இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி தன்மைகள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India
இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி தன்மைகள்
1. எழுதப்பட்ட அரசமைப்பு
கூட்டாட்சி முறைக்கு எழுதப்பட்ட அரசமைப்பு இன்றியமையாததாகும். பல மாநில மத்திய அரசாங்கங்கள் கூட்டாட்சி முறையில் செயல்படுவதால் அவைகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் ஒரு மத்திய அரசும், 28 மாநில அரசாங்கங்களும் உள்ளன. இவைகளின் அதிகாரங்களையும் பணிகளையும் அரசமைப்பு தெளிவாக வரையறுக்கின்றது.
2. அரசமைப்பின் உயர்ந்த தன்மை
அரசமைப்பு நாட்டின் மிக உயர்ந்த சட்ட ஆவணமாகும். எல்லா அரசாங்கங்களும் அரசமைப்பின் நடைமுறை விதிகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு அரசாங்கமும், அரசமைப்பை மீறிச் செயல்படக் கூடாது.
3. அதிகாரப் பகிர்வு
மத்திய மாநில அரசாங்கங்களுக் கிடையேயான அதிகாரப் பகிர்வு கூட்டாட்சி முறையின் அடிப்படைத் தன்மையாகும். இந்திய அரசமைப்பு மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகிறது. நமது நாட்டில் மூன்று பட்டியல் மூலமாக அதிகாரப் பகிர்வு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் கூட்டாட்சி முறையில் ஒரு பட்டியல் மூலமாகத்தான் அதிகாரப் பகிர்வு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
4. ஈரவை நாடாளுமன்றம்
கூட்டாட்சி முறையில் ஈரவை நாடாளுமன்றம் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு இரண்டு அவைகள் உள்ளன. இந்தியாவில் நாடாளுமன்றத்தில் மேலவை மாநிலங்களவை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் கீழ் அவை மக்களவை என அழைக்கப்படுகிறது. மாநிலங்களவை மாநில பிரதிநிதிகளை கொண்டுள்ளது. மாநில உரிமைகளின் பாதுகாவலனாக அது கருதப்படுகிறது. உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தின் மேலவை மாநில உரிமைகளின், நலன்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.
5. நெகிழா அரசமைப்பு
அரசமைப்பின் கருத்துகளை மாற்றுவதற்கு அரசியல் சாசன திருத்தச்சட்ட முறையோ அல்லது தனி அமைப்போ உள்ள அரசமைப்புகளுக்கு நெகிழா அரசமைப்பு முறை என்பது பெயராகும். சாதாரண சட்டம் இயற்றும் முறை மூலமாக அரசமைப்பில் மாற்றங்களை செய்ய இயலாது. இங்கு மாற்றங்களை கொண்டு வருவதற்கு அறுதி பெரும்பான்மையுடன் அரசமைப்பு திருத்தச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். நமது அரசமைப்பின் இருபதாவது பகுதியின் 368 உறுப்பில் அரசமைப்பை மாற்றுவதற்கான சிறப்பு திருத்தச்சட்டமுறைகள் வழங்கப்பட்டுள்ளதால் அது நெகிழா அரசமைப்பு என அழைக்கப்படுகிறது.
6. உச்ச நீதிமன்றம்
இந்திய உச்ச நீதிமன்றம் கூட்டாட்சி முறையின் நடுவணாகவும், அரசமைப்பின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றது. அரசமைப்பை விளக்கும் உரிமையை இது பெற்றுள்ளது. மத்திய மாநில உரிமைகளுக்கிடையே முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருந்தால் உச்ச நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது. உச்ச நீதிமன்றத்திடம் தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மட்டும்தான் கூட்டாட்சி வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கிடையிலும் அல்லது வெவ்வேறு மாநில அரசாங்கங்களுக்கிடையிலும் சிக்கல்கள் இருந்தால் உச்ச நீதிமன்றம் மட்டுமே தீர்த்து வைக்கும்.
அதாவது, தமிழ் நாட்டிற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் அல்லது வேறு மாநில அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சனை தோன்றினால் அதனை தீர்த்து வைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது.
மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் இந்திய அரசமைப்பை கூட்டாட்சி அரசமைப்பு என கூறுகிறோம்.
இந்திய நிலப்பரப்பு
இந்திய ஒன்றியம் என்ற கருத்து இந்திய நிலப்பரப்பு என்பதிலிருந்து வேறுபட்டதாகும். இந்திய ஒன்றியம் என்பது கூட்டாட்சி முறையில் உள்ள 29 மாநில அரசாங்கங்களையும், மத்திய அரசாங்கத்தையும் குறிக்கும். இந்திய நிலப்பரப்பு என்பது கீழ்க்கண்டவற்றை குறிக்கும்.
1. 28 மாநிலங்கள்
2. 9 மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்
3. பெறப்பட்ட பகுதிகள் (சுதந்திரத்திற்குப்பின்
இந்திய அரசாங்கத்தினால் முயன்று பெறப்பட்ட பகுதிகள் பாண்டிச்சேரி, டாமன் டையூ பகுதிகள் இந்திய அரசால் முயன்று பெறப்பட்டன. அவைகள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆவதற்கு முன்னால் பெறப்பட்ட பகுதிகள் என அழைக்கப்பட்டன)