முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - விசையும் இயக்கமும் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion
அலகு 2
விசையும் இயக்கமும்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வரையறுத்தல்.
* தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வேறுபடுத்துதல்.
* வேகம், திசைவேகம் மற்றும் முடுக்கத்தினை வரையறுத்தல்.
* வேகம் மற்றும் திசைவேகத்தினை வேறுபடுத்துதல்.
* தொலைவு - காலம், திசைவேகம் - காலம் வரைபடங்களை வரைந்து, விளக்குதல்.
* இயங்கும் பொருள்களின் வேகத்தினை அளந்து, கணக்கிடல்.
* ஈர்ப்பு மையம் மற்றும் சமநிலையின் அன்றாடப் பயன்பாடுகளை அறிதல்.
அறிமுகம்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார். படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, கவிதா தனது வீட்டிலிருந்து இரு வழிகளில் பள்ளிக்குச் செல்ல முடியும். எப்பாதையின் வழியாகச் சென்றால் அவளால் விரைவில் பள்ளியை அடைய இயலும் என உங்களால் கூற இயலுமா?
பாதை - A (1.5 km)
பாதை - B (2 km)
பாதை - A பதில்
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், இலை ஒன்று மரத்திலிருந்து கீழே விழுவதைக் காணலாம். எந்தப் பாதையின் வழியாகக் கீழே விழும்போது இலை தரையை வேகமாக வந்தடையும்? பாதை அ
உமாவும், பிரியாவும் ஒரே பள்ளியில் படிக்கும் தோழிகள். அவர்கள் இருவரும் பள்ளி நேரம் முடிந்தவுடன் அருகில் உள்ள விளையாட்டுத் திடலுக்குச் சென்று விளையாடிவிட்டு வீடு திரும்புவார்கள். ஒருநாள் உமா தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டு, திடலுக்கு வருவதாகக் கூறிச் சென்றாள். இருவரும் விளையாட்டுத் திடலுக்குச் சென்ற பாதை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு நூலினை எடுத்துக்கொண்டு, படத்தில் காட்டப்பட்டுள்ள பாதையின் (அ மற்றும் ஆ) நீளங்களை அளக்கவும். எப்பாதையின் நீளம் அதிகமாக உள்ளது? பாதை ஆ
மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து ஒரு பொருளானது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்போது அவ்விரு இடங்களையும் இணைக்கும் நேர்க்கோட்டுப் பாதையில் சென்றால் விரைவில் அவ்விடத்தினைச் சென்றடையலாம் என நாம் அறிகிறோம். இந்த நேர்கோட்டுப்பாதையே இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தொலைவு ஆகும்.
இப்பாடத்தில், தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி, வேகம் மற்றும் திசைவேகம், வேகம் - காலம் வரைபடம், திசைவேகம் - காலம் வரைபடம், ஈர்ப்பு மையம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை குறித்து பார்க்க இருக்கிறோம்.