இயற்பண்புகள்
1. தூய ஹேலோ ஆல்கேன்கள் நிறமற்றவை. ஒளியின் முன்னிலையில் புரோமோ மற்றும் அயோடோ ஆல்கேன்கள் நிறமுடையவை.
2. ஒன்று, இரண்டு அல்லது மூன்று கார்பன்களைப் பெற்றுள்ள ஹேலோ ஆல்கேன்கள் அறை வெப்பநிலையில் வாயுநிலையில் காணப்படுகின்றன. மூன்றிற்கும் மேற்பட்ட கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஹேலோ ஆல்கேன்கள் திரவ அல்லது திட நிலையில் காணப்படுகின்றன.
3. கொதிநிலை மற்றும் உருகுநிலை:
i) ஹேலோ ஆல்கேன்கள் அவைகளின் மூல ஆல்கேன்களைக் காட்டிலும் அதிக கொதிநிலை மற்றும் உருகுநிலையைப் பெற்றுள்ளன. ஏனெனில் ஹேலோ ஆல்கேன்களில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை (இருமுனை-இருமுனை விசை மற்றும் வாண்டர் வால்ஸ் விசை) வலிமையானவை.
ii) ஹேலஜன்களைப் பொறுத்து ஹேலோ ஆல்கேன்களின் கொதிநிலை மற்றும் உருகுநிலை பின்வரும் வரிசையில் அமையும்.
எடுத்துக்காட்டு
CH3I > CH3Br > CH3CI > CH3F
iii) ஹேலஜன் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் ஹேலோ ஆல்கேன்களின் கொதிநிலையும் அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டு
CCl4 > CHCl3 > CH2Cl2 > CH3Cl
iv) கார்பன் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பின், மோனோஹேலோ ஆல்கேன்களின் கொதிநிலை மற்றும் உருகுநிலை அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டு
CH3 CH2 CH2 Cl > CH3 CH2 Cl > CH3 Cl
v) மாற்றிய ஹாலைடுகளுக்கிடையே ஆல்கைல் தொகுதியின் பக்க சங்கிலிகளைப் பொறுத்து கொதிநிலை அமைகின்றது. பக்க சங்கிலிகள் அதிகரிக்கும் போது மூலக்கூறானது குறைவான புறப்பரப்பு உடைய கோளக வடிவத்தினைப் பெறுகிறது. எனவே மூலக்கூறுகளுக்கு இடையேயான விசை குறைவதால் கொதிநிலை குறைகின்றது.
எடுத்துக்காட்டு
4. கரை திறன்
ஹேலோ ஆல்கேன்கள் முனைவுற்ற சகப்பிணைப்புச் சேர்மங்களாகும். இவை கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன. ஆனால் நீரில் கரைவதில்லை. ஏனெனில் இவைகளால் நீருடன் ஹைட்ரஜன் பிணைப்பினை ஏற்படுத்த இயலாது.
5. அடர்த்தி:
ஒப்பிடத்தக்க மூலக்கூறு எடை உடைய ஹைட்ரோ கார்பன்களைக் காட்டிலும் திரவ நிலையில் உள்ள ஆல்கைல்ஹேலைடுகளின் அடர்த்தி அதிகம்.