விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வேகம் - காலம் வரைபடம் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
வேகம் - காலம் வரைபடம்
ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கிச் செல்வதாகக் கருதுவோம். ஒவ்வொரு விநாடிக்கும் அதன் வேகமானது கணக்கிடப்படுகிறது. இதன் வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைபடமானது வரையப்படுகிறது. இவ்வரைப்படம் வேகம் - காலம் வரைப்படம் எனப்படுகிறது. இந்நிகழ்வில் காணப்படும் சாத்தியக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(அ) பேருந்து ஓய்வு நிலையில் இருத்தல்
இங்கு வேகம் 0 மீ/வி என்ற நிலையிலேயே உள்ளது. எனவே, பேருந்து சுழி முடுக்கத்தினைக் கொண்டுள்ளது.
(ஆ) பேருந்து சீரான வேகத்தில் செல்லுதல்
பேருந்து 10 மீ / வி என்ற மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வு சுழி மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் சுழியாகும்.
(இ) பேருந்து சீரான முடுக்கத்தில் செல்லுதல்
பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் 10 மீ / வி என்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும், வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வானது நேர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும்.
(ஈ) பேருந்து சீரான எதிர் முடுக்கத்தில் செல்லுதல்
பேருந்தின் வேகம் ஒவ்வொரு விநாடியிலும் 10 மீ / வி என்ற குறைந்து கொண்டே செல்கிறது. வரைபடத்தில், நேர்கோட்டின் சாய்வானது எதிர்குறியுடன் மாறாத மதிப்பைக் கொண்டுள்ளது. எனவே, இதன் முடுக்கம் மாறிலியாகும். இந்த முடுக்கமானது எதிர்முடுக்கம் என அழைக்கப்படுகிறது.
(உ) பேருந்தின் முடுக்கம் அதிகரித்தல் (சீரற்ற முடுக்கம் )
பேருந்தின் வேகமானது ஒவ்வொரு விநாடியிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கம் அதிகரிக்கிறது.
(ஊ) பேருந்தின் முடுக்கம் குறைதல் (சீரற்ற முடுக்கம்)
பேருந்தின் வேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்துகொண்டே செல்கிறது. மேலும், சாய்வானது நேர்குறி மதிப்பைக் கொண்டு, குறைந்துகொண்டே செல்கிறது. எனவே, இதன் முடுக்கத்தின் மதிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.
தொலைவு - காலம் வரைபடம் மற்றும் வேகம் - காலம் வரைபடத்தை ஒப்பிடுதல்.
தொலைவு - காலம் வரைபடமும் வேகம் - காலம் வரைபடமும் ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவை பொருளின் பயணம் பற்றிய வெவ்வேறு தகவல்களை நமக்குப் அளிக்கின்றன. வரைபடம் மூலம் நாம் அவற்றை ஒப்பிடலாம்.