இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - கூட்டாட்சியின் பொருள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India
இந்தியாவில் கூட்டாட்சி
கற்றலின் நோக்கங்கள்
* கூட்டாட்சி முறையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பொருள் ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல்.
* நமது அரசமைப்பின் கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி தன்மைகளை அறிதலும்,எவ்வாறு நமது அரசமைப்பு கூட்டாட்சி முறையை ஊக்குவிக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுதல்.
* சட்டமன்றம், ஆட்சித்துறை, நிதித் துறைகளில் இந்திய அரசமைப்பில் காணப்படும் மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்தல்.
* இந்திய அரசமைப்பின் கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை அறிதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
* மத்திய மாநில உறவுகளில் காணப்படும் முக்கிய சிக்கல்களையும் கோரிக்கைகளையும் விவாதித்தல்.
* மத்திய மாநில உறவுகள் குறித்து பல்வேறு குழுக்கள் வழங்கியுள்ள பரிந்துரைகளை அறிந்துகொள்ளுதல்.
* மாநிலங்களிடையிலான நதிநீர் சிக்கல்களை தீர்ப்பதற்கு நமது அரசமைப்பு வழங்கியுள்ள வழிமுறைகளை மதிப்பீடு செய்தல்.
ஒரு மத்திய அரசாங்கத்திற்கும் பல மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள, பாதுகாக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை உடைய அரசியல் முறையை கூட்டாட்சி என்று அழைக்கிறோம். மாநில அரசாங்கங்கள் அரசமைப்பால் தோற்றுவிக்கப்பட்டால் மட்டுமே நாம் ஒரு அமைப்பை கூட்டாட்சி முறை என்று கூறலாம். ஒரு நாட்டின் பகுதிகள் இனம், மொழி, மதம் போன்ற காரணங்களால் பல வகை மக்களை பெற்றிருந்தால் கூட்டாட்சி முறை அரசாங்கம் பின்பற்றப்பட வேண்டும். "வேற்றுமையில் ஒற்றுமை" உருவாக்குவதற்கு கூட்டாட்சி முறை மக்களாட்சி நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
கூட்டாட்சி முறையின் பொருள்
கூட்டாட்சியின் பரிணாமம்
உலக வரலாற்றில் முதல் கூட்டாட்சி அரசமைப்பாக அமெரிக்கா தோன்றியது. பின்னர் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய ஆங்கிலேய காலனிகளும் கூட்டாட்சி முறையை அமைத்துக்கொண்டன. மூன்று மொழிகளை பின்பற்றும் சுவிட்சர்லாந்து கூட்டாட்சி முறையை கொண்டு வந்தது. தற்போது உள்ள ஐரோப்பிய யூனியன் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்திய கூட்டாட்சி முறையும், வளர்ச்சியும்
இந்தியாவில் ஒழுங்குமுறைச் சட்டம் 1773 கூட்டாட்சி முறையின் தோற்றத்தை உருவாக்கியது. இந்திய தேசிய இயக்கம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உணர்ந்து கூட்டாட்சி முறையை ஆதரித்தது. இந்திய அரசாங்கச் சட்டம் 1919 இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது. 1935 இந்திய அரசாங்கச் சட்டம் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கியது. நேரு குழுவின் அறிக்கையும் (1928) ஜவஹர்லால் நேருவின் கருத்துக்களும் கூட்டாட்சி அமைப்பை இந்தியாவிற்கு வலியுறுத்தின.
அரசமைப்பின் ஏழாவது அட்டவணை மூன்று பட்டியல்களை உருவாக்கி அதிகாரப்பகிர்வை மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன.