Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள் | 12th History : Chapter 15 : The World after World War II

   Posted On :  12.07.2022 01:35 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள்

முதல் உலகப் போரைக் காட்டிலும் இரண்டாவது உலகப்போர் பேரழிவு மிக்கதாக இருந்தது. 60 மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள்

முதல் உலகப் போரைக் காட்டிலும் இரண்டாவது உலகப்போர் பேரழிவு மிக்கதாக இருந்தது. 60 மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். திட்டமிடப்பட்ட இன அழிப்பில் நாஜிகள் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களைக் கொன்றனர். மில்லியன் கணக்கான மக்கள் வீடற்றவர்களாகவும் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். இப்போர் விவசாய நிலங்களையும் தொழிற்சாலைகளையும் அழித்தது. வார்சா, கீவ், டோக்கியோ மற்றும் பெர்லின் போன்ற மாபெரும் நகரங்கள் முற்றிலும் பாழாயின. போருக்கு முன்னர் பன்னாட்டு அரசியல் அரங்கில் செல்வாக்குடன் உலா வந்த இங்கிலாந்தும் பிரான்சும் நிலைகுலைந்தன. போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் நிலை உணவு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையுடன் கவலைக்கிடமானதாக இருந்தது. வேலையின்மை விகிதங்கள் அதிகரித்தன.

போருக்குப் பிந்தைய , உற்பத்திப்பொருட்கள் தொடர்பாக நிலவிய சூழல் முதலாளித்துவ நாடுகளின் தடையற்ற வணிகக் கொள்கைக்குச் சவாலாக அமைந்தது. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் மக்களின் நலன்களை மேம்படுத்துவது எனும் உறுதிப்பாட்டுடன் சமூக நல அரசுகளாக மாறின. ஆளுகின்ற அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனநிறைவு பெறாத துயருற்ற மக்கள் சோசலிச இயக்கங்களை ஆதரிக்கத் தலைப்பட்டனர். குறிப்பாக கம்யூனிச இயக்கம் செயல்துடிப்புடன் விளங்கிய கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலைமை அவ்வாறுதான் இருந்தது. இடதுசாரி சார்புகொண்ட இயக்கங்களையும், கட்சிகளையும் சோவியத் யூனியன் ஆதரித்தது. 1948 காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் சோவியத் ரஷ்யா இடதுசாரி அரசுகளை நிறுவியது. யுகோஸ்லோவியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் ஏற்கனவே டிட்டோவின் தலைமையில் ஒரு கம்யூனிச அரசு உருவாகியிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வலிமையடைந்ததால் மேற்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனின் செல்வாக்கில் இருந்த கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ எனும் அச்சத்தினால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கவலை கொண்டன.

 

இரு-துருவ உலகம் உருவாதல்

ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து, 1945 ஜூலையில், ஜெர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக முதலில் ஸ்டாலின், ட்ரூமன் மற்றும் சர்ச்சில் ஆகியோரும் பின்னர் சர்ச்சிலுக்குப் பதிலாக கிளமென்ட் அட்லியும் பெர்லினுக்கு அருகேயுள்ள போட்ஸ்டாம்எ னுமிடத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ட்ரூமன் சர்ச்சிலிடம் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி கூறினார். இச்சந்திப்பு நடந்த சில நாட்கள் கழித்து ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. ஜப்பானியப் பேரரசர் ஹிரோஹிட்டோ தனது நிபந்தனையற்ற சரணடைதலை அறிவித்தார். சோவியத் ரஷ்யாவிடம் தகவல் தெரிவிக்காமலே இக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டதால் இந்நடவடிக்கை இருநாடுகளுக்கிடையிலான அரசியல் விவேக் நடவடிக்கைகளில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. 1949இல் சோவியத் ரஷ்யா அணுகுண்டை தயாரித்துவிட்டது.


இதுசமயம், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் (International Monetary Fund-IMF) ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. 1946 பிப்ரவரி 22இல் மாஸ் கோவில் இருந்தவரும் அமெரிக்க  விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்தவருமான ஜார்ஜ் கென்னன் அமெரிக்க அரசாங்கத்திற்கு 8,000 வார்த்தைகள் கொண்ட தந்தியொன்றை அனுப்பினார். நீண்ட தந்தி என்றறியப்பட்ட இத்தந்தியில் அவர் முதலாளித்துவ உலகத்துடன் நீண்டகால, அமைதியான சமாதான சகவாழ்வை மேற்கொள்ளும் வாய்ப்பை சோவியத் யூனியன் பார்க்கவில்லை என உறுதியாகக் கூறி, உலக நாடுகளில் கம்யூனிசம் "விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவது" சிறந்த உத்தியாக இருக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

1946 மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் ஃபுல்டன் எனுமிடத்தில் உரை நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டிருந்த சர்ச்சில், சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச அரசுகளை நிறுவிய செயல்பாடுகளைக் கண்டனம் செய்தார். அவர் பால்டிக்கிலுள்ள ஸ்டெடின் முதல் ஏட்ரியாட்டிக்கிலுள்ள டிரஸ்டி வரை இரும்புத் திரையொன்று போடப்பட்டுவிட்டது" என அறிவித்தார். கம்யூனிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கின்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட கூட்டணியொன்றிற்கு அழைப்பு விடுத்தார். சர்ச்சில் ஆற்றிய உரை பனிப்போருக்கான சைகையாகக் கருதப்படுகிறது. சர்ச்சிலை போர்விரும்பி என ஸ்டாலின் விமர்சனம் செய்தார். சர்ச்சிலின் இரும்புத்திரை பேச்சிற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீதான சோவியத் யூனியனின் பிடி மேலும் இறுகியது. 1947இன் இறுதிக்குள் செக்கோஸ்லோவாக்கியா தவிர ஏனைய பகுதிகள் அனைத்தும் கம்யூனிச ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.


 

பெர்லின் முற்றுகையும் கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி உருவாதலும்

யால்டா மற்றும் போட்ஸ்டாம் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி பெர்லினைத் தலைநகராகக் கொண்ட ஜெர்மனி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவை அமெரிக்க மண்டலம், இங்கிலாந்து மண்டலம், பிரெஞ்சு மண்டலம் மற்றும் சோவியத் ரஷ்யா மண்டலம் என்பனவாகும். 1948இன் தொடக்கத்தில் மூன்று மேற்கு மண்டலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டது. மார்ஷல் திட்டத்தின் காரணமாக அப்பகுதி வேகமாக முன்னேறி மேம்பாடடைந்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக மேற்கு பெர்லினுக்கும் மேற்கு ஜெர்மானியப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் சோவியத் ரஷ்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. 1948 ஜூனில் மேற்கு பெர்லினுக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான அனைத்து சாலை, ரயில் போக்குவரத்துக்களை சோவியத் யூனியன் துண்டித்தது. பெர்லினுடன் வான்வழியாகத் தொடர்புகொள்வது என மேலைநாடுகள் முடிவு செய்தன. பேரளவிலான பொருட்செலவில் 11 மாதங்களாக மேற்கு பெர்லினுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. 1949 மே மாதத்தில் சோவியத் ரஷ்யா நிலவழித் தொடர்புகள் மீதான தடையை நீக்கியது. அதன்பின் பிரச்சனையும் தீர்ந்தது. மேற்கத்திய சக்திகள் அதுசமயம் ஒருபடி மேலே சென்று 1949 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசை (FRG - The Federal Republic of Germany) உருவாக்கியது. (இது மேற்கு ஜெர்மனி என பரவலாக அழைக்கப்பட்டது). 1949 அக்டோபரில் சோவியத் ரஷ்யா ஜெர்மன் ஜனநாயகக் குடியரசை (GDR - The German Democratic Republic) உருவாக்கின. (இது கிழக்கு ஜெர்மனி என பரவலாக அறியப்பட்டது). ஜெர்மனி பிரிக்கப்பட்டதே உண்மையான பனிப்போரின் தொடக்கத்திற்கான குறியீடு எனில், 1990இல் நடைபெற்ற ஜெர்மனியின் மறுஇணைப்பு பனிப்போர் முடிவுற்றதன் குறியீடாகும்.


Tags : The World after World War II | History இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு.
12th History : Chapter 15 : The World after World War II : Post-War Conditions in Europe The World after World War II | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்