மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மின்கலன் | 6th Science : Term 2 Unit 2 : Electricity
மின்கலன்
மின்கலன் என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும்
ஒரு கருவியாகும். நேர் மற்றும் எதிர்மின் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல்
மின்பகுளியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதில் இரு வேறுபட்ட உலோகத் தகடுகள் மின்முனைகளாகப்
பொருத்தப்பட்டு மின்கலன் உருவாக்கப்படுகிறது. வேதிவினைகள் மூலம் ஒரு மின் முனை நேர்மின்வாயாகவும்,
மற்ற மின் முனை எதிர் மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரத்தைத் தருகிறது.
தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதைப் பொறுத்து மின்கலன்கள் முதன்மை
மின்கலன்கள் மற்றம் துணை மின்கலன்கள் என இரு வகைப்படும்.
முதன்மை மின்கலன்கள்
இவ்வகை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. எனவே,
இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த இயலும் பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ
அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன
எ.கா: சுவர்க் கடிகாரம், கைக் கடிகாரம் மற்றும் ரோபோ
பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்
துணை மின்கலன்கள்
துணை மின்கலன் என்பது பலமுறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்
படுத்தக்கூடியது. ஒருமுறை பயன்படுத்திய பின்பு, மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யப்பட்டு
தொடர்ந்து மின்னோட்டம் உருவாக்கப்படுகிறது. துணைமின்கலன்களின் பொறுத்து சிறியதாக அல்லது
பெரியதாக இருக்கும். கைபேசியில் பயன்படுத்தப்படும் துணைமின்கலனின் அளவு உள்ளங்கையளவு
சிறியதாகவும், கனரக வாகனங்களான மகிழுந்து மற்றும் பேருந்து போன்றவற்றில் பயன்படுத்தப்படும்
பெரியதாகவும் கனமானவையாகவும் இருக்கும்.
எ.கா:
கைபேசிகள், மடிக்கணினிகள், அவசர கால விளக்குகள் மற்றும் வாகனங்கள்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.
மின்கல அடுக்கு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களை இணைத்து, மின்கல
அடுக்கு உருவாக்கப்படுகிறது. மின்கல அடுக்கு என்பது பல மின்கலன்களின் தொகுப்பாகும்.
செயல்பாடு 2: கீழே கொடுக்கப்பட்டவற்றுள்
முதன்மை மின்கலன்கள் அல்லது துணை மின்கலன்களை பயன்படுத்தும் பொருள்களைக் வகைப்படுத்தவும்.
கண்டறிந்து கட்டத்துக்குள் முதன்மை மின்கலத்திற்கு முதன்மை' எனவும் துணை மின்கலத்திற்கு
துணை' எனவும் குறிப்பிடவும்.
செயல்பாடு 3: ஒரு டார்ச் விளக்கு அல்லது
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும். உலர்மின்கலத்தை எடுத்துக்கொள்க. அதன் மேற்பகுதியில்
கொடுக்கப்பட்டுள்ளவற்றைப் படித்து, கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
1.
நேர் (+) மற்றும் எதிர்மின் (-) முனைகள் எங்கு குறிக்கப்பட்டுள்ளன.
2.
மின்னழுத்தத்தின் அளவு.
நீவிர்
பார்க்கக்கூடிய அனைத்து மின்கலன்களின் குறியீடுகளையும் மின்னழுத்தத்தின் அளவையும் குறித்துக்
கொள்க.
எச்சரிக்கை
மின்சாரம்
தொடர்பான சோதனைகள் அனைத்தும் டார்ச்விளக்கு அல்லது வானொலிப் பெட்டியில் பயன்படுத்தப்படும்
மின்கலன்களைக் கொண்டே செய்யப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன் வீட்டிலோ அல்லது
பண்ணையிலோ அல்லது பள்ளியிலோ உள்ள மின்சாரத்தைக் கொண்டு, எந்த சோதனையையும் செய்து பார்க்கக்கூடாது.
வீட்டிலுள்ள மின்சாரத்துடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது.