எடுத்துக்காட்டு, இயற் மற்றும் வேதிப் பண்புகள் - குளோரோபார்ம் - ட்ரை ஹேலோ ஆல்கேன் | 11th Chemistry : UNIT 14 : Haloalkanes and Haloarenes
ட்ரை ஹேலோ ஆல்கேன்
ஒரு ஹைட்ரோகார்பனில் உள்ள மூன்று ஹைட்ரஜன் அணுக்களை மூன்று ஹேலஜன் அணுக்களால் பதிலீடு செய்வதால் உருவாகும் சேர்மங்கள் ட்ரை ஹேலோ ஆல்கேன்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
CHCl3 CHI3
குளோரோபார்ம் அயடோபார்ம்
1) குளோரோபார்ம்
இது ஒரு முக்கியமான ட்ரை ஹேலோ ஆல்கேனாகும். நீராற்பகுப்பில் இது பார்மிக் அமிலத்தை தருவதால் டுமாஸ் CHCl3 ஐ குளோரோபார்ம் என பெயரிட்டார்.
தயாரித்தல்
ஆய்வகத்தில், எத்தில் ஆல்கஹாலை சலவைத் தூளுடன் வினைப்படுத்தி பின் அதனைத் தொடர்ந்து வாலைவடித்தல் மூலம் குளோரோபார்ம் விளைப்பொருளாகப் பெறப்படுகின்றது. சலவைத் தூளானது குளோரின் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடின் மூலமாக பயன்படுகிறது. இவ்வினை ஹேலோபார்ம் வினை என அழைக்கப்படுகிறது.
இவ்வினை பின்வரும் மூன்று படிகளில் நிகழ்கிறது
படி 1 ஆக்சிஜனேற்றம்
CH3CH2OH + Cl2 (எத்தில் ஆல்கஹால்) → CH3CHO + 2HCl (அசிட்டால்டிஹைடு)
படி 2 குளோரினேற்றம்
CH3CHO + 3Cl2 (அசிட்டால்டிஹைடு) → CCl3 CHO + 3HCl (ட்ரைகுளோரோ அசிட்டால்டிஹைடு)
படி 3 நீராற்பகுத்தல்
2CCl3CHO + Ca(OH)2 → 2CHCl3 + (HCOO)2Ca
குளோரால் குளோரோஃபாம்
பண்புகள்
இயற்பண்புகள்
(1) இது ஒரு நிறமற்ற நீர்மம். ஈதரைப் போன்ற மணமுடைய இலேசான இனிப்புச்சுவையுடையது.
(ii) குளோரோஃபார்ம் ஆவியினை நுகரும் போது உணர்விழத்தல் (மைய நரம்பு பாதிப்பு) ஏற்படுகிறது. எனவே இது உணர்வு நீக்கியாக பயன்படுகிறது.
வேதிப்பண்புகள்
1) ஆக்சிஜனேற்றம்
காற்று மற்றும் ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு பாஸ்ஜீன் (கார்பனைல் குளோரைடைத்) தருகிறது.
பாஸ்ஜீன் நச்சுத்தன்மை உடையது. இதன் காரணமாக குளோரோபாரம் ஆனது உணர்வு நீக்கியாக பயன்படுத்த தகுதியற்ற பொருளாகிறது.
2) ஒடுக்கம்
எத்தில் ஆல்கஹால் முன்னிலையில் Zn மற்றும் HCl ஆல் குளோரோபார்ம் ஓடுக்க வினைக்கு உட்பட்டு மெத்திலீன் குளோரைடை தருகிறது.
3) நைட்ரோ ஏற்றம்
குளோரோபார்ம் நைட்ரிக் அமிலத்துடன் வினைப்பட்டு குளோரோ பிக்ரின் (ட்ரைகுளோரோ நைட்ரோ மீத்தேன்) உருவாகிறது.
இது பூச்சிக் கொல்லியாகவும், மண் தூய்மையாக்கும் காரணியாகவும் பயன்படுகிறது.
4) கார்பைலமீன் வினை
குளோரோபார்ம் ஆனது அலிபாட்டிக் அல்லது அரோமேட்டிக் ஒரிணைய அமீன்களுடன் ஆல்கஹால் கலந்த KOH முன்னிலையில் வினைப்பட்டு வெறுக்கத்தக்க மணமுடைய ஆல்கைல் ஐசோ சயனைடைத் தருகின்றது.
இவ்வினை ஓரிணைய அமீன்களைக் கண்டறியப் பயன்படுகிறது.