Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | கெடுபிடிப்போர் (பனிப்போர்)

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - கெடுபிடிப்போர் (பனிப்போர்) | 12th History : Chapter 15 : The World after World War II

   Posted On :  12.07.2022 02:08 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

கெடுபிடிப்போர் (பனிப்போர்)

1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது.

கெடுபிடிப்போர் (பனிப்போர்)

1947 ஏப்ரல் 16இல் அமெரிக்க குடியரசுத் தலைவரின் ஆலோசகரான பெர்னார்டு பரூச் என்பவர் கொலம்பியாவில் அரசு மாளிகையில் உரை நிகழ்த்துகையில், இரண்டாவது  உலகப்போருக்குப் பின்னர், அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய உறவை விவரிப்பதற்குப் "பனிப்போர்" (Cold war) எனும் சொல்லைப் பயன்படுத்தினார் (இச்சொல்லை உருவாக்கியவர் புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளரும் விலங்குப் பண்ணை (Animal Farm) எனும் நூலின் ஆசிரியருமான ஜார்ஜ் ஆர்வெல் என்பவராவார்). ஆயுதங்கள் இல்லாத போரான இப்பனிப்போர் கருத்தியல் ரீதியிலான போராகும்.

1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது. இக்காலகட்டத்தில் இவ்விரு சக்திகளுமே நிரந்தரமான போருக்கு ஆயத்தமாக இருந்தன. அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பரவலைக் கட்டுப்படுத்தவும் விரும்பியது. மற்றொரு புறத்தில் சோவியத் ரஷ்யா பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்பவும், தனது கோட்பாடுகளுடன் இணைந்து செல்லும் எல்லைப்புற நாடுகளுடன் நட்புணர்வைப் பேணவும் விருப்பம் கொண்டது. தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன. அவை பொருளாதார உதவி, இராணுவ ஒப்பந்தங்கள், பரப்புரை செய்தல், உளவறிதல், நேரடியாக மோதாமல், மோதலின் விளிம்புவரை செல்லுதல் மற்றும் மறைமுகப் போர் ஆகியனவாகும்.

 

பனிப்போர் செயல்திட்டங்கள்


அ) பொருளாதார உதவி

ட்ரூமன் திட்டம்

1945இல் கிரீஸில் ஒரு உள்நாட்டுப்போர் வெடித்தது. பல ஆண்டுகளாக கிரீசுக்கு ஆதரவு தந்த இங்கிலாந்து தனது சொந்தப் பொருளாதாரப் பிரச்சனைகளின் காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டது. சிலகாலம் கழித்துத் துருக்கியிலும் பிரச்சனை ஏற்பட்டதால் கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டை அங்கு ஏற்படுத்த முயன்றனர். கிரீசிலும் துருக்கியிலும் இனிமேற்கொண்டு பொதுவுடைமைவாதிகளின் கிளர்ச்சிகளைத் தன்னால் எதிர்கொள்ள இயலாதெனவும், பிரச்சனைகளை மார்ச் 31இல் இருந்தவாறே விட்டுவிடப் போவதாகவும் 1947இல் இங்கிலாந்து அமெரிக்காவிடம் கூறியது. இச்சூழலில் அமெரிக்கா செயல்பட முடிவு செய்தது. குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ். ட்ரூமன் கிரீசுக்கும் துருக்கிக்கும் ஆதரவாகச் செயல்பட முடிவுசெய்தார். எந்த நாடுகளில் கம்யூனிச கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கப்போவதாக உறுதியளித்தார். இது கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கையை வரையறை செய்தது. ட்ரூமன் கோட்பாடு எனப் பரவலாக அறியப்பட்ட இக்கோட்பாடு பனிப்போர் முடியும் வரை கோலோச்சியது.


கிரீஸ் மார்ஷல் திட்டம்

மற்றும் துருக்கியில் பெற்ற அனுபவத்தில், கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க டாலரின் மதிப்பு என்ன என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது. எனவே கம்யூனிசத்தின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதே திசை வழியில் பயணிப்பது என அமெரிக்கா முடிவு செய்தது. 1947 ஜூன் மாதத்தில் குடியரசுத்தலைவர் ட்ரூமனின் கீழிருந்த அரசுச் செயலரான ஜார்ஜ். C. மார்ஷல் ஒரு பொருளாதாரத் திட்டத்தை வகுத்தார். இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான இத்திட்டத்தை அவர் ஐரோப்பிய மீட்புத் திட்டம் என அழைத்தார். எங்களின் கொள்கை எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல அல்லது எந்தக் கோட்பாட்டிற்கும் எதிரானதல்ல. ஆனால் பசி, வறுமை, விரக்தி மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றிற்கு எதிரானது என மார்ஷல் அறிவித்தார். இதனடிப்படையில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. மார்ஷல் திட்டத்தின் பெயரால் அடுத்து வந்த நான்கு ஆண்டுகளில் 13,000 மில்லியன் டாலர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. 1948இல் பதினாறு ஐரோப்பிய நாடுகளும் ஜெர்மனியின் மூன்று மேற்கு மண்டலங்களும் சேர்ந்து ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டுறவு (Organisation for European Economic Cooperation - OEEC) எனும் அமைப்பை உருவாக்கின. மார்ஷல் திட்டம் நான்காண்டுகளுக்கு நீடித்தது (1948 - 1952) சோவியத் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரான மோலோடோவ் மார்ஷல் திட்டத்திற்கு 'டாலர் ஏகாதிபத்தியம்" என கேலிப்பெயர் சூட்டினார். சோவியத் யூனியனின் பார்வையில் மார்ஷல் திட்டமானது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்பும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

மோலோடோவ் திட்டம்

மார்ஷல் திட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்பார்ம் (The Cominform) எனும் அமைப்பை 1947 செப்டம்பரில் உருவாக்கியது. இவ்வமைப்பில் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளைத் தடுக்க முயன்ற இவ்வமைப்பு உறுப்பு நாடுகளிடையே கருத்தியல் ரீதியிலான, பொருட்கள் சார்ந்த தொடர்புகளை உருவாக்க முயன்றது. 1949இல் சோவியத் ரஷ்யா மோலோடோவ் திட்டம் எனும் பெயரில் தனது பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, சோவியத் யூனியன், அதனை சார்ந்த நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்காகக் கோமிகன் (Comecon) அதாவது பரஸ்பர பொருளாதார உதவிக் குழு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.


 

ஆ) இராணுவ ஒப்பந்தங்கள்

இராணுவ ஒப்பந்தங்களின் மூலம் போர் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உருவாக்கிக் கொள்ளுதல், தங்கள் முகாமை விரிவடையச் செய்து கொள்வதற்காக இரு சக்திகளும் பின்பற்றிய மற்றுமொரு குறிப்பிடத்தக்க தந்திரமாகும். 1948இல் கிழக்கு ஐரோப்பாவில் செக்கோஸ்லோவாக்கியா மட்டுமே ஜனநாயக நாடாக இருந்தது. அது முதலாளித்துவ முகாமைச் சேர்ந்த நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே இடைப்படு நாடாக இருந்தது. அங்கு 1948 மே மாதத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இவ்வெற்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளை மேலும் அச்சமடையச் செய்தது.

நேட்டோ நாடுகள் - வட அட்லாண்டிக் ஒப்பந்தம் (NATO)

அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றே உணர்ந்தன. செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றி அவர்களின் அச்சத்தை அதிகரித்தது.

1952 நவம்பர் 1இல் பசுபிக் பகுதியின் மார்ஷல் தீவுகளில் எலுஜெலாப் அட்டோல் எனுமிடத்தில் அமெரிக்கா, மைக் எனப் பெயரிடப்பட்ட உலகின் முதல் ஹைட்ரஜன் அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்தது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 1955 நவம்பர் 22இல் சோவியத் யூனியன் தனது முதல் ஹைட்ரஜன் குண்டை வெடித்துப் பரிசோதனை செய்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்புத் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டன. 1948 மார்ச்சில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பிரஸ்ஸல்ஸ் நகரில் சந்தித்து உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். அவ்வொப்பந்தம் இராணுவ, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளில் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழிவகுத்தது. சிலகாலங்களுக்குப் பின்னர் அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, அயர்லாந்து மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகளும் மேற்குறிப்பிட்ட ஐந்து பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை நாடுகளுடன் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களில் யாராவது ஒருவர் தாக்கப்பட்டால் அத்தாக்குதல் அனைவர் மேலும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதுவதற்கு ஒத்துக்கொண்டன. மேலும் அந்நாடுகள் தங்கள் படைகளை நேட்டோவின் கூட்டுத் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தன. ஆனால் இக்கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாடு ஐரோப்பாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ நடைபெறும் தாக்குதலுக்கு மட்டுமே பொருந்தும். காலனி நாடுகளில் நடைபெறும் மோதல்கள் இதனுள் அடங்காது. 1952இல் கிரீஸ் மற்றும் துருக்கி நேட்டோவில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1955இல் மேற்கு ஜெர்மனியும் இவ்வமைப்பில் இணைந்தது.


வார்சா உடன்படிக்கை அமைப்பு (Warsaw)    

மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதை ஒரு நேரடி பயமுறுத்தலாகப் பார்த்த சோவியத் ரஷ்யா எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1955 மே மாதத்தில் சோவியத் யூனியனும் அதன் ஏழு ஐரோப்பிய நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு, "ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம்" எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. போலந்தின் தலைநகரான வார்சாவில் இது கையெழுத்திடப்பட்டதால் இது வார்சா உடன்படிக்கை எனப் பெயரிடப்பட்டது. சோவியத் யூனியன் அல்பேனியா, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளே வார்சா உடன்படிக்கை உறுப்பு நாடுகளாகும். உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வெளிநாட்டுப் படைகளால் தாக்கப்படுமேயானால் ஏனைய உறுப்பு நாடுகள் தாக்கப்பட்ட நாட்டைப் பாதுகாக்க உதவிக்கு வரவேண்டுமென இவ்வுடன்படிக்கை கூறியது. சோவியத் யூனியனைச் சேர்ந்த மார்ஷல் இவான் எஸ். கோனெவ் என்பாரின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவம் உருவாக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சரிவு வரை வார்சா ஒப்பந்தம் செயல்பட்டது.


சீட்டோ (தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை அமைப்பு) (SEATO)

1949இல் சீனா, மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்ட் நாடானது. கம்யூனிசம் சீனாவிலிருந்து கொரியாவிற்குப் பரவியது. ஆசியப் பகுதிகளில் கம்யூனிசம் பரவுவதை கண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் 1951 செப்டம்பரில் முத்தரப்பு ராணுவ உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டன. (இது ANZUS உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது) 1954இல் அமெரிக்கா தேசிய சீனா என்றறியப்பட்ட தைவானுடன் பரஸ்பர ராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன்படி தைவான் கம்யூனிஸ்ட் சீனாவால் தாக்கப்பட்டால் அமெரிக்கா தைவானுக்கு உதவி செய்யும்.

1954 செப்டம்பரில் அமெரிக்கா, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை எனும் அமைப்பை நிறுவின. சீட்டோ (SEATO) எனும் இவ்வமைப்பு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவின் பிரதியாக அமைந்ததாகும். ஆனால் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் இவ்வுடன்படிக்கையில் பங்கேற்க மறுத்துவிட்டன. இவ்வுடன்படிக்கையின் தலைமையிடம் பாங்காக்கில் செயல்பட்டது. சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது. உள்நாட்டில் ஏற்படும் ஆபத்துக்களைப் பொறுத்தமட்டிலும் சம்பந்தப்பட்ட நாடுகளே அவற்றை எதிர்கொள்ள வேண்டும். சீட்டோ அமைப்பானது நேட்டோவைப் போல செல்வாக்குப் பெற்ற அமைப்பாக இல்லை. வியட்நாம் போர் முடிந்த நிலையில் 1977இல் சீட்டோ கலைக்கப்பட்டது.


மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை (CENTO)

1955ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் பாக்தாத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டன. அப்பகுதியிலுள்ள அனைத்து நாடுகளும் இவ்வமைப்பில் உறுப்பினர் ஆகலாம். ஏப்ரல் மாதத்தில் கிரேட் பிரிட்டன் இவ்வுடன்படிக்கையில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஈரானும் இணைந்தன. கம்யூனிசவாதிகளின் செல்வாக்கை தடுப்பதே பாக்தாத் உடன்படிக்கையின் நோக்கமாக இருந்தது. மத்திய கிழக்குப் பகுதியில் 1958இல் வரிசையாக நடைபெற்ற பல நிகழ்வுகள் அப்பிராந்தியத்தின் நிலைத்தன்மையை அச்சத்திற்கு உள்ளாக்கின. அவைகளில் முக்கியமானவை எகிப்து - சிரியா இணைப்பு , ஈராக்கில் ஏற்பட்ட புரட்சி, லெபனானில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி ஆகியனவாகும். இந்நிகழ்வுகளின் விளைவாக அமெரிக்கா லெபனானின் அரசியலில் தலையிட்டது. பாக்தாத் உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளில் ஈராக் தவிர ஏனைய நாடுகள் அமெரிக்காவின் தலையீட்டை அங்கீகரித்ததால் ஈராக் உடன்படிக்கையிலிருந்து விலகியது. இதன் விளைவாகப் பாக்தாத் உடன்படிக்கையில் உள்ள மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து சென்டோ (Central Treaty of Organisation - CENTO) அமைப்பை உருவாக்கின. துருக்கியின் அங்காரா நகரத்திற்கு இதன் தலைமையிடம் மாற்றப்பட்டது. இவ்வமைப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்தது. ஆனால் இவ்வமைப்பில் உறுப்பு நாடாக இணையவில்லை. 1979இல் ஏற்பட்ட ஈரானிய புரட்சி, அரசர் ஷாவின் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. அதனைத் தொடர்ந்து ஈரானும் அமைப்பிலிருந்து வெளியேறியது. அமைப்பு வலுவாகச் செயல்படவில்லை என்பதால் அதே ஆண்டில் பாகிஸ்தானும் விலகியது. 1979இல் இவ்வமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

 

இ) பரப்புரை செய்தல்

பனிப்போரின் போது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தங்கள் கருத்தியலைப் பற்றி புகழ்பாடவும் எதிரிகளின் சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் விமர்சனம் செய்யவும் பரப்புரை செய்வதை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தின. அமெரிக்கா குறித்துப் பெருமை கொள்ளத்தக்க அனைத்துக் கருத்துக்களும் மதிப்பீடுகளும் திரைப்படங்கள், காணொளி, இசை, இலக்கியம் மற்றும் கலை ஆகியவை மூலமாகப் பரப்பப்பட்டன. முதலாளித்துவத்தை மேம்படுத்த தத்துவமாக முன்வைத்த அமெரிக்கா, ஒரு அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார கருத்தியல் என்ற அளவில் கம்யூனிசத்தைக் கண்டனம் செய்தது. மாறாக சோவியத் ரஷ்யாவில் சோஷலிசம் என்ற அமைப்பினுள் கூட்டு உழைப்பும் கூட்டுத் தலைமையுமே சிறந்தவை என ஊக்குவிக்கப்பட்டன. ஜனநாயகமும் சந்தைப் பொருளாதாரமும் முதலாளித்துவத்தின் சுரண்டல் தன்மையை மறைப்பதற்கான முகப்புத் தோற்றமே என விமர்சிக்கப்பட்டன.

 

ஈ) உளவறிதல்


இரு வல்லரசுகளுமே பரஸ்பரம் இராணுவ ரகசியங்கள் குறித்த செய்திகளையும், ஏனைய முக்கிய ஆவணங்கள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கவும் உளவறிதல் (அ) ஒற்றறிதல் முறையை முக்கியக் கருவியாகப் பயன்படுத்தின. பனிப்போரின் போது இருவல்லரசுகளும் வலுவான உளவுத்துறை - சேகரிக்கும் அமைப்புகளை பராமரித்தன. அமெரிக்காவின் உளவு நிறுவனமான மத்திய புலனாய்வு முகமை (Central Inteligence Agency - CIA) 1947இல் நிறுவப்பட்டது. சோவியத் யூனியனின் உளவு நிறுவனமான KGB (Komite Gposudars Tvennoy Besopasnbosti or committee for National Security) 1954இல் உருவாக்கப்பட்டது. இந்த உளவறிதல் போர் பெருமளவில் சந்தேகத்தையும் வெறுப்பையும் தூண்டியது. உளவாளிகளைக் கதாநாயகர்களாகவும் வில்லன்களாகவும் கொண்டு பரபரப்பாகப் பேசப்பட்ட பல திரைப்படங்களும், நாவல்களும் இக்காலத்தில் வெளியிடப்பட்டன. (எ.கா. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்)


 

உ) போரின் விளிம்பு வரை செல்வது

போரின் விளிம்புவரை செல்வது (போர் செய்வதல்ல) எனும் இச்சொல்லாடல் பனிப்போர் காலத்தில் நிலையாக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் அரசுச் செயலாளர் ஜான் பாஸ்டர் டல்லஸ் 1956இல் லைப் (Life) எனும் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் இச்சொல்லாடலைப் பயன்படுத்தினார். அரசியல் விவேகத்தில் போரின் விளிம்பு வரை (போரின் தொடக்க முனை) செல்வதற்கு நீங்கள் அச்சம் கொண்டால் நீங்கள் தோற்றவர்களாவீர்கள்" எனக் கூறினார் இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வைக் கூறலாம். 1962இல் கியூபாவில் சோவியத் யூனியன் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளை நிறுவியது. அணு ஆயுதப் போர் ஏற்பட்டுவிடுமோ எனும் நிலை ஏற்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்க கடற்படைகள் கியூபாவை முற்றுகையிட்டன. இறுதியில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் கியூபாவிலிருந்த ஏவுகணைகள் அகற்றப்பட்டன.

போரின் விளிம்பு வரை செல்வதென்பது, ஒரு நிகழ்வு, தனக்குச் சாதகமாக முடிய வேண்டும் என்பதற்காக ஆபத்தான நிகழ்வுகளை உண்மையான போர் நடைபெறுவதற்கான விளிம்புவரை நகர்த்திச் செல்வதாகும். பன்னாட்டு அரசியலில், வெளியுறவுக் கொள்கைகளில், இராணுவ உத்திகளில் இது இடம் பெறுகின்றது. இது அணு ஆயுதப் போர் குறித்த அச்சத்தையும் உள்ளடக்கியதாகும்.

 


ஊ) மறைமுகப் போர்கள் (சார்புப் போர்கள்)

அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் பனிப்போரின் ஒரு பகுதியாக மறைமுகப் போர்களில் ஈடுபட்டன. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள், பனிப்போரின் போது நடைபெற்ற கொரியப் போரும் (1950-1953) வியட்நாமியப் போர்களுமாகும் (1955-1975). இவ்விரு போர்களிலும் வட கொரியாவிலும்,வடவியட்நாமிலும் இருந்த கம்யூனிச அரசுகளுக்குச் சோவியத் யூனியன் ஆதரவளித்தது. அமெரிக்கா தென் கொரியாவிற்கும் தென் வியட்நாமிற்கும் துணையாக நின்றது. இப்போர்களின் விளைவாகப் பெருமளவிலான உயிர்ச் சேதங்களுக்கும், பொருள் நஷ்டங்களும் ஏற்பட்டதோடு,இப்போர்கள் உள்நாட்டுப் போர்களாகவும் மாறின. இப்போர்களின் போது பன்னாட்டு அளவிலான பொதுக்கருத்துக்களும் திரட்டப்பட்டன. வியட்நாம் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புகள் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியல், சமூகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

Tags : The World after World War II | History இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு.
12th History : Chapter 15 : The World after World War II : Cold War and its Strategies The World after World War II | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : கெடுபிடிப்போர் (பனிப்போர்) - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்