறுத்தலில் திரிம்பக்ஜி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் பேஷ்வாவின் உதவியோடு கொலையாளி சிறையிலிருந்து தப்பிவிட்டார். மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்க ஆங்கிலேயருக்கு எதிராக சிந்தியா, போன்ஸ்லே, ஹோல்கர் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டியதாகப் பேஷ்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே 1817ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆட்சியாளர்களை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

அதன்படி

மராத்தியக் கூட்டமைப்பின் தலைமையிலிருந்து பேஷ்வா பதவி விலகினார்.

கொங்கணப் பகுதியை ஆங்கிலேயருக்கு வழங்கியதோடு கெயிக்வாரின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது.

தனக்கு நேர்ந்த அவமானத்தை பாஜி ராவால் ஏற்கமுடியவில்லை. எனவே பிண்டாரிகளை அடக்குவதில் தீவிரமாக ஆங்கிலேயர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் பூனா அரசக்குடியிருப்பை இரண்டாம் பாஜி ராவ் தீயிட்டுக் கொளுத்தினார். பூனாவுக்கு உடனடியாக விரைந்த ஜெனரல் ஸ்மித் அதனைக் கைப்பற்றினார். சதாராவுக்குப் பேஷ்வா தப்பியோடிய நிலையில் அதனையும் ஜெனரல் ஸ்மித் கைப்பற்றினார். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாஜி ராவ் ஓடிக்கொண்டே இருந்தார். அவரது படைகளை அஸ்தா, கிர்க்கி, கோர்கான் ஆகிய பகுதிகளில் ஜெனரல் ஸ்மித் வீழ்த்தினார். 1818ஆம் ஆண்டு பாஜி ராவ் எல்பின்ஸ்டன்னிடம் சரணடைந்தார்.

மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின் விளைவுகள்

பேஷ்வா முறையை ரத்து செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். உரிமைப்படி ஜாகீர்களைக் கொண்டிருந்தவர்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.

இரண்டாம் பாஜி ராவ் 1851இல் மரணமடையும் வரை வருடாந்திர ஒய்வூதியத்தின் கீழ் சிறைக்கைதியாகவே விளங்கினார்.

சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசராக உருவாக்கப்பட்டார்.

முதலாம் பாஜிராவால் உருவாக்கப்பட்ட போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

பூனாவின் அரசபிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக ஆனார்

Tags : The Marathas மராத்தியர்.
11th History : Chapter 15 : The Marathas : The Anglo-Maratha Wars The Marathas in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர் : ஆங்கிலேய-மராத்தியப் போர்கள் - மராத்தியர் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 15 : மராத்தியர்