மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - ஒளியியல் | 7th Science : Term 3 Unit 1 : Light
அலகு 1
ஒளியியல்
கற்றல் நோக்கங்கள்
* ஒளி என்பது ஒரு வகை ஆற்றல் என்பதை அறிந்து கொள்ளுதல்
* இயற்கை மற்றும் செயற்கை ஒளி மூலங்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளுதல்
* ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை அறிந்து கொள்ளுதல்
* நிழல்கள் உருவாகும் விதத்தை புரிந்து கொள்ளுதல்
* ஒளியின் எதிரொளிப்பையும் அதன் வகைகளை அறிந்து கொள்ளுதல்
* ஒளியின் எதிரொளிப்பு விதிகளைப் புரிந்து கொள்ளுதல்
* சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களின் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல்
* ஒளியின் நிறப்பிரிகை மற்றும் நிறமாலைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
* நிறங்களின் தொகுப்பினை அறிந்து கொள்ளுதல்
அறிமுகம்
ஓர் இருட்டறையில் நீங்கள் நுழையும் போது, அங்கு இருக்கும் பொருள்கள் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மின்விளக்கு ஒன்றினை நீங்கள் ஒளிரச் செய்யும் பொழுது, அறையில் உள்ள பொருட்களை உங்களால் காண இயலுகிறது. நம்மால் பொருள்களை எவ்வாறு காண முடிகிறது? நீங்கள் இப்புத்தகத்தை பார்க்கும்போது, புத்தகத்தின் மீது விழும் ஒளியானது, பிரிதிபலிக்கப்பட்டுப் பின் உங்கள் கண்களை வந்தடைகிறது. ஒளி என்பது, நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் காண உதவும் ஆற்றலின் ஒரு வகையாகும். ஒளியை நம் கண்கள் கண்டுணர்ந்து கொள்கின்றன. நம் பார்வைக்கு ஒளி என்பது மிகவும் அவசியம். இப்பாடத்தில், ஒளியைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது சூரிய ஒளி ஆகும். எனவே, தாவரங்கள் பெரும்பாலும் சூரிய ஒளியைச் சார்ந்துள்ளன. மனிதர்களும் விலங்குகளும் தாம் உண்ணும் உணவிலிருந்து கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகிய ஊட்டச்சத்துகளைப் பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன் - டைஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.