ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நிறங்கள்' | 7th Science : Term 3 Unit 1 : Light
நிறங்கள்
ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது நம் கண்ணின் விழித்திரையைத் தூண்டி பார்வையை ஏற்படுத்துகிறது. கண்ணுறு ஒளி என்பது பல்வேறு நிறங்களைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும், குறிப்பிட்ட ஓர் அலை நீள மதிப்பைக்கொண்டது. கண்ணுறு ஒளியின் , அலைநீள நெடுக்கம் ஆனது 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரைமதிப்பு உடையது. (1 நேனோ மீட்டர்= 10-9 மீட்டர்). கண்ணுறு ஒளியின் பட்டை VIBGYOR எனப்படுகிறது
V – Violet - ஊதா
I – Indigo - கருநீலம்
B – Blue - நீலம்
G – Green - பச்சை
Y – Yellow - மஞ்சள்
O – Orange - ஆரஞ்சு
R – Red - சிவப்பு
செயல்பாடு : 10
வெள்ளொளி ஆனது பல நிறங்களைக் கொண்டது என்றும்; அதனை முப்பட்டகம் மூலம் பிரிக்க இயலும் என்றும் நாம் அறிந்துகொண்டோம். இதே போன்று பல நிறங்களைக் கொண்டு மீண்டும் வெள்ளை நிறத்தைப் பெற முடியுமா? முயற்சி செய்யுங்கள்.
பல வண்ணத் தீட்டுக் கோலை எடுத்துக்கொள்ளுங்கள். வானவில்லின் நிறங்களைக் கொண்ட வண்ணத் தீட்டுக் கோல்களை தேர்ந்தெடுங்கள். ஒரு வெள்ளைத்தாளில், தேர்ந்தெடுத்த வண்ணத் தீட்டுக் கோலை ஒவ்வொன்றாக ஒன்றின் மீது ஒன்றாக வரையுங்கள். வெள்ளை நிறம் பெற முடிந்ததா?
ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது. குறிப்பிட்ட ஓர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விழித்திரையை அடையும்போது, நம் மூளை அந்நிறத்தை உணர்ந்துகொள்கிறது. கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் (VIBGYOR), நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது, மூளையானது வெண்மையை உணர்கிறது. இதிலிருந்து, வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல. ஆனால், வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். அதே போன்று கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமையாக அமையும்