அரசியல் அறிவியல் - அரசமைப்பு, நிர்வாகச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் | 12th Political Science : Chapter 4 : Indian Judiciary
அரசமைப்பு, நிர்வாகச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம்
அரசமைப்பு என்பது மேலான சட்டமாகும். மற்ற எல்லா சட்டங்களும் அரசமைப்பிற்கு பொருந்தி வர வேண்டும். அரசமைப்பானது அரசு தொடர்புடைய சட்டங்களையும், மக்கள் தொடர்புடைய சட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.அரசமைப்பு விதிகள் என்பது அரசின் பல்வேறு நிறுவனங்களின் வரையறை, பணிகள், அதிகாரங்கள் மற்றும் அவற்றின் அமைப்புகள் குறித்த தொகுப்பு விதிகள் ஆகும். அதாவது சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை போன்றவைகள் மற்றும்குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
அரசமைப்பு என்பது வலியுறுத்துவதும் வழிகாட்டுவதுமான விதிகளின், ஒரு தொகுப்பு ஆகும். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு விதிமுறைகளின் தொகுப்பை முன்மொழிவதன் மூலம் தேசத்தை ஒழுங்குப்படுத்துகிறது. அவை நாட்டைச் சரியான திசை வழியில் வழி நடத்துகிறது. அவை பல்வேறு அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் ஆகும். நாட்டில் நிலவும் அமைப்பு முறையை ஒழுங்குபடுத்துவதற்கு நமக்கு அரசமைப்பு விதிகள் தேவைப்படுகின்றன. நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைக் கடந்து போகாமல் இச்சட்ட விதிகளே நாடு முழுவதும் கண்காணிக்கின்றன.
செயல்பாடு
சிந்திக்கவும் -சேர்க்கவும் - பகிரவும்
மக்களின் -எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் - அரசமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்ற முறையில் நாடாளுமன்றம் / சட்டமன்றம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உங்கள் இணையோடு கீழ்கண்ட தலைப்புகளில் விவாதிக்கவும்.
அ) நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை -யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது?
ஆ) உங்கள் விடைக்கான உதாரணங்களைக் கூறவும்.
இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" என்ற ஆங்கிலக் கருத்தை காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது. சட்டத்தின் ஆட்சியில் மூன்று முதன்மையான சிறப்புகள் உள்ளன.
அவைகள்,
* சட்டத்தின் முன் அனைவரும் சமம்
* சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை
* சட்டம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது
* சட்டத்தின் ஆட்சியானது நீதிவழங்குவதில் குடிமக்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.சொந்த உறவுகளுக்காகச் சாதகமாக நடப்பது, குறிப்பிட்ட நபருக்குச் சலுகை அளிப்பது நீதித்துறை முறைகேடுகள் ஆகியவற்றை குறைக்கின்றன. இத்துடன் அதிகார, நிர்வாக முறைகேடுகளையும் கட்டுப்படுத்துகின்றன.அரசு நிர்வாகத்தினை ஆளுகை செய்வதுடன் செயல்முறை சட்டங்களும், அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்துகிறது.
நிர்வாகச் சட்டம் என்பது பொதுசட்டத்தில் ஒரு பிரிவு ஆகும். அது அரசாங்கத்திற்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவு குறித்தும் பேசுகிறது. அது சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பைத் தீர்மானிக்கும் உயர்மட்டத்தினர் மற்றும் பகுதியளவு நீதித்துறை அதிகாரம் கொண்டோரை வரையறை செய்கிறது. நிர்வாகச் சட்டமானது முதலாவதாக அதிகாரிகளின் செயல்கள் மற்றும் செயல்முறை ஆகியவற்றையும், நிர்வாக தன்மைக் கொண்ட அமைப்புகளையும் அதற்குரிய கட்டுப்பாடு எந்திரத்திற்குள்ளாக வைக்கப்படும்படியாக செய்வதாகும். இந்தியாவில் நிர்வாகச் சட்டங்கள் வளர்ச்சிப் பெறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்த காரணத்தால் அவற்றை ஒழுங்குப்படுத்த நிர்வாகச் சட்டப் பிரிவு தோன்றியது. இரண்டாவதாக, சட்டங்கள் இயற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. அன்றாடம் மாறிக் கொண்டிருக்கின்ற சமூகத்திற்கு ஏற்ப சட்டங்களை இயற்ற சட்டமன்றங்களுக்கு போதிய நேரம் இருப்பதில்லை . சட்டம் இயற்றுவதற்கான நடைமுறை நீண்டதாகவும், அதிக காலம் எடுத்துக் கொள்ளும்படியாக இருப்பதால், அவ்வாறு உருவாக்கப்பட்ட விதிகள் யாவும் தேவைக்கு பயன்படுத்தும் போது, மாறிவிடுகின்றன.
மூன்றாவதாக, இந்தியாவில் நீதிமன்ற காலதாமதம் நிலவுகிறது. மந்தமான வேகம், அதிக செலவு மற்றும் சிக்கலான நடைமுறைகள் போன்றவை இதன் காரணங்களாகும். இதனால் நீதி பெறுவதற்கான செயல்முறைகள் தாமதமடைகின்றன. ஏற்கனவே வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் விரைவான விசாரணை சாத்தியமற்றதாக உள்ளது. இதனால்தான் நிர்வாகத் தீர்பாயங்கள் உருவாகின்றன. நான்காவதாக, நிர்வாகச் சட்டங்கள் என்பவை தொகுக்கப்பட்டவைகள் (Codified) அல்ல. எனவே, அரசு இயந்திரத்தின் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்ளும் செயற்பரப்பைக் கொண்டுள்ளன. எனவே, இது மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கொண்டதாகும். நெகிழ்வற்ற திடமான சட்ட நடைமுறைகளை மீண்டும் மீண்டும் பின்பற்றத் தேவை இல்லை.
அரசமைப்பு என்பது இந்த மண்ணின் மேம்பட்ட உயர்வான சட்டமாகும். எந்த ஒரு சட்டமும் அரசமைப்பிற்கு மேலானது இல்லை. எனவே இதர சட்டங்கள் அதன் உறுப்புக்களை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். அதனை மீறும்படியாக இருக்கக்கூடாது. எனவே நிர்வாகச் சட்டங்களும் அரசமைப்பிற்குக் கீழான சட்டமே ஆகும். அரசமைப்பானது அரசின் அமைப்பு (Structure) மற்றும் அதன் பல்வேறு உறுப்புகளைப் பற்றிப் பேசுகிறது. நிர்வாகச் சட்டங்கள் என்பவை நிர்வாகத்தைப்பற்றி மட்டுமே செயலாற்றுகிறது (Deals). நிர்வாக அதிகாரிகள் முதலில் அரசமைப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுடன் தொடர்ந்து நிர்வாகச் சட்டங்களின்படி பணியாற்ற வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் என்பது இந்தியாவின் குற்றவியல் சட்டமாகும். அது குற்றவியல் சட்டத்தின் உள்ளார்ந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்டமாகும். 1834-ஆம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் 1860ஆம் ஆண்டு இச்சட்டம் தயாரிக்கப்பட்டது. இது தொடக்கக்கால பிரிட்டிஷ் இந்திய ஆட்சியின் கீழ் 1862-ல் அமலுக்கு வந்தது. இதன் நோக்கம் இந்தியாவிற்கு ஒரு பொதுத் தண்டனைச் சட்டத் தொகுப்பை அளிப்பதாகும்.
இந்திய தண்டனைச் சட்டம் ஒரு அடிப்படையான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து குற்றங்களுக்கான வழக்குகள், அவற்றுக்கான தண்டனைகள் ஆகியனவற்றின் பட்டியல் கொண்ட ஆவணமாகும். இது அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கியது. இராணுவத்தினர் மற்றும் இதர படைகளின் வீரர்களை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க முடியாது. அவர்களுக்கு பல்வேறு தனி விதிகள் உள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பியல்பானது, இந்திய தண்டனைச் சட்டம் உயர்நிலையில் இருக்கக்கூடிய எந்த ஒரு நபருக்கும் சிறப்பு சலுகை அளிக்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டம் ஒவ்வொரு அரசு ஊழியர், மற்றும் பொதுமக்கள் ஏன் நீதிபதியைக்கூட உள்ளடக்குவதாக இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.