அலகு 14
ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
ப்ரேன்காய்ஸ் அகஸ்டி விக்டர் கிரிக்னார்டு (Francois Auguste Victor grignard)
1912 ஆம் ஆண்டிற்கான வேதியியலின் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு வேதியியல் அறிஞர். இவர் கரிம மெக்னீசிய சேர்மங்களை தயார் செய்து அவற்றின் பயன்பாடுகளை ஆய்வு செய்தார். இவர் கணிதத்தில் பட்டம் பெற்று, மெத்திலேற்ற வினைக்கான வினையூக்கியை கண்டறிய முற்பட்டபோது கரிம வேதியியல் அறிஞரானவர்.
கற்றல் நோக்கங்கள்
இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர் மாணவர்கள்,
● பல்வேறு கரிம ஹாலஜன் சேர்மங்களை வகைப்படுத்துதல்.
● IUPAC முறையில் கரிம ஹேலோ சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
● C - X பிணைப்பின் தன்மையினை அறிந்துணர்தல்
● ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்களை தயாரிக்க உதவும் பொதுவான முறைகளை விவரித்தல்
● ஹேலோ ஆல்கேன் மற்றும் ஹேலோ அரீன்களின் இயற் மற்றும் வேதிப் பண்புகளை விளக்குதல்.
● கரிம ஹாலஜன் சேர்மங்களின் கருக்கவர் பதிலீட்டு வினை மற்றும் நீக்க வினைகளின் வினைவழி முறைகளை விளக்குதல்.
● கிரிக்னார்டு வினைப்பொருளை தயாரித்தல் மற்றும் அதனின் தொகுப்புமுறை பயன்களை விளக்குதல்.
● பல ஹாலஜன் சேர்மங்களின் பயன்களை சுட்டிக்காட்டுதல்,
● பல ஹாலஜன் சேர்மங்களின் சூழலியல் விளைவுகளை அறிந்துணர்தல்.
ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.
அறிமுகம்
முந்தையப்பாடப்பகுதியில் ஹைட்ரோ கார்பன்களின் வேதியியலைப் பற்றி நாம் கற்றோம். இப்பாடப்பகுதியில் நாம் ஹேலஜன்களைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைப் பற்றிக் கற்போம். அலிபாட்டிக் அல்லது அரோமேட்டிக் கரிமச் சேர்மங்களில் காணப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை, அவற்றின் எண்ணிக்கைக்கு சமமான புளூரின், குளோரின், புரோமின் அல்லது அயோடின் போன்ற ஹேலஜன்களால் பதிலீடு செய்யப்பட்டு பெறப்படும் கரிமச் சேர்மங்கள் ஹேலோ ஆல்கேன்கள் அல்லது ஹேலோ அரீன்கள் என அழைக்கப்படுகின்றன. இவைகள் பல்வேறு கரிம தொகுப்பு முறைகளுக்கு ஆரம்ப வினைப்பொருளாக அமைகின்றன.
ஹாலஜன் பதிலீடு செய்யப்பட்ட கரிமச் சேர்மங்கள் இயற்கையில் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் நமது அன்றாட வாழ்வு மற்றும் வேதித் தொழிற்சாலைகளில் இவைகள் பயன்படுகின்றன. மண்ணில் காணப்படும் நுண்ணுயிரிகளால் உருவாகும் குளோரம்பினகால் சேர்மமானது டைபாய்டு காய்ச்சலுக்கான மருந்தாகவும், குளோரோகுயின் ஆனது மலேரியா காய்ச்சலுக்கான மருந்தாகவும், ஹேலோதேன் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. ஹாலஜனேற்றப்பட்ட கரைப்பான்களான ட்ரைகுளோரோ எத்திலின் ஆனது எலக்ட்ரானியல் கருவிகளை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.