இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - மத்திய-மாநில உறவுகள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India
மத்திய-மாநில அதிகாரப் பகிர்வு
அதிகாரப் பகிர்வு மத்திய மாநில உறவுகளின் அச்சாணியாக உள்ளது. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு மூன்று தளங்களில் காணப்படுகிறது.
அ) சட்டமன்ற அதிகாரப் பகிர்வு
ஆ) ஆட்சித்துறை அதிகாரப் பகிர்வு
இ) நிதி அதிகாரப் பகிர்வு
மத்திய மாநில உறவுகளில் சட்டமன்ற அதிகாரப் பகிர்வு இரண்டு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது.
அ) அதிகாரப் பகிர்வின் எல்லை
ஆ) அதிகாரங்கள் பகிர்வு
அ) அதிகாரப் பகிர்வின் எல்லை
மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் தேசத்தின் எல்லை முழுவதும் காணப்படுகின்றது. மாநில அரசாங்கங்களின் அதிகாரம் மாநில எல்லை மீது காணப்படுகின்றது. மேலும் மத்திய அரசு எல்லைகளை தாண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றது. அதாவது மத்திய அரசு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் இந்தியக் குடிமகன்கள் மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீதும் அதிகாரம் செலுத்துகின்றது. ஆனால் மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே அதிகாரம் செலுத்துகின்றன. இருந்தபோதிலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பட்டியல் பகுதிகள் மீது பயன்படுத்தும் போது அரசமைப்பே சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
ஆ) அதிகாரங்கள் பகிர்வு
மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அரசமைப்பு அதிகாரத்தை மூன்று பட்டியல்கள் மூலம் பகிர்ந்து அளிக்கின்றது.
I. பட்டியல் (ஒன்றியப் பட்டியல்)
இங்கு ஒன்றிய அரசு முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். பாதுகாப்பு, வங்கித்துறை, நாணயம், வெளியுறவுத் துறை உள்ளிட்ட நூறு அதிகாரங்கள் இப்பட்டியலில் உள்ளன.
II. பட்டியல் (மாநிலப் பட்டியல்)
இப்பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசாங்கங்கள் முழு அதிகாரத்தை பெற்றிருக்கும். இங்கு 59 அதிகாரங்கள் உள்ளன. சட்டம், ஒழுங்கு, பொது சுகாதாரம், சுயாட்சி அமைப்புகள், விவசாயம், வனங்கள் போன்றவைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
III. பட்டியல் (பொதுப் பட்டியல்)
இப்பட்டியலில் 52 அதிகாரங்கள் உள்ளன. கல்வி, திருமணம், குடிமைச் சட்டம் போன்றவைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. மத்திய மாநில அரசாங்கங்கள் இரண்டுமே இப்பட்டியலில் அதிகாரம் செலுத்துவதால் இப்பட்டியலுக்கு பொதுப் பட்டியல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள அதிகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் மத்திய அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடியாகும்.
இம்மூன்று பட்டியல்கள் தவிர இதர அதிகாரங்கள் என்ற வகையும் உள்ளது. இம்மூன்று பட்டியல்களில் இடம்பெற்ற அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட அதிகாரப்பகிர்வை வழங்குவதில் நமது அரசமைப்பு இந்திய அரசாங்கச் சட்டம் 1935யை பின்பற்றுகின்றது.
விதிவிலக்குகள்
மேற்கண்ட அதிகாரப் பகிர்வு சில சிறப்பு சமயங்களில் நிறுத்தி வைக்கப்படும். இச்சமயங்களில் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படும்.
அ) தேசிய அவசர காலம்
குடியரசுத்தலைவர் தேசிய அவசரகால சட்டத்தை போர், அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற காரணங்கள் அடிப்படையில் குடியரசுத்தலைவர் தேசிய அவசர சட்டத்தை பிரகடனம் செய்வார். நாட்டிற்கு எதிரானசவால்களை சமாளிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மாநில பட்டியலிலும் செலுத்தப்படும்.
ஆ) மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தம்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் தங்களின் நன்மை கருதி ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் மத்திய அரசு தங்களுக்கான பொதுச் சட்டத்தை நிறைவேற்ற கோரினால் நாடாளுமன்றம் அச்சட்டத்தை நிறைவேற்றித் தரும்.
இ) சர்வதேச ஒப்பந்தம்
சர்வதேச ஒப்பந்தங்களை அமல் படுத்துவதற்காக நாடாளுமன்றம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தில் சட்டங்களை இயற்றலாம்.
ஈ) உறுப்பு 356 அவசர காலம்
அரசமைப்பின் 356 உறுப்பின்படி அவசர காலத்தை ஒரு மாநிலத்தில் பிறப்பித்தால் குடியரசுத்தலைவர் அந்த மாநிலத்திற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என அதிகாரம் வழங்குவார்.
நமது அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிர்வாக அதிகாரங்களை பகர்கின்றது. ஏற்கனவே விவரிக்கப்பட்ட சட்டமன்ற அதிகாரப்பகிர்வை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சித்துறை அதிகார பகிர்வு அமைந்துள்ளது. மத்திய அரசாங்கம் முதலாவது பட்டியலிலுள்ள விஷயங்கள் மீது ஆட்சித்துறை அதிகாரத்தை பெற்றிருக்கின்றது.
இரண்டாவது பட்டியலில் உள்ள விஷயங்கள் மீது மாநில அரசாங்கங்கள் அதிகாரத்தை பெற்றுள்ளன.
மூன்றாவது பட்டியலான பொதுப் பட்டியலின், நிர்வாக அதிகாரத்தை மாநிலங்கள் பெற்றிருக்கும். ஆனால் தேவைப்பட்டால் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கும். மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கம் வழங்கும் கட்டளைகளை கண்டிப்பாக இங்கு நிறைவேற்ற வேண்டும்.
நமது கூட்டாச்சி முறையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் இடையே பணி ஒப்படைப்பு முறை காணப்படுகின்றது. மத்திய அரசாங்கம் மாநில ஆளுநரின் இசைவுடன் தனது நிர்வாகப் பணிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம். மாநில அரசாங்கம் குடியரசுத்தலைவரின் ஆதரவுடன் தனது நிர்வாகப் பணிகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கலாம். மத்திய அரசு மாநில ஆளுநரின் இசைவு இல்லாமல், நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தனது நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றுமாறு மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
கூட்டாட்சி முறையின் வெற்றிக்கு நிதி அதிகார பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே நிதி அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகின்றது. இப்பகிர்வானது இந்திய அரசாங்கச் சட்டம் 1935-யை பெரிய அளவில் பிரதிபலிக்கின்றது. இரண்டு வகையான வருமானங்கள் நிதிப் பகிர்வில் காணப்படுகின்றன.
அ) வரி வருமானப் பகிர்வு
ஆ) இதர வருமானப் பகிர்வு
அ) வரி வருமானப் பகிர்வு
மத்திய மாநில நிதிப் பகிர்வில் வரி வருமானப் பகிர்வு ஐந்து வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. சுங்கவரி போன்றவைகள் முற்றிலும் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன
2. விற்பனை வரி போன்ற வரிகள் முற்றிலும் மாநில அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன
3. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதிக்கின்றது. மாநில அரசாங்கங்கள் அவ்வரிகளை வசூலித்து பயன்படுத்திக் கொள்கின்றன (எ.கா) முத்திரை வரி, கலால் வரி கூறலாம்.
4. சில வரிகளை மத்திய அரசாங்கம் விதித்து வசூலிக்கிறது. ஆனால் அந்த வருமானம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மீதான வரி. 5. சில வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விவசாய வருமானம் தவிர்த்த பிற வருமானங்கள் மீதான வரி.
ஆ) இதர வருமானப் பகிர்வு
வரி தவிர இதர வருமான வழிகள் மத்திய மாநிலங்களுக்கு அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் தனக்கான வணிக மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருமானத்தை ஈட்டலாம். எடுத்துக்காட்டாக தொழில் நிதி நிறுவனம், ரயில்வே துறை, ஒளிபரப்பு, அஞ்சல் துறை போன்றவற்றை நாம் கூறலாம்.
மாநில அரசாங்கங்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வணிக, தொழில் நிறுவனங்கள் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். மின்சாரம், நீர்ப்பாசனம், வனங்கள், தரைவழி போக்குவரத்து போன்ற துறைகளில் மாநில அரசாங்கங்கள் வருமானத்தை ஈட்டலாம்.
ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் குடியரசுத்தலைவர் ஒரு நிதிக் குழுவை அமைப்பார். அரசமைப்பின் 280-வது உறுப்பு குழுவின் அமைப்பை விவரிக்கின்றது. நிதிக் குழு ஒருதலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும். நிதிக் குழுவின் தலைவர் பொது விவகாரங்களில் அனுபவம் பெற்றவராக இருப்பார். நிதிக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நிதி நிர்வாகம், பொருளாதாரம், பொதுக் கணக்குகள் மற்றும் அரசு நிதி துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். நிதிக் குழுவின் நான்காவது உறுப்பினர் உயர் நீதிமன்ற நீதிபதியாக தகுதிப் பெற்றவர்.
நிதிக் குழு அரசிற்கு பரிந்துரைகளை கீழ்க்கண்டவாறு வழங்கும்.
1. வருமானத்தை மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்தல்.
2. உதவி மானியம் வழங்கப்படும் வழிமுறைகள்.
3. பஞ்சாயத்து அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகள்.
4. நகராட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவின் தொகுப்பு நிதி அதிகரிப்பதற்கான பரிந்துரைகள்.
5. குடியரசுத்தலைவரால் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோரப்படும் பரிந்துரைகள்.
இதுவரை 14 நிதிக் குழுக்கள் இந்தியாவில் குடியரசுத்தலைவரால் அமைக்கப்பட்டுள்ளன.