தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தொழிலகங்களின் வகைபாடு | 8th Social Science : Geography : Chapter 6 : Industries
தொழிலகங்களின்
வகைபாடு (Classification of Insustries)
தொழிலகங்கள்
பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை
1. மூலப்பொருட்களின் அடிப்படையில்
(i) வேளாண் சார்ந்த தொழிலகங்கள்: இவ்வகை தொழிலகங்களுக்கு வேளாண்
மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக
உணவுப் பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்திப்
பொருட்கள் போன்றவை.
(ii) கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்: இவ்வகை
தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன. இரும்பு தாதுவில்
இருந்து உற்பத்தி செய்யப்படும் இரும்பு கனிம வளம் சார்ந்த தொழிலகத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
சிமெண்ட்தொழிற்சாலை, இயந்திரக் கருவி உற்பத்தி போன்றவை கனிமங்கள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு
மற்ற எடுத்துக்காட்டுகளாகும்.
(iii) கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்: இவ்வகை
தொழிலகங்களுக்கு கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப்
பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு பதப்படுத்தப்பட்ட கடல் சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி
அலகுகள் ஆகும். கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்
(iv) வனவளம் சார்ந்த தொழிலகங்கள்: இவ்வகை
தொழிலகங்களுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக
மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்களாகும்.
அளவு மற்றும்
மூலதனத்தின் அடிப்படையில் வகைபாடு (Basis of Size and Capital)
(i) பெரிய அளவிலான தொழிலகங்கள்: ரூபாய்
ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள்
என்று அழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட்
தொழிற்சாலை மற்றும் நெசவாலை தொழிலகங்கள் போன்றவை பெரிய அளவிலான தொழிலகங்களுக்குச் சிறந்த
உதாரணமாகும்.
(ii)
சிறிய அளவிலான தொழிலகங்கள்: ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக்
கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகளை சிறிய அளவிலான தொழிலகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள்
இவ்வகையைச் சார்ந்தவை ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் டெட்ராய்ட் அமெரிக்க
ஐக்கிய நாட்டில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில்
மையமாக அறியப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் உள்ள சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட்
என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஜி.எம், போர்டு,
மஹேந்திரா, ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் இங்கு அமைந்துள்ளன. இவற்றைத் தவிர இந்நகரம்
நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது.
மேற்கூறிய
தொழிலகங்களைத் தவிர குடிசைத் தொழில்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தித் தொழில்கள்
ஆகியவற்றைச் சிறிய அளவிலான தொழிலகங்கள் என்பர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
கைவினை கலைஞர்களின், குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை
தொழிலகங்கள் சிறு தொழில்கள் அல்லது இதர வகை தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக கூடை முடைதல், பானை தயாரித்தல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவை
ஆகும்.
உடைமையாளர்கள்
அடிப்படையில் தொழிலகங்கள் (Basis of Ownership)
(i) தனியார் துறை தொழிலகங்கள் (Private Sector
Industries): இவ்வகை தொழிலகங்கள் தனிநபர்கள் மற்றும் தனித்த
குழுக்களால் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பஜாஜ் ஆட்டோ,
ரிலையன்ஸ் போன்றவையாகும்.
(ii) பொதுத்துறை தொழிலகங்கள் (Public
Sector Industries): இவ்வகை தொழிலகங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும்
அரசால் இயக்கப்படுபவை. எடுத்துக்காட்டாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
(HAL), பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL) ஆகியவை பொதுத்துறை
நிறுவனத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
செயல்பாடுகள்
உங்கள் பகுதியில் அமைந்துள்ள உடமையாளர்கள் சார்ந்த தொழிற்சாலைகளைப்
பட்டியலிடவும்.
(iii) கூட்டுத்துறை தொழிலகங்கள் (Joint
Sector Industries): இவ்வகை தொழிலகங்கள் அரசுத்துறையும் மற்றும் தனிநபர்கள்
அல்லது தனி குழுவாகவோ கூட்டாக இணைந்து இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு இந்தியன்
ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், இந்தியன் சிந்தட்டிக் இரப்பர் நிறுவனம், மகாநகர் வாயு
நிறுவனம், மாருதி உத்யோக் போன்றவை.