தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - தமிழ்நாட்டில் தொடக்ககால தேசிய அதிர்வுகள் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu
தமிழ்நாட்டில் தொடக்ககால தேசிய அதிர்வுகள்
சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association-MNA), தென்னிந்தியாவில், தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பான இவ்வமைப்பு தனிப்பட்ட குழுக்களின் விருப்பங்களைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளை அனைவருக்கும் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவானது. இவ்வமைப்பு 1852இல் கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்களாலும் நிறுவப் பெற்றது.
இவ்வமைப்பில் வணிகர்களே அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர். தனது உறுப்பினர்களின் நலன்களை முன்னெடுப்பது, வரிகளைக் குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை இவ்வமைப்பு உள்ளடக்கி இருந்தது. மேலும் கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததை எதிர்த்தனர். மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தைத் திருப்பும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டது. வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதைப் படுத்தப்படுவதற்கு எதிராக இவ்வமைப்பு (MNA) நடத்திய போராட்டம் முக்கியமான பங்களிப்பாகும். இவ்வமைப்பு மேற்கொண்ட முயற்சிகளால் சித்திரவதை ஆணையம் (Torture Commission) நிறுவப்பட்டது. அதன் விளைவாகச் சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய சித்திரவதைச் சட்டம் (Toture Act) ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வமைப்பு 1862க்குப் பின்னர் செயலிழந்து இல்லாமலானது.
(ஆ) தேசியவாதப் பத்திரிக்கைகளின் தொடக்கங்கள்: தி இந்து மற்றும் சுதேசமித்திரன்
T. முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877இல் நியமிக்கப்பட்டது சென்னை மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிக்கைகளும் விமர்சனம் செய்தன. எதிர்ப்பு தெரிவித்த அனைத்துப் பத்திரிக்கைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்படுவதை கல்விகற்ற இளைஞர்கள் உணர்ந்தனர். இது குறித்து இந்தியரின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு செய்திப் பத்திரிக்கை தேவை என்பது உணரப்பட்டது. G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878இல் ‘தி இந்து’ எனும் (The Hindu) செய்திப் பத்திரிக்கையைத் தொடங்கினர். மிக விரைவில் இச்செய்திப் பத்திரிக்கை தேசியப் பிரச்சாரத்திற்கான கருவியானது G. சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார். 1899இல் அவ்விதழ் நாளிதழாக மாறியது. இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot) சவுத் இந்தியன் மெயில் (South Indian Mail), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது.
தென்னிந்தியாவில்
தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்க கால அமைப்பு சென்னை மகாஜன
சபையாகும். 1884 மே 16இல்
M. வீரராகவாச்சாரி,
P. அனந்தாச்சார்லு,
P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின்
முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன்
செயல்பாடுகளில் பங்காற்றினார். அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில்
ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சனைகள்
குறித்து விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர். குடிமைப்
பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
லண்டனிலுள்ள இந்தியக் கவுன்சிலை மூடுவது, வரிகளைக்
குறைப்பது, இராணுவ குடியியல் நிர்வாகச் செலவுகளைக்
குறைப்பது ஆகியன இவ்வமைப்பின் கோரிக்கைகளாகும். இவ்வமைப்பின் பல கோரிக்கைகள்
பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய
தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.
சென்னை
மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள்
நிறுவப்படுவதற்கு வழிகோலியது. இந்தியாவின் பல்வேறுப்பகுதிகளிலிருந்த இந்திய தேசிய
காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில்
கலந்து கொண்டனர். அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில்
அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது. தாதாபாய் நௌரோஜி,
K.T. தெலாங், சுரேந்திரநாத்
பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன்,
சென்னையிலிருந்து
G. சுப்பிரமணியம்,
P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு
போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய தேசியக் காங்கிரசின் முதற்கூட்டம் 1885இல் பம்பாயில் நடைபெற்றது. மொத்தம் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவர்.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886 இல் கொல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது. காங்கிரசின் மூன்றாவது மாநாடு பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887இல் சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் (Makkies Garden) நடைபெற்றது. கலந்து கொண்ட 607 அகில இந்தியப் பிரதிநிதிகள் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழ்நாட்டின் முக்கிய தொடக்ககால மிதவாத தேசியவாதிகள்
தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. வங்கப் பிரிவினையின் போது திலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச்செய்வதற்காக வட்டாரமொழியைப் பயன்படுத்தியதாலும் தொடக்ககால தேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கப்படலாயினர். சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் V.S. சீனிவாச சாஸ்திரி, P.S. சிவசாமி, V. கிருஷ்ண சாமி, T.R. வெங்கட்ராமனார், G.A. நடேசன், T.M. மாதவராவ் மற்றும் S. சுப்பிரமணியனார் ஆகியோராவர்.
தமிழ்நாடு
அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய
ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரை மாவட்டங்கள் மற்றும்
ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களூரு, பெல்லாரி,
தெற்கு
கனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சிலபகுதியையும்
உள்ளடக்கியதாக இருந்தது.