Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | 12th History : Chapter 15 : The World after World War II

   Posted On :  12.07.2022 01:29 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

இரண்டாம் உலகப் போரானது (1939 – 1945) நேச நாடுகளுக்கும் அச்சு நாடுகளுக்குமிடையே நடைபெற்றது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நேசநாடுகள் எனும் முகாமை அமைத்தன. 1941இல் பேர்ல் துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவும் இவ்வணியில் இணைந்தது.



கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாகிக் கொள்வது

 

• இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இருதுருவ உலகம் தோன்றுதல்

• போருக்குப் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பில் ஐரோப்பா புனரமைக்கப்படுதலும் பனிப்போரின் தொடக்கமும்

• கருத்தியல் அடிப்படையில் இரு வேறுபட்ட முகாம்கள் உருவாவதற்கு இட்டுச்சென்ற இராணுவ உடன்படிக்கைகள். அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலைமையேற்ற நேட்டோ, சோவியத் ரஷ்யாவின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள்

• மூன்றாம் உலக நாடுகளும் அணிசேரா இயக்கமும்

• ஐ.நா சபையும் உலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அதன் பங்கும்

• ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்படுதலும் ஒருங்கிணைக்கப்படுதலும்

• சோவித் யூனியனின் வீழ்ச்சியும் பனிப்போரின் முடிவும்

 

அறிமுகம்

இரண்டாம் உலகப் போரானது (1939 – 1945) நேச நாடுகளுக்கும் அச்சு நாடுகளுக்குமிடையே நடைபெற்றது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நேசநாடுகள் எனும் முகாமை அமைத்தன. 1941இல் பேர்ல் துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட பின்ன ர் அமெரிக்காவும் இவ்வணியில் இணைந்தது. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை அச்சு நாடுகளாகும். நேசநாடுகளிடையே கருத்தியல் அடிப்படையிலான வேறுபாடுகள் நிலவிய போதும் ஜெர்மனியின் பாசிசமும் அந்நிய நாடுகளுடன் போர் செய்வதில் அது கொண்டிருந்த தணியாத தாகமும் அவைகளை இணைந்து பணியாற்றக் கட்டாயப்படுத்தின. சோவியத் யூனியன் கம்யூனிச நாடாக இருந்தமையால் அதனோடு இணைந்து செயல்படுவதில் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சிரமங்கள் இருந்தன.

இரண்டாவது உலகப்போரின் இறுதியில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் வல்லரசுகளாக உருவாயின. கருத்தியல் ரீதியிலான செல்வாக்கைப் பெறுவதற்கு இரு நாடுகளுமே முயற்சித்தால் இவ்விரு நாடுகளும் பரஸ்பர சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டிருந்தன. இரு நாடுகளும் தங்கள் கருத்தியலைக் கட்டாயப்படுத்தியோ அல்லது ஆர்வமூட்டி தன்வசப்படுத்துதல் மூலமாகவோ பரப்ப முயன்றன. புதிதாக உருவாகியிருந்த இருதுருவ உலகில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடனோ அல்லது சோவியத் ரஷ்யாவுடனோ அணி சேர்ந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியா உட்பட பல ஆசிய - ஆப்பிரிக்க நாடுகள் எந்த அணியிலும் சேராதிருக்கவே விரும்பின. இவ்வாறான நாடுகள் ஒன்றிணைந்து அணிசேரா இயக்கத்தை உருவாக்கின. (Non Alignment Movement - NAM)

முதல் உலகப் போரைக் காட்டிலும் இரண்டாம் உலகப்போர் மிக அதிகமான அழிவையும் புலப்பெயர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆகவே உலகத் தலைவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு போர் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு உலக அளவில் ஒரு அமைப்பு இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தனர். இதன் விளைவாக 1945இல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கினையாற்றி வருகிறது. ஆனால் பனிப்போர் சூழ்நிலை ஐக்கிய நாடுகள் சபையை சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும் செயல்படவிடாமல் தடுத்தது. இரண்டாம் உலகப்போர் ஐரோப்பியப் பொருளாதாரத்தை பாழ்படுத்தியதோடு மேற்கு ஐரோப்பாவின் பல நகரங்களை பேரழிவுக்கு உள்ளாக்கியது. தொடக்கத்தில், சிதைந்துபோன பொருளாதாரத்தை புனரமைப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது. இதுவே நாளடைவில் ஒரு வலுவான கூட்டு ஏற்படுவதற்கு வழிகோலியது.

இப்பாடத்தில் இரண்டு அதிகாரக் குழுக்கள் உருவானது தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவடையச் செய்ய அவைகள் மேற்கொண்ட தந்திரங்கள், அணிசேரா இயக்கத்தின் தோற்றம், பிரச்சனைகளை தீர்ப்பதில் ஐ.நா. சபையின் பங்கு, போருக்குப்பின்னர் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு நடவடிக்கைகளும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்படுதல் மற்றும் இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்தது ஆகியவை விவாதிக்கப்பட்டுள்ளன.

Tags : History வரலாறு.
12th History : Chapter 15 : The World after World War II : The World after World War II History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்