விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - ஈர்ப்பு மையம் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
ஈர்ப்பு மையம்
ஓர் அட்டையினை உனது விரல் நுனியில் நிலையாக நிறுத்த முயற்சி செய். இம்முயற்சியில் நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அட்டையானது நிலையாக நிற்கிறது என்பதனை நீங்கள் காணலாம். அட்டையானது எந்த இடத்தில் நிலையாக நிற்கிறதோ அப்புள்ளியினை நாம் அட்டையின் ஈர்ப்பு மையம் என்கிறோம்.
புவியின் ஈர்ப்பு (எடை) விசை, பொருளின் ஈர்ப்பு மையம் வழியே செயல்படுகிறது.
எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும். ஒரு பொருளின் ஈர்ப்பு மையத்தினை நாம் எவ்வாறு காணலாம்?
செயல்பாடு 1
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையத்தினை எவ்வாறு காணலாம் ?
தேவையான பொருள்கள்: ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை, நூல், ஊசல் குண்டு, தாங்கி.
1. ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் மூன்று துளைகளை இடவும்.
2. படத்தில் காட்டியுள்ள ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்கவிடவும்.
3. தாங்கியில் இருந்து அட்டையின் மேல்புறமாக அமையுமாறு குண்டுநூலினை தொங்கவிடவும்.
4. அட்டையின் மேல் குண்டுநூலின் நிலையினைக் குறிக்கும் கோடு ஒன்றை வரையவும்.
5. மேற்கூறியவாறு மற்ற இரு துளைகளையும் தாங்கியிலிருந்து தொங்கவிட்டு கோடுகளை வரைந்து கொள்ளவும்.
6. மூன்றுகோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை X எனக் குறித்துக்கொள்ளவும். X என்ற புள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஈர்ப்பு மையம் ஆகும்.
ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையம்
ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையமானது பொதுவாக அதன் வடிவியல் மையத்தில் அமைகிறது.
அளவுகோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது சமநிலையில் நிற்கிறது. அளவுகோல் போன்ற ஒழுங்கான வடிவமுடைய பொருள்களுக்கு அதன் வடிவியல் மையமே ஈர்ப்பு மையமாக உள்ளது. அவற்றின் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது, அவை நிலையாக நிற்கின்றன. ஈர்ப்புமையம் தவிர வேறு புள்ளியில் தாங்கியின் மீது வைக்கப்படும்போது அவை கவிழ்ந்து விடுகின்றன.