தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - சட்ட மறுப்பு இயக்கம் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu
சட்ட மறுப்பு இயக்கம்
1927இல் இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு
முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது. 1929இல்
லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் (முழு சுதந்திரம்) என்பதே
இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1930
ஜனவரி
26இல் ராவி நதியின் கரையில் சுதந்திரத்தை
அறிவிக்கும் விதமாக ஜவகர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றினார்.
காந்தியடிகள்
முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு
இயக்கத்தைத் தொடங்கினார். ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து
தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார். தாங்களாக முன்வந்த ஆயிரம்
தொண்டர்களில் நூறு தொண்டர்கள் மட்டுமே அணிவகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1930
ஏப்ரல்
13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி
ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது. இவ்வணி வகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது,
சத்தியத்தின்
நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர்
இராமலிங்கனார் புனைந்திருந்தார். காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல்
அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு
வரவேற்பு அளிக்கப்பட்டது. வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12
தொண்டர்கள்
உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர். உப்புச் சட்டத்தை மீறியதற்காக இராஜாஜி கைது
செய்யப்பட்டார். T.S.S. ராஜன்,
திருமதி.
ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம்,
C. சாமிநாதர் மற்றும் K.
சந்தானம்
ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய
முக்கியத் தலைவர்களாவர்.
T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர். ஆனால் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு சென்னையில் கடையடைப்பிற்கு வழிகோலியது. 1930 ஏப்ரல் 27இல் திருவல்லிக்கேணியில் காவல் துறையினருடன் மோதல் எற்பட்டது. மூன்று மணி நேரம் நடைபெற்ற இம்மோதலில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாகாணம் முழுவதிலும் நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார். இயக்கத்தை நசுக்க காவல்துறை கொடுமையான படையைப் பயன்படுத்தியது. 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.
1932 ஜனவரி 11இல்
திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களைப் பாடிச்
சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர். பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R.
குமாரசாமி
தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார். ஆகையால் இவர் கொடிகாத்த
குமரன் என புகழப்படுகிறார்.
1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது,
மக்களிடையே
அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.
சென்னையில் இராஜாஜி முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். மது விலக்கைப் பரிசோதனை முயற்சியாக சேலத்தில் அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். தேர்தெடுக்கப்பட்ட இந்திய அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது.
பள்ளிகளில்
இந்தி மொழி கட்டாயப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது,
இது
இராஜாஜியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும். தமிழ்மொழிக்கும்
பண்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்க, ஆரிய வட இந்தியர்களால் சுமத்தப்பட்ட ஏற்பாடாக
இது கருதப்பட்டதால் மக்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக
ஈ.வெ.ரா மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார். அவர் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை
சேலத்தில் நடத்தினார். உறுதியான செயல்பாட்டிற்கான திட்டத்தை இம்மாநாடு
வடிவமைத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பும்,
முஸ்லிம்
லீக்கும் ஆதரவளித்தன. தாளமுத்து மற்றும் நடராஜன் எனும் இரண்டு ஆர்வமிக்க
போராட்டக்காரர்கள் சிறையில் மரணமடைந்தனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு
ஊர்வலமொன்று திட்டமிடப்பட்டது. பெரியார் உட்பட 1200
போராட்டக்காரர்கள்
கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து நிர்வாகத்தைக்
கைக்கொண்ட சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.