இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - மூன்றாம் உலக நாடுகளும் அணிசேரா இயக்கமும் | 12th History : Chapter 15 : The World after World War II
மூன்றாம் உலக நாடுகளும் அணிசேரா இயக்கமும்
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான சூழலில்
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியனவற்றைச் சேர்ந்த பல காலனிய நாடுகள்
ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பின்பற்றிய
பனிப்போர் உத்தியைக் கண்டு இப்புதிய சுதந்திர நாடுகள் கவலை கொண்டன. இவ்வதிகார முகாம்களை
ஏகாதிபத்தியத்தின் மற்றொரு வடிவமாகவே இந்நாடுகள் கருதின. இவ்விரு முகாம்களோடும் தங்களை
அடையாளப்படுத்திக் கொள்ள அவை விரும்பவில்லை. இந்நாடுகள் தங்களை மூன்றாம் உலக நாடுகள்
என்று அழைத்துக் கொண்டன. மூன்றாம் உலக நாடுகள்" எனும் இச்சொல்லாடலை பிரான்ஸ் நாட்டைச்
சேர்ந்த வரலாற்றிஞரும், மக்கள் தொகை ஆய்வாளருமான ஆல்பிரட் சாவி என்பார் 1952இல் உருவாக்கினார்.
மூன்றாம் உலக நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளில் சுதந்திரமான மற்றும் நடுநிலையான
கொள்கையைப் பின்பற்ற விரும்பின.
1955ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாண்டுங் என்ற இடத்தில் நடைபெற்ற முதல் ஆசிய-ஆப்பிரிக்க மாநாட்டில், பெரும்பாலும் புதிதாக விடுதலையடைந்த எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் சீன மக்கள் குடியரசு உட்பட 29 ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் கூடின. காலனியாதிக்கம், இன ஒதுக்கல் மற்றும் பனிப்போரால் வளர்ந்துவரும் பதட்டம் ஆகியவற்றை இம்மாநாடு கண்டனம் செய்தது. உலக அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிற்கான பிரகடனம் ஒன்றை இம்மாநாடு வெளியிட்டது. இப்பிரகடனம், நேருவின் பஞ்சசீலக் கொள்கையையும் பனிப்போருக்கு எதிரான நடுநிலை வகிக்கும் கூட்டு உறுதி மொழியையும் உள்ளடக்கியிருந்தது. பாண்டுங் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட பத்து கொள்கைகளும் பின்னர் அணிசேரா இயக்கத்தின் வழிகாட்டு நெறிகளாயின. Non-Alignment (அணி சேரா) எனும் வார்த்தை முதன் முதலில் V.K கிருஷ்ணமேனன் என்பவரால் ஐக்கிய நாடுகள் சபையில் 1953இல் உரையாற்றுகையில் உருவாக்கப்பட்டது.
பாண்டுங் மாநாட்டின் பத்துக் கொள்கைகளின் அடிப்படையில் இவ்வமைப்பின் முதல் மாநாடு 1961இல் யுகோஸ்லோவியாவின் தலைநகரான பெல்கிரேடில் நடைபெற்றது. அணிசேரா இயக்கத்தை நிறுவியதில் ஐந்து உறுப்பினர்கள் சிறப்புப் பங்கினை வகித்தனர். அவர்கள் : ஜவகர்லால் நேரு (இந்தியா), சுகர்னோ (இந்தோனேசியா), கமால் அப்துல் நாசர் (எகிப்து), குவாமி நுக்குருமா (கானா) மற்றும் ஜோசிப் பிரோஷ் டிட்டோ (யுகோஸ்லோவியா) ஆகியோராவர்.அணி சேரா இயக்கத்தின் நோக்கம் உலக அரசியலில் ஒரு சுதந்திரமான பாதையை உருவாக்குவதாகும். ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தல் பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல், ஆயுதக் குறைப்பு, இனவாதத்தையும் இனப்பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியதாகும். பெல்கிரேடு மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை வல்லரசுகளுடன் இராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்வதையும், தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு வல்லரசுகளை அனுமதிப்பதையும் தடை செய்தது.
அணி சேரா இயக்கத்தை முன்னெடுத்தவர்கள்,
1955ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டில் கீழே குறிப்பிடப்பட்டவற்றை இயக்கத்தின் இலக்குகளாகவும்,
நோக்கங்களாகவும் நிர்ணயம் செய்தனர்.
• அடிப்படை மனித உரிமைகளை மதித்தல். ஐக்கிய
நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மதித்தல்.
• அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின்
எல்லைப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மதித்தல்.
• சிறியவை, பெரியவை என்றில்லாமல் அனைத்து இனங்களும்,
அனைத்து நாடுகளும் சமம் என அங்கீகரித்தல்.
• அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமலும்
குறுக்கீடு செய்யாமலும் இருத்தல்.
• ஐ.நா சபையின் சாசனத்திற்கு இணங்க ஒவ்வொரு
நாடும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளதை
மதித்தல்.
• வல்லரசு நாடுகளில் ஏதாவது ஒன்றின் குறிப்பிட்ட
நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டுப்பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பயன்படுத்தாதிருத்தல்.
• எந்த நாடாக இருந்தாலும் அதன் அரசியல் சுதந்திரம்,
எல்லைப்பரப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அச்சத்தை ஏற்படுத்தும், இராணுவ நடவடிக்கைகள்,
வலியச்சென்று தாக்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தல். ஒருநாடு மற்ற நாடுகளுக்கு
எதிராக நெருக்கடிகளை தருதல் என்பதைப் பயன்படுத்தக் கூடாது.
• அனைத்துப் பன்னாட்டுப் பிரச்சனைகளுக்கும்
அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள், சமாதானம், நடுவர் தீர்ப்பு
, சட்டங்களின் வழியிலான தீர்ப்பு அல்லது சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் விரும்புகிற,
ஐ.நா. சபை சாசனத்திற்கு இணக்கமான, வழிகள் ஆகியவற்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
• பரஸ்பர அக்கறை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
• நீதி மற்றும் பன்னாட்டு கட்டுப்பாடுகளுக்கு
மதிப்பளித்தல்.
பனிப்போரின் போது அணிசேரா இயக்கம் அமெரிக்க,
சோவியத் யூனியன் ஆகிய இரு அதிகார முகாம்களுக்கு ஒரு மாற்றாகச் செயல்பட்டது. சோவியத்
யூனியனின் சரிவோடு அணி சேரா இயக்கம் தேவையற்றதானது.
நேருவின் பஞ்சீலக் கொள்கை:
1) நாடுகளிடையே இறையாண்மை, எல்லைப்
பரப்பு குறித்த பரஸ்பர மரியாதை
2) பரஸ்பரம் ஆக்கிரமிப்பு இல்லாத
நிலை
3) பரஸ்பரம் ஒருநாடு மற்றொன்றின்
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலிருத்தல்
4) சமத்துவம் மற்றும் பரஸ்பர
நன்மை
5) சமாதான சகவாழ்வு