இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - ஐ.நா. சபையும் உலகளாவிய பிரச்சனைகளும் | 12th History : Chapter 15 : The World after World War II
ஐ.நா. சபையும் உலகளாவிய பிரச்சனைகளும்
பன்னாட்டு சங்கம் (League of Nations) தோல்வியுற்றதை
இரண்டாவது உலகப்போர் மெய்ப்பித்தது. இதைப் போன்று மற்றொரு போர் நடைபெறாமலிருக்க ஒரு
வலுவான அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உலகத் தலைவர்கள் உணர்ந்தனர். வாஷிங்டன்
நகரில், ஜார்ஜ்டவுன் பகுதியில் உள்ள டம்பார்டன் ஓக்ஸ் எனும் மாளிகையில் சீனா, சோவியத்
யூனியன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி
(1944 ஆகஸ்டு 21 முதல் அக்டோபர் 7 முடிய) உலக அமைப்புக்கான ஓர் செயல்திட்டத்தை உருவாக்கினர்.
1943இல் மாஸ்கோ பிரகடனம் பன்னாட்டு சங்கத்திற்குப் பதிலாகப் பன்னாட்டு அளவில் ஒரு அமைப்பு
உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து 1945 பிப்ரவரியில்
நடைபெற்ற யால்டா மாநாட்டில் பாதுகாப்பு சபையில் வாக்களிக்கும் முறை குறித்தும் வேறு
சில பிரச்சனைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 1945 ஏப்ரல் மாதம் சான்பிரான்சிஸ்கோவில்
நடைபெற்ற மாநாட்டில் இவை தொடர்பான விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு ஐக்கிய
நாடுகள் சபையின் சாசனம் இறுதி செய்யப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல்
51 உறுப்பினர்களோடு உதயமானது. பொது சபை, பாதுகாப்பு சபை, பொருளாதார மற்றும் சமூக அவை,
தர்மகர்த்தா அவை , பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நாவின் தலைமைச் செயலகம் ஆகியவை இவ்வமைப்பின்
முக்கிய அங்கங்களாகும். நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிரிக்வே லை ஐ.நா.வின்
முதல் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்சொல்லப்பட்ட முக்கிய அங்கங்கள்
தவிர ஐ.நா.சபை 15 சிறப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. பன்னாட்டு தொழிலாளர் சங்கம்
(ILO- ஜெனிவா), உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO- ரோம்), பன்னாட்டு நிதியம்
(IMF- வாஷிங்டன்), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ
UNESCO - பாரிஸ்), உலக சுகாதார அமைப்பு (WHO- ஜெனிவா), உலக வங்கி (வாஷிங்டன் D.C.)
ஆகியவை சில முக்கியமான நிறுவனங்களாகும்.
"போர்கள் மனிதர்களின் மனங்களிலிருந்து
தொடங்குவதால் அம்மனிதர்களின் மனங்களில்தான் அமைதிக்கான பாதுகாப்புகளும் கட்டப்பட வேண்டும்"
(ஐ.நா.சபை சாசனத்தின் முகவுரை)
ஐக்கிய நாடுகள் சபையின் உதயமும் பனிப்போரின்
தொடக்கமும் ஒரே சமயத்தில் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் போர்களைத் தடுப்பதில் ஐ.நா.
சபை முக்கியப்பங்காற்றியது. ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களே பிரச்சனைகளில்
ஈடுபட்டவர்களாக இருந்ததால் ஐ.நா.சபை ஒரு மௌனமான பார்வையாளராகவே இருந்தது. ஐ.நா. சபை
ஒரு இராணுவத்தைப் பெற்றுள்ளது. அது ஐ.நா. அமைதி காக்கும் படை என அறியப்படுகிறது. அப்படைக்குத்
தேவையான வீரர்களை உறுப்பு நாடுகள் அனுப்பி வைக்கின்றன. ஐ.நா. சபையின் படைவீரர்கள் வெளிர்
நீலநிற தலைக்கவசம் அணிவதால் அவர்கள் நீல தலைக் கவசத்தினர் என அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூதர்கள்
தங்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் வேண்டுமெனக் கோரினர். அராபியர்கள் இதை எதிர்த்தனர்.
அப்பிரச்சனை ஐ.நா. சபையின் முன் வைக்கப்பட்டது. 1947 மே மாதம் ஐ.நா. சபையின் பொது சபை
தீர்மானமொன்றை நிறைவேற்றி, அதன் மூலம் பாலஸ்தீன பிரச்சனை குறித்து விசாரித்து பரிந்துரைகள்
வழங்க ஐ.நா. சபையின் பாலஸ்தீனத்திற்கான சிறப்பு குழுவொன்றை (UNSCOP) அமைத்தது. இச்சிறப்புக்
குழுவின் அறிக்கையின்படி அராபியர்கள் 85 விழுக்காட்டு நிலப்பகுதிகளையும் யூதர்கள்
5.8 விழுக்காட்டு நிலப்பகுதியையும் செந்தமாகக் கொண்டிருந்தனர். இவ்வுண்மைகளைப் பொருட்படுத்தாது,
பாலஸ்தீனம் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும் பெரும்பான்மை அராபியர்கள், யூதர்கள்
குடியேறுவதற்கான நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரை செய்தது. முன்மொழியப்பட்ட
இச்செயல் திட்டத்தின்படி அராபியர்களுக்கு 45 விழுக்காடு நிலங்களைக் கொண்ட நாடும்
55 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்ட யூதநாடும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்படி
1948 மே 14இல் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1949இல் சீனாவின் முதன்மை நிலப்பகுதியில் மா
சே துங் கம்யூனிச அரசை உருவாக்கிய சூழலில் அங்கிருந்து பார்மோசா தீவுக்குத் தப்பிச்சென்ற
சியாங்-கே -ஷேக் அங்கு தேசிய சீன அரசை உருவாக்கி தலைமை ஏற்றார். இந்நிலையில் பாதுகாப்பு
சபையில் இடம் பெற்றுள்ள தேசிய சீனாவின் பிரதிநிதி அகற்றப்பட்டு அவ்விடத்தில் கம்யூனிஸ்ட்
சீனாவின் பிரதிநிதி அமர்த்தப்பட வேண்டுமென சோவியத் யூனியன் கோரிக்கை வைத்தது. கோரிக்கை
ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சோவியத் ரஷ்யா , பாதுகாப்பு சபையையும் ஐ.நா. சபையின் ஏனைய
அமைப்புகளையும் புறக்கணிக்க முடிவுசெய்தது. முடிவில் 1971இல் தான் சீன மக்கள் குடியரசு
பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினரானது.
1910ஆம் ஆண்டு முதல் கொரியா ஜப்பானால் ஆட்சி
செய்யப்பட்டது. 38வது இணை கோட்டை மையமாகக்கொண்டு கொரியா 1945இல் இரண்டு மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டது. மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் பெரும்பாலுமான தொழிற்சாலைகளும்
அமைந்திருந்த வடக்கு மண்டலம் சோவியத் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. மக்கள்தொகையில் மூன்றில்
இரண்டு பகுதி மக்களையும் வளமிக்க வேளாண் விளைநிலங்களையும் கொண்டிருந்த தென் மண்டலத்தை
அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தென்கொரியாவில் ஐ.நா. சபையின் மேற்பார்வையில்
நடத்தப்பட்ட தேர்தலில் சிங்மேன் ரீ என்பவர் குடியரசுத் தலைவரானார். வட கொரியாவில் கிம்
இல் சுங் தலைமையில் மக்கள் ஜனநாயகக் குடியரசு எனும் பெயரில் கம்யூனிச அரசை ரஷ்யா உருவாக்கியது.
இதன் பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் படைகளை அங்கிருந்து விலக்கிக் கொண்டன.
தொடர்ந்து தென்கொரியாவின் குடியரசுத் தலைவர் இராணுவ நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த நாட்டை
ஒன்றிணைப்பதே தனது குறிக்கோள் என வெளிப்படையாக அறிவித்தார். 1950 ஜூன் 25இல் வடகொரியப்
படைகள் தென்கொரியாவின் மீது படையெடுத்தபோது வெளிப்படையான போர் தொடங்கியது.
உடனடியாக பாதுகாப்பு சபை கூடியது. சோவியத்
யூனியன் பங்கேற்காத நிலையில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
இப்பிரச்சனையில் உதவி செய்யும்படி ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
பதினாறு உறுப்பு நாடுகள் படை கொடுத்து உதவியதுடன் நாற்பத்தைந்து நாடுகள் பலவகைப்பட்ட
உதவிகளைச் செய்தன. ஐ.நா. சபையின் படைகளுக்கு அமெரிக்கத் தளபதி மெக் ஆர்தர் தலைமையேற்றார்.
1950 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்பு சபைக்கு சோவியத் யூனியன் திரும்பிய நிலையில் அமெரிக்காவின்
முன்முயற்சியில், பொது சபை அவசரமாகக் கூடி, அமைதிக்காக ஒன்றுபடுகிறோம் என்ற சமாதானத்
தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்மூலம் பாதுகாப்பு சபையானது ஒரு நெருக்கடியில் உடன்பாட்டை
எட்டமுடியாவிட்டால், அவசரமாகத் தேவைப்படும் பட்சத்தில் பொது சபை இராணுவத்தை பயன்படுத்தும்
பரிந்துரையைச் செய்யலாம் எனும் முன்னுதாரணத்தை தெளிவாக ஏற்படுத்தியது. இத்தீர்மானம்
சட்டத்திற்குப் புறம்பானது என சோவியத் ரஷ்யா நினைத்தது. 1953 ஜூலையில் போர் நிறுத்த
உடன்பாடு கையெழுத்தானதோடு இப்போர் முடிவுற்றது. மேலும் இப்போர் பொது சபையின் முக்கியத்துவத்தை
அதிகரிக்கச் செய்தது.
சூயஸ் கால்வாய், செங்கடலை மத்தியதரைக் கடலோடு
இணைக்கிறது. எகிப்திய பாஷாவின் அனுமதியோடு பெர்டினான்ட் டி லெசெப்ஸ் எனும் பிரெஞ்சுக்காரர்
இக்கால்வாயைக் கட்டினார். விரைவில் கால்வாயின் மீதான உரிமை இங்கிலாந்தின் கைகளுக்கு
மாறியது. ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலுள்ள மிக முக்கிய இணைப்பே இக்கால்வாய்தான்.
1956 ஜூலை மாதத்தில் எகிப்தின் குடியரசுத்தலைவராக இருந்த கமால் அப்துல் நாசர் சூயஸ்
கால்வாயை தேசியமயமாக்கினார். அதுவரை அக்கால்வாய் ஆங்கிலோ - பிரெஞ்சு சூயஸ் கால்வாய்
கழகம் எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. இதன் விளைவாக அக்டோபர்
29இல் இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பம் மீது படையெடுத்தன. மறுநாள் பிரிட்டிஷ் மற்றும்
பிரான்ஸ் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் எகிப்தின் விமானத் தளங்களின் மீது குண்டுகள்
வீசின. 1956 நவம்பர் 5இல் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் படைகள் எகிப்தின்
துறைமுக நகரமான செய்த்தில் இறங்கின. இப்பிரச்சனை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் பிரிட்டனும், பிரான்சும் மறுப்பாணையைப் (Veto) பயன்படுத்தி தீர்மானத்தைத் தடுத்தன.
இச்சூழலில் சோவியத் யூனியனும் படையெடுக்குமோ என ஐயம் கொண்ட பொது சபை அமெரிக்காவின்
முன்முயற்சியில் அவசரக்கூட்டமொன்றைக் கூட்டி எகிப்தின் மீதான படையெடுப்பைக் கண்டனம்
செய்தது. இதனால் இஸ்ரேல், கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் போரை நிறுத்தின.
எகிப்திலிருந்து தங்கள் படைகளை விலக்கிக்கொள்வது என முடிவு செய்தன. பொது சபையானது ஐக்கிய
நாடுகள் சபையின் அவசரப் படை (UNEF) எனும் படையை உருவாக்க வாக்களித்தது. இப்படை மோதலில்
ஈடுபடும் படையல்ல மாறாக அமைதி காக்கும் படை ஆகும். பிரச்சனையோடு தொடர்புடைய இரு தரப்பினரின்
சம்மதத்தின் பெயரிலேயே இப்படை அனுப்பப்படும். டிசம்பர் 22இல் ஐ.நா.சபையின் படைகள் பிரிட்டிஷ்
மற்றும் பிரெஞ்சுப் படைகளையும் மற்றும் இஸ்ரேலியப் படைகளையும் 1957இல் மார்ச் மாதத்தில்
வெளியேற்றின. நாசர் அராபிய, எகிப்திய தேசியவாதத்தின் வெற்றியாளராகவும், கதாநாயகனாகவும்
வலம் வந்தார்.
ஸ்டாலினுடைய ஆட்சியின் போது பிரதமராக நியமிக்கப்பட்ட
ஹங்கேரியின் தலைவரான ரகோசி 1953இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் விளைவாக இம்ரே
நேகி என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அவருடைய அரசாங்கத்தின்
ஆதரவுமில்லை , ரஷ்யாவும் அவருக்கு ஆதரவாக இல்லை . ரகோசி தொடர்ந்து பொதுவுடைமை கட்சியைத்
தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். எழுத்தாளர்களும் அறிவார்ந்த மக்களும் அவருக்கு
எதிரான எதிர்ப்புக்குத் தலைமையேற்று, ரகோசியை பதவி விலகக் கோரினர். ரகோசி 1956 ஜூலையில்
அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் எதிர்ப்பு தொடர்ந்து நீடித்தது. அக்டோபர்
23இல் ஒருசில அறிவார்ந்த மக்களால் திட்டமிடப்பட்ட கிளர்ச்சி புதாபெஸ்ட்டில் வெடித்தது.
அமைதியான ஆர்ப்பாட்டமாகத் தொடங்கிய அது விரைவில் சோவியத் ரஷ்யாவிற்கும் அதன் கைப்பாவையான
ஹங்கேரியின் அரசுக்கும் எதிரான தேசிய எழுச்சியாக உருவெடுத்தது. அக்டோபர் 26இல் இம்ரி
நேகி மீண்டும் அதிபராவதை ரஷ்யா ஏற்றுக் கொண்டது. அவர் அதிபராகப் பொறுப்பேற்றதும் பலகட்சிமுறையை
அறிமுகம் செய்து ஒரு கூட்டணியாட்சியை நிறுவினார். இதனால் கோபம் கொண்ட சோவியத் ரஷ்யா
ஹங்கேரிக்குள் நவம்பர் 4இல் படைகளை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.
சூயஸ் கால்வாய்ப் பிரச்சனையில் எகிப்தின்மீது
ஆங்கிலேய - பிரெஞ்சு - இஸ்ரேலியத் தாக்குதல் நடைபெற்ற அதே சமயத்தில்தான் ஹாங்கேரிய
கிளர்ச்சியும் நடைபெற்றது. இப்பிரச்சனை பாதுகாப்பு சபைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
பாதுகாப்பு சபை உடனடியாக ரஷ்யப்படைகள் ஹங்கேரியை விட்டு விலக வேண்டுமெனத் தீர்மானித்தது.
ரஷ்யா தனது மறுப்பாணை மூலம் இத்தீர்மானத்தை நிறைவேற்றவிடவில்லை. தொடர்ந்து அதே தீர்மானம்
பொது சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தீர்மானத்தால் பயனேதும் ஏற்படவில்லை . ஹங்கேரிக்கு
எதிராக ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐ.நா. சபை தனது செல்வாக்கால் கட்டுப்படுத்த முடியாமல்
போனது. ஒரு வலிமை மிகுந்த நாடு ஐ.நா. சபையை மீறி செயல்படுவதில் உறுதியாக இருந்தால்
ஐ.நா. சபையால் எதையும் செய்யவியலாது என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது.
இத்துடன் ரஷ்ய அதிபர் குருச்சேவின் ரகசியப்பேச்சு
அம்பலமானது. இந்நிகழ்வுகள் பன்னாட்டளவில் கம்யூனிச இயக்கத்தின் மேல் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது. உலகம் முழுவதிலும் எண்ணிக்கையில் அதிகமானோர் குறிப்பாக எழுத்தாளர்களும்
அறிவார்ந்த மக்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து விலகினர்.
1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு,
யூதர்கள் நாடு என இரண்டாகப் பிரிப்பதற்கு ஐ.நா.சபை வாக்களித்து முடிவு செய்த உடனேயே
பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே போர் மூண்டது. பாலஸ்தீனத்திலிருந்து
ஆங்கிலப் படைகள் வெளியேறிய பின்னர் (மே 15, 1948) இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.
இது சமயம் ஐ.நா. சபையின் பொதுக்குழு 1947-48 போரில் அகதிகளான பாலஸ்தீனியர்களுக்கு தங்கள்
வீடுகளுக்குத் திரும்பவும், ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டென மீண்டும்
உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் போரும் முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டில்
இஸ்ரேல் ஐ.நா. சபையில் உறுப்பினரானது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் தொடக்கத்திலிருந்தே
ஐ.நா. சபை அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு கொண்டது. ஐ.நா.சபையின் அமைதிகாக்கும்
படை எகிப்து-இஸ்ரேல் எல்லையில் முகாமிட்டிருந்தது. அகதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்
காலம் வரும் வரை அவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. சபையின் அகதிகளுக்கான நிவாரண மற்றும்
பணி நிறுவனம் (UNRWA) நிறுவப்பட்டது.
1966 வாக்கில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு புதிய
ரக போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் வழங்கத்தொடங்கியது. அதன் விளைவாக பனிப்போர் மத்திய
கிழக்கில் பாதம் பதித்தது. ஐ.நா.சபை காட்சியிலிருந்து காணாமல் போனது. அடுத்து வந்த
சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குமிடையே பதட்டம் அதிகரித்தது.
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் பீரங்கிப் பரிமாற்றங்கள்
இருந்தன. சிரியாவின் கடற்கரைக்குச் சற்று தொலைவில் அமெரிக்காவின் ஆறாவது கப்பற்படை
நிலை கொண்டது. இச்சூழலில் எகிப்தியப் பகுதிக்குள்ளிருந்த ஐ.நா.வின் படைகளையும், பார்வையாளர்களையும்
இஸ்ரேலிய எல்லைக்கு அனுப்பும்படி ஐ.நா. சபையை எகிப்திய அதிபர் நாசர் அறிவுறுத்தினார்.
படைநகர்வு குறித்து அவர் கேட்க இயலாது என ஐ.நா. சபை நாசருக்கு பதிலளித்தது. ஆகவே ஐ.நா.வின்
படைகள் ஒட்டுமொத்தமாக எகிப்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்
கொள்ளும் ஒரு வாய்ப்பு மட்டுமே அவருக்கிருந்தது. இதனைத் தொடர்ந்து 1967 மே 23இல் எகிப்து
டைரன் கடலிடுக்கு (நீர்ச்சந்தி) வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.
ஜூன் மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ நகரின் விமானத்தளங்களிலிருந்த
விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
ஆறாம் நாள் போரின் பாலஸ்தீனியர்கள் மீதமிருந்த
பகுதிகளான மேற்குக் கரை, காஜா முனை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு,
சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகளையும் எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்
கொண்டது. இருநூற்று ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மோர் இன்றும் இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்
இருக்கின்றனர். பாலஸ்தீனப் பிரச்சனையானது அகதிகள் பிரச்சனை என்ற கோணத்தில் மட்டுமே
அணுகப்பட்டது. அது பாலஸ்தீனர்களின் தேசிய உரிமைகளை மீண்டும் ஆதரிப்பது என்ற கண்ணோட்டத்தில்
அணுகப்படுவதில்லை . ஐ.நா. சபையின் தீர்மானம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இஸ்ரேலியப் படைகள்
கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறியது. பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள
நான்கு நாடுகளே இத்தீர்மானத்தை வரைந்தன. பாலஸ்தீனியர்களின் உரிமைகள் குறித்து மிகக்
குறைவான குறிப்புகளே இடம்பெற்றுள்ளமை, இச்செயல்பாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கை
உணர்த்தியது.
1967ஆம் ஆண்டுப் போரைத்தொடர்ந்து பல ஆண்டுகள் இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களை முற்றிலுமாகத் தீர்த்து வைப்பதற்கு, மோதல்களோடு தொடர்புடைய அனைவரும் பங்கேற்கும் (யாசர் அராபத்தின் தலைமையில் இயங்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட) பன்னாட்டு அமைதி மாநாட்டை தனது ஆதரவில் நடத்த ஐ.நா சபை மீண்டும் மீண்டும் முயற்சித்தது. ஒவ்வொரு முறையும் தடுப்பாணை அதிகாரம் மூலம் அமெரிக்கா அம்முயற்சிகளைத் தடுத்தது. பனிப்போர் சூழலில் இப்பகுதியில் பதட்டங்களை அதிகரிப்பதிலும் அல்லது கட்டுப்படுத்துவதிலும் மாஸ்கோவும் வாஷிங்டனும் மிகப்பெரும் பங்கு வகித்தன.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்: 1964க்கு முன்பு இரகசிய எதிர்ப்பியக்கங்களாக செயல்பட்ட பல்வேறு பாலஸ்தீனக் குழுக்களை ஒருங்கிணைப்பதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்க ம் (Palestine Liberation Organisation - PLO)1964இல் உருவாக்கப்பட்டது. 1967ஜூனில் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போருக்குப் பின்னர் -இவ்வமைப்பு முக்கியத்துவம் பெற்றது. 1990களில் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு 1980கள் முடிய PLO இஸ்ரேலுடன் நீண்ட நெடிய தற்காப்பு கொரில்லாப் போர்களில் ஈடுபட்டிருந்தது. யாசர் அராபத் இவ்வமைப்பின் மகத்தான தலைவராவார்.