அரசியல் அமைப்பு விதிகள் மற்றும் நிறுவனங்கள் | இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - கூட்டுறவுக் கூட்டாட்சி | 12th Political Science : Chapter 5 : Federalism in India
கூட்டுறவுக் கூட்டாட்சி
அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசமைப்பு நிபுணரான கிரான்வில் ஆஸ்டின் இந்திய கூட்டாட்சியை கூட்டுறவுக் கூட்டாட்சி என வர்ணித்தார். மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கத்தில் இந்திய கூட்டாட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் கூட்டுறவு கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அரையளவு கூட்டாட்சி கொள்கை கொண்ட நமது அரசமைப்பில் மாநிலங்கள் மத்திய அரசிற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும். குடியரசுத்தலைவர் பெற்றிருக்கும் அவசர கால அதிகாரங்களும் அரசமைப்பின் சில பகுதிகளும் மாநில அரசாங்கங்கள் மத்திய அரசுடன் கூட்டுறவு உணர்வுடன் செயல்பட வைக்கின்றன.
இந்திய அரசியலில் பல்வேறு பகுதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கூட்டுறவுக் கூட்டாட்சியின் விழுதுகளாக உள்ளன. அவைகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.
அ) அரசமைப்பு நிறுவனங்கள்
ஆ) சட்ட அமைப்புகள்
இ) அரசமைப்புகள்
அ) அரசமைப்பு பகுதிகள்
அரசமைப்பே பல்வேறு அமைப்புகளை உருவாக்கி கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை ஆதரிக்கின்றது.
1. மாநிலங்களுக்கிடையேயான குழு
அரசமைப்பில் 263 உறுப்பு குடியரசுத்தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறுகின்றது.
மூன்று பணிகளை இக்குழு பெற்றிக்கின்றது.
* மாநிலங்களுக்கிடையேயான சிக்கல்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவது.
* மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான பொதுவான விஷயங்களை விவாதிப்பது.
* ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பரிந்துரைகளை வழங்குதல்.
மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு பல குழுக்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. (எ.கா) மத்திய சுகாதாரக் குழு, போக்குவரத்து வளர்ச்சி மன்றம், தல சுயாட்சி மத்தியக் குழு போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும்.
சர்க்காரியா குழுவின் பரிந்துரைப்படி 1990களில் கூட்டாட்சி முறையில் உள்ள அரசாங்கங்கள் இடையே எல்லா துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கிடையேயான குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருக்கின்றார். எல்லா மாநிலங்களின் முதல்வர்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட முதல்வர்களும், ஆறு ஒன்றிய அமைச்சரவை குழுக்களும், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத் தலைவர்களும், குடியரசுத்தலைவர் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்களும் இக்குழுவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மாநிலங்கள் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிலைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் தவிர ஐந்து மத்திய அமைச்சர்கள் குழு, ஒன்பது மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஆ) சட்ட அமைப்புகள்
நாடாளுமன்றத்தின் சட்டங்களால் உருவாக்கப்பட்ட பல அமைப்புகளும் கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்துகின்றன.
1. மண்டலக் குழுக்கள்
மண்டலக் குழுக்கள் மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு 1956 சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. மொழிவாரியான மாநிலங்கள் உருவானபோது மண்டலக் குழுக்களும் உருவாயின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மண்டலக் குழுக்களின் நோக்கம் கூட்டுறவுக் கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார்.
ஆரம்பத்தில் ஐந்து மண்டலக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு வட கிழக்கு மாநிலங்களுக்காக சிறப்பு மண்டலக் குழு உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஆறு மண்டலக் குழுக்கள் இயங்குகின்றன.
1. வடக்கு மண்டலக் குழு
2. தெற்கு மண்டலக் குழு
3. கிழக்கு மண்டலக் குழு
4. மேற்கு மண்டலக் குழு
5. மத்திய மண்டலக் குழு
6. வட கிழக்கு மண்டலக் குழு
மத்திய உள்துறை அமைச்சர் எல்லா மண்டலக் குழுக்களின் பொதுத் தலைவராக உள்ளார். மேலும் ஒவ்வொரு மண்டலக் குழுவிலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிர்வாகத் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மண்டலங்களில் உள்ள மாநிலங்களுக்கிடையே எவ்வாறு ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ப்பது என்று மண்டலக் குழுக்கள் பரிந்துரை வழங்கும். பொருளாதார, சமூகத் திட்டமிடல், எல்லை பிரச்சனைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க மண்டலக் குழுக்கள் செயல்படும்.
2. நதி ஆணையம்
நதி ஆணையங்கள் சட்டம் 1956 மாநிலங்களுக்கிடையேயான நதிகளை மேலாண்மை செய்வதற்கு மாநிலங்களுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்கு நதி ஆணையத்தை உருவாக்கியது.
3. நதிநீர் தீர்ப்பாயம்
மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் சிக்கல் சட்டம் 1956 அரசமைப்பின் உறுப்பு 262 இன் படி உருவாக்கப்பட்டது. சமவெளி மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் குறைகளை ஒழுங்குபடுத்துவது இச்சட்டத்தின் நோக்கமாகும். இவ்வகையான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தீர்பாயங்களை இச்சட்டம் உருவாக்குகின்றது.
மத்திய அரசாங்கம் ஜனவரி 1, 2015-ஆம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை தோற்றுவித்தது. இந்தியாவின்மாற்றத்திற்கான தேசிய குழு என்பது இதன் பொருள் ஆகும். 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த திட்டக் குழு நீக்கப்பட்டப் பிறகு இப்புதியக் குழு தோற்றுவிக்கப்பட்டது. பிரதமர் இக்குழுவின் தலைவராக இருப்பார். மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் முதல்வர்கள் (புதுச்சேரி, புதுதில்லி), அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை ஆளுநர் ஆகியோர் இக்குழுவின் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மாநிலங்களுக்கிடையேயான அமைப்பு ரீதியின் தொடர்ச்சியாக கூட்டுறவுக் கூட்டாட்சியை வளர்ப்பது இக்குழுவின் நோக்கமாகும். உறுதியான மாநிலங்கள் உறுதியான தேசத்தை உருவாக்குவது இக்குழுவின் எண்ணமாகும். வருமான ஆதாரங்கள் இல்லாததாலும் அரசமைப்பு சக்தி இல்லாததாலும் மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்து இயங்குகின்றன. இயற்கை பேரழிவுகளை சமாளிப்பதற்கு கூட மத்திய அரசை சார்ந்து இருக்கின்றன. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பது நிதி ஆயோக்கின் நோக்கமாகும்.