இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி தன்மைகள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India
இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி தன்மைகள்
அமெரிக்காவில் உள்ள பாரம்பரிய கூட்டாட்சி முறையிலிருந்து இந்தியக் கூட்டாட்சி முறை மிகவும் வேறுபடுகிறது.
1. ஒற்றை அரசமைப்பு
மத்திய மற்றும்மாநில அரசாங்கங்களுக்கு ஒரே ஒரு அரசமைப்பு தான் உள்ளது. தேசிய அரசமைப்பே மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மாநிலங்களுக்கென்று தனி அரசமைப்பு கிடையாது. ஆனால் பாரம்பரிய கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் மாநிலங்கள் தங்களுக்கான அரசமைப்பை பெற்றுள்ளன.
2. ஒற்றைக் குடியுரிமை
நமது நாட்டில் இந்தியக் குடியுரிமை மட்டுமே உள்ளது. மாநிலங்களுக்கென்று தனி குடியுரிமை கிடையாது. ஆனால் அமெரிக்காவில் தேசியக் குடியுரிமை மட்டுமல்லாது மாநில குடியுரிமையும் காணப்படுகிறது.
3. நெகிழும் அரசமைப்பு
சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பின் பகுதிகளை மாற்ற முடிந்தால் அந்த அரசமைப்பிற்கு நெகிழும் அரசமைப்பு என்பது பெயராகும். இங்கு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு சிறப்பு அரசமைப்பு திருத்தச் சட்டங்கள் தேவையில்லை.
4. மாநிலங்களுக்கு வாழ்வுரிமை இல்லை
நமது அரசமைப்பு மாநிலங்களுக்கு பெயர் உரிமை மற்றும் வாழ்வுரிமையை வழங்கவில்லை. நாடாளுமன்றம் சாதாரண சட்டங்கள் மூலமாக மாநிலங்களின் பெயர்களையும் நிலப்பரப்புகளையும் மாற்றி அமைக்க முடியும். அரசமைப்பின் 3-வது மற்றும் 4-வது உறுப்புகள் மாநிலங்களை மாற்றவும் புதிய மாநிலங்களை உருவாக்கவும் வழி முறையை வழங்குகின்றன. குடியரசுத்தலைவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தகவலை அனுப்புவார். அந்த மாநிலத்தின் பெயரையோ, நிலப்பரப்பையும் மாற்றுகிறோம் என தகவல் அனுப்புவார். அந்த மாநில சட்டமன்றத்தின் கருத்தை அனுப்புமாறு கூறுவார். ஆனால் மாநில சட்டமன்றத்தின் கருத்து அவரை கட்டுப்படுத்தாது.
ஒரு சாதாரண சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ குடியரசுத்தலைவரின் பரிந்துரையின்படி அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின் அந்த சட்ட முன்வரைவு சாதாரண சட்டமாக அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு ஆகியவை மாற்றப்படுகின்றன.
செயல்பாடு
முன்பு சிக்கிம் இந்தியாவுடன் ஒரு "இணை மாநிலம்" என்றழைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
5. கூட்டாட்சிக்கு எதிரான மாநிலங்களவை
பொதுவாக நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளின் பாதுகாவலனாக பணியாற்றுகின்றது. இந்தியில் ராஜ்ய சபா என்றால் தமிழில் மாநிலங்களவை என்பது பொருளாகும். மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் பாதுகாவலனாக பணிபுரிகிறது. ஆனால் மூன்று முக்கிய தளங்களில் மாநில உரிமைகளுக்கு எதிராக மாநிலங்களவை செயல்படுகிறது. மாநிலங்களவையின் அமைப்பு முறையில் சமத்துவம் பின்பற்றப்படவில்லை. இடங்கள் மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய மாநிலமாகிய உத்ர பிரதேசத்திற்க்கு 31 இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன. ஆனால் நாகாலாந்து போன்ற சிறிய மாநிலங்களுக்கு ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கூட்டாட்சி நாடாகிய அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. சிறிய மாநிலங்கள் பெரிய மாநிலங்கள் என்ற வேறுபாடு கிடையாது.
தமிழ்நாட்டிற்கு 18 இடங்கள் மாநிலங்களவையில் உள்ளன.
அரசமைப்பின் 249-வது உறுப்பின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும். தேசிய நலன் கருதி மாநிலங்களவை இம்மாற்றத்தை செய்யலாம். வருகை தந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு முறையின்படி மாநிலங்களவை ஒரு தீர்மானத்தை இயற்றினால் மாநில அதிகாரத்தை மத்தியப் பட்டியலுக்கு ஒரு வருட காலத்திற்கு மாற்றலாம். தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் மாற்றத்தை நீட்டிக்கலாம்.
அரசமைப்பின் 312-வது உறுப்பின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மொத்த உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றிருக்கின்றது. அனைத்து இந்தியப் பணிகள் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை உருவாக்குகின்றன என்று மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன. இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) ஆகியவை முக்கிய அனைத்து இந்தியப் பணிகளாகும். மாநில உரிமைகளை பாதிக்க கூடிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநிலங்களவை பெற்றிருப்பதை பல மாநிலங்கள் எதிர்க்கின்றன.
6. சமமற்ற அதிகாரப் பகிர்வு
நமது அரசமைப்பு சமமற்ற அதிகாரப் பகிர்வை உருவாக்கியுள்ளது என மாநிலங்கள் குற்றம் சுமத்துகின்றன. மத்திய அரசிற்கு சாதகமாகவும், மாநிலங்களுக்கு எதிராகவும் அதிகாரப் பகிர்வு உள்ளதாக பல மாநிலங்கள் கூறுகின்றன. மத்திய அரசாங்கம் மாநிலங்களை விட எண்ணிக்கையில் அதிக அதிகாரங்களை பெற்றுள்ளது. முக்கியமான அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளன. அதிக வருமானத்தை ஈட்டித் தரும் அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளன. எண்ணிக்கை, முக்கியத்துவம்,வருமானம் ஆகிய காரணிகளில் மாநிலங்கள் பலவீனமான நிலையில் உள்ளன. நிதி ஆதாரத்திற்கு மத்திய அரசையே மாநிலங்கள் சார்ந்துள்ளன. பொதுப் பட்டியல் அதிகாரங்களில் மத்திய அரசு சொல்வதை மாநில அரசாங்கங்கள் கேட்க வேண்டிய நிலை உள்ளது. பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் நமது அரசமைப்பில் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாரம்பரிய கூட்டாட்சி நாடான அமெரிக்காவில் இதர அதிகாரங்கள் மாநிலங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
7. அவசர காலங்கள்
நமது அரசமைப்பின் 18-ஆவது பகுதியில் உறுப்புகள் 352 முதல் 360 வரை மூன்று விதமான அவசர காலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. உறுப்பு 352-ன் படி போர், அந்நிய ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்றவைகள் இந்தியாவின் ஒற்றுமையை பாதித்தால் குடியரசுத்தலைவர் தேசிய அவசர காலத்தை பிறப்பிக்கலாம். உறுப்பு 356-ன் படி எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம். உறுப்பு 360-ன் படி நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்தால் குடியரசுத்தலைவர் நிதி அவசர காலத்தை பிறப்பிக்கலாம். அவசர காலங்கள் அமலில் இருந்தால் கூட்டாட்சிமுறை ரத்து செய்யப்பட்டு ஒற்றை ஆட்சி முறை பின்பற்றப்படும். மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.
8. ஒருங்கிணைந்த நீதித்துறை
இந்திய நீதித்துறை ஒருங்கிணைந்த துறையாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கீழ் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஒருங்கிணைந்த, படிநிலை அமைப்பு அடிப்படையில் நீதித்துறை உள்ளது. ஆனால் அமெரிக்காவில் நீதித்துறையிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுகிறது.
9. தேர்தல் ஆணையம்
தேசிய தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தலையும், மாநிலச் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துகின்றது. மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கு தனி தேர்தல் ஆணையம் கிடையாது. தேர்தல் முதன்மை அதிகாரி தேசிய தேர்தல் ஆணையம் தலைமையின் கீழ் செயல்படுவார். பாரம்பரிய கூட்டாட்சி நாடுகளில் மத்திய தேர்தலை, தேசிய தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. ஆனால் நமது அரசமைப்பு ஒருங்கிணைந்த தேர்தல் ஆணையத்தை உருவாக்கியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம்
சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் கூட்டாட்சி முறையின் அங்கம் இல்லை . அவ்வாணையம், 73-வது, 74-வது அரசியல் சாசன திருத்தச் சட்டங்கள் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளுக்கு (பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகள்) தேர்தலை நடத்துகின்றது.
10. ஒருங்கிணைந்த தணிக்கை
இந்திய அரசமைப்பு மத்திய-மாநில அரசாங்கங்களுக்கு ஒருங்கிணைந்த தணிக்கை முறையையும், அமைப்பையும் உருவாக்கி உள்ளது. சி.ஏ.ஜி எனப்படும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அரசமைப்பின் 148-வது உறுப்பின் படி தேசிய மற்றும் மாநில அளவிலான தணிக்கை அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலங்களுக்கென்று தனியான தணிக்கை அமைப்பு இல்லை.